கருணாநிதியிடம் அவர் சொன்ன அந்த வார்த்தை….. – ஸ்டாலின் பாராட்டால் மேடையிலேயே அழுத வைகோ!

0

கருணாநிதியின் கையைப் பிடித்து வைகோ சொன்ன வார்த்தையை மு.க.ஸ்டாலின் விளக்க, அருகில் இருந்த ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ மேடையிலேயே கண்ணீர் விட்டு நெகிழ்ந்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றது. 

ஸ்டாலின் - வைகோ

ம.தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, தமிழேந்தல் தலைவர் கலைஞர் புகழ் போற்றும் விழா மற்றும் ம.தி.மு.க.,வை சட்டப்பிரிவுச் செயலாளர் வழக்குரைஞர் வீரபாண்டியன் எழுதிய,  `தமிழின் தொன்மையும் சீர்மையும் – கலைஞர் உரை” எனும் புத்தக வெளியீட்டு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று மாலை நடந்தது. திருச்சி ம.தி.மு.க., மாவட்டப் பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ம.தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர். கருணாநிதியின் உருவப்படத்தை மேடையில் வைகோ சகிதமாக தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்ததுடன் `தமிழின் தொன்மையும் சீர்மையும் – கலைஞர் உரை’ எனும் புத்தகத்தை வெளியிட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். மேலும், அந்தப் புத்தகம்  கலைஞர் உரை தொகுப்பு என்பதால் ம.தி.மு.க., சார்பில் தி.மு.க.வின் அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் வழங்குவதாக வழக்கறிஞர் வீரபாண்டியன் மேடையிலேயே வழங்கினார். 

ஸ்டாலின்

மேடையில் வைகோ, “ஆரியப்பகை சூழ்ந்து வரும்போது கரிகால் பெருவளத்தான் வீறுகொண்டு எழுந்து வீழ்த்தியதைப் போல, சூழ்ந்து வரும் சனாதன பயங்கரவாதத்தில் இருந்து தமிழ்நாட்டைக் காக்க, திராவிட இயக்கத்தைக் காக்க, இனத்தை, பண்பாட்டைக் காக்க இளைஞர்கள் வீறுகொண்டு வர வேண்டும் என்று இந்தப் புத்தகத்தில் அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது. மிசா காலகட்டத்தில் ஸ்டாலின் சிறையில் பட்ட கஷ்டங்களை வார்த்தைகளில் சொல்ல முடியாது. அப்போது கருணாநிதி ரத்தக்கண்ணீர் சிந்தினார். இதே திருச்சியில் மாணவ தலைவராக இருந்த எனக்கு அன்பிலார் மேடை அமைத்துக் கொடுக்க எனக்கு வாழ்க்கை தந்தவர் அவர். என் அரசியல் வாழ்வின் அரிச்சுவடி அவர். அந்த அண்ணன் கருணாநிதி சொல்வதுபோல், தனக்குப் பின்னால் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்தை வழிகாட்டுவார். என்னிடம் இல்லாத பல திறமைகள் அவரிடம் உள்ளது என்றும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளது. இதை நான் வழிமொழிகிறேன்’’ என்றார்.

பொதுக்கூட்டம்

கடைசியாகச் சிறப்புரை ஆற்றிய ஸ்டாலின், “இந்த விழாவில் கலந்துகொள்வதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். ம.தி.மு.க., சார்பில் கலைஞருக்கு விழாவா? வைகோவுக்கு அருகில் ஸ்டாலினா? என்று சிலருக்கு சந்தேகம் வரலாம். இல்லை இல்லை பொறாமை. திராவிட இயக்கத்தினர் ஒன்று சேர்ந்தால் ஒரு சிலருக்கு எரிச்சல். கழக உடன் பிறப்புகளால் தளபதி என அழைக்கப்பட்டவன் நான், தலைவர் கலைஞரால் போர்வாள் என்றிழைக்கப்பட்டவர் வைகோ. இந்த விழாவின் அழைப்பிதழில், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே எனும் பாவேந்தர் வரிகளை அண்ணன் வைகோ பயன்படுத்தி உள்ளார். உண்மைதான் இந்த தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தைக் காப்பதற்காக இணைந்துள்ளோம்” என்றார்.

வைகோ

தலைவர் கலைஞர் வயது முதிர்ந்த நிலையில் கோபாலபுரம் வீட்டில் சிலவருடங்கள் ஓய்வெடுத்த வந்த நிலையில், அவரைச் சந்தித்த வைகோ, கலைஞரின் கையைப் பிடித்து, உங்களுக்கு இருந்தது போல் ஸ்டாலினுக்கும் துணையாக இருப்பேன் என்றார் அந்த வார்த்தைகளை நான் எப்போதும் மறவேன். கடந்த 30 வருடங்களாகத் தமிழ்நாட்டு நலனுக்காக ஸ்டெர்லைட், முல்லைப் பெரியாறு எனப் பல போராட்டங்களை முன்னின்று நடத்திய வைகோவின் போராட்டங்களுக்கு துணை நிற்போம். தலைவர் கலைஞர் சொன்ன வார்த்தைகளை வைகோ மீறியதே இல்லை. குறிப்பாக பொடாவில் வைகோ இருந்தபோது வைகோவின் கைகளைப் பிடித்துக் கலங்கியபடி பிணையில் வெளியே வா, உடலை வருத்திக்கொள்ளாதே எனக் கூறினார். அதனையடுத்துதான் வைகோ சிறையில் இருந்து வெளியே வந்தார். வைகோ பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்தபோது கூட்டணி பேச நான் அவரைச் சந்தித்தேன். இப்போதும் கூட்டணி பத்திரத்தில் சீக்கிரம் கையெழுத்திடுங்கள் என்று சொல்ல வந்துள்ளேன். 

பொடா சிறையிலிருந்து ஜாமீனில் வந்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார்.  40 இடங்களிலும் வெற்றி பெற்றோம். அதேபோல் வர உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் 40-க்கும் 40 தொகுதிகளைப் பெற புயல்வேகப் பயணத்துக்கு வைகோ தயாராகி விட்டார். மத பயங்கரவாதத்தை முறியடிக்கத் தளபதிகளும் போர்வாள்களும் ஒன்று சேருவோம்’’ என்று முடித்தார். கருணாநிதி குறித்து மு.க.ஸ்டாலின் பேசியபோது வைகோ மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். மேடை முழுக்க உணர்ச்சிமயமாக இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.