எழுவர் விடுதலை ! பா.ஜ.கவை அணுகவேண்டிய அவசியம் கிடையாது ! அற்புதம்மாள் விசனம்

0

ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே பெற்றுத்தரவேண்டும் என்றும், பா.ஜ.க.வை அணுகவேண்டிய அவசியம் கிடையாது என்றும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

திருவாவூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலார்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,

“ஏழு பேரின் விடுதலைக்காக தமிழக அரசே நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் பா.ஜ.கவை அணுகவேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. நீதிமன்றத் தீர்ப்பை ஏன் ஆளுநர் மதிக்கவில்லை என்பதால்தான் இந்த மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் இடம்பெறுகிறது.

உங்கள் மகனை உங்களிடம் ஒப்படைப்பேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளார். இது அனைவருக்கும் தெரியும். அதை புரிந்தவர்கள், இப்பொழுது அரசியலில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றுவரும் முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வழியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதமாள் ஒவ்வொரு மாவட்டமாக ஊர்வலமாக சென்று கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.