காஷ்மீரில் என்ன நடக்கிறது? ஒரு அனுபவ குறிப்பு! அய்யனார்

0

#காஷ்மீர்
சம காலத்தில் நடந்த விடுதலை போராட்டங்களில் ஈழ விடுதலை போராட்டமும் காஷ்மீர் விடுதலை போராட்டமும் முதன்மையானது, ஆதலால் நீண்ட காலமாகவே காஷ்மீரை பார்க்க வேண்டும் என்ற திட்டம்…

நண்பர்களின் பயமுறுத்தலுக்கு பிறகும் 18.01.19 அன்று கடுமையான சோதனைகளுக்கு பிறகு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து வெளியேரியதும் முதல் இடியாக எனக்கு இருந்தது பாதுகாப்பு காரணங்களுக்காக வெளி மாநில ப்ரீ பைய்ட் சிம் கார்டுகள் இங்கு வேலை செய்யாது என்பது தான்..

ஸ்ரீநகரின் ஒவ்வொரு தெருவிலும் CRPF வீரர்களின் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.. ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு ராணுவ வீரர் என்ற விகிதத்தில் இந்தியாவில் வேறு எங்கும் பார்க்க முடியாத காட்சிகளை பார்க்கும் போது நம்மை அறியாமல் ஒரு அச்ச உணர்வு தொற்றிக்கொள்கிறது..

உண்மையில் நான் காஷ்மீர் பற்றி மனதில் நினைத்திருந்தது காஷ்மீர் ஒரு வளமான பூமி, மக்கள் தொகை குறைந்த பகுதி, இந்திய அரசின் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலம், இந்தியா காஷ்மீரை தக்க வைத்துகொள்ள அம்மக்களுக்கு நிறைய சலுகைகளை வாரி வழங்கி உள்ளது, ஆதலால் காஷ்மீர் மக்கள் நிறைவான செழிப்பான இன்பமான வாழ்க்கை வாழும் மக்கள், இவர்கள் ஏன் தேவையற்று போராட்டம், வன்முறை என்று இருக்கிறார்கள் என்று தான் நினைத்திருந்தேன்..

ஆனால் அங்கு நிலமை வேறு.. அவர்களின் வாழ்க்கை முறை கற்காலத்தை நினைவு படுத்துகிறது. இருபது, முப்பது ஆண்டுகள் பின்னோக்கி இருக்கிறார்கள். காஷ்மீர் மாநிலத்தின் பெரிய நகரம் ஸ்ரீநகர் ஆனால் இரவு ஏழு மணிக்கெல்லாம் ஆள் நடமாட்டம் அற்று நகரம் முழுவதும் ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டில் வெறிச்சோடி காணப்படுகிறது..

கூட்டம் நிரம்பி வழியும் ஸ்ரீநகர் விமான நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட சிறியது. மாநிலம் முழுவதும் பல ஆண்டுகளாக போடப்படாத சாலைகள், எனது பல மைல் தூர பயணத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு பேருந்துகள் என கண்ணுக்கே பெரிதாக அகப்படவில்லை.. வாகன நெரிசலற்ற சாலைகளில் அதிக அளவில் உள்ள வாகனம் தற்போழுது உற்பத்தி நிறுத்தப்பட்ட பழைய மாருதி 800 கார்கள் தான்… இதிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம் அம்மாநிலதின் வளர்ச்சி, வாழ்வாதாரத்தை… 
(அங்கு ஆறுதல் தரும் விடயம் உலகமயமாக்கல் ஆட்கொள்ளாத மாநிலம்,தற்சார்பு வாழ்க்கை முறை)

ஸ்ரீநகரின் நிலைமைதான் மோசம் என்றால் கிராமங்களில் படுமோசம்.. ஒரு சில சுற்றுலா தலங்களை தவிர்த்து பெரும்பான்மையானா இடங்கள் கல்வி தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு, வளர்ச்சி, கேளிக்கை, கொண்டாட்டம் இப்படி எதுவுமே இல்லாமல் பழங்கால வாழ்க்கை முறையில் இன்னுமும் வாழ்கிறார்கள். உண்மையில் சொன்னால் மனிதனை மனிதனே சுமந்து செல்லும் கூலி பஞ்ச பராரிகளாகதான் இருக்கிறார்கள்..

விவசாயம்(வருடத்தில் 6 மாதம் மட்டுமே), குதிரை வளர்ப்பு, சுற்றுலா வாசிகளை சுமந்து செல்லுதல், நெசவு, இப்படி அவர்களின் வாழ்வாதாரம் குறுகியதாகவும், வெளியுலகம் அதிகம் அறியாதவர்களாகவும் உள்ளனர்.
பெரும்பாலான ஆண்கள் வீதிகளில் வேலை இல்லாமல் கிடக்கிறார்கள். பெண்கள் வீடுகளில் அடைந்து கிடக்கிறார்கள், அவர்களின் மதத்தை அவர்கள் தீவிரமாக நேசிக்கிறார்கள், பொருளாதார வளர்ச்சி அடைந்தவர்கள் சிறு பகுதியினர் மட்டுமே. இந்திய மாநிலங்களில் இருந்து காஷ்மீரிகளின் வாழ்வியல் முறை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளதால் மற்ற மாநிலத்து மக்களை அவர்கள் வெளிநாட்டினர் போல தான் கருதுகிறார்கள்..

21.01.19 அன்று காரில் குல்மர்க் பகுதியில் இருந்து ஜம்மு_ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஹல்காம் சென்று கொண்டு இருந்தேன், அந்த மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு தேசிய நெடுஞ்சாலை, ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு ராணுவ வீரர், இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு சோதனை சாவடி, புகைப்படம் எடுக்க கூட தடை, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வயல் வெளிகளில் கூட CRPF வீரர்கள் ரோந்து, ஆதார் அட்டை சரிபார்ப்பு, எங்கு இருந்து வருகிறீர்கள் எங்கு செல்கிறீர்கள் என்று விசாரணை, கார் முழுவதும் ஒரு பை விடாமல் உள்ளாடை முதற்கொண்டு பலகட்ட சோதனை என்று கடுமையான பல அடுக்கு பாதுகாப்பு வளையம் தாண்டி செல்லும் வழியில் அவந்திபோராவில் (நேற்று தாக்குதல் நடந்த அதே ஊர்) நிறுத்தி dry fruits கடைகளுக்கு சென்றேன்.. அங்கு ஒருவரிடம் கேட்டேன் இந்த நெடுஞ்சாலையில் மட்டும் ஏன் இவ்வளவு பாதுகாப்பு வளைய சோதனை என்று, ஜம்மு_ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இடப்பெயர்வு கான்வாய்கள் அதிகமாக செல்லும் அதனால் எப்போதும் இந்த சாலை பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என்றார். (காலியாக செல்லும் வாகனத்தை கூட பல முறை அங்காங்கே சோதனை செய்யும் சாலையில் 350 கிலோ வெடிமருந்தை ஏற்றி வந்த வாகனம் சோதனைகளை தாண்டி சென்றது எப்படி என்று இந்த நிமிடம் வரை என்னால் நம்ப முடியவில்லை. ஒன்று உளவு துறை தோல்வி அல்லது உளவு துறை பலவீனம்)

அங்கு அந்த நேரத்தில் என்னுடைய மனதில் தோன்றியது ஒன்று தான்.. இப்படி துப்பாக்கி முனைகளுக்கு மத்தியில் ஒவ்வொரு நாளும் இங்கு தோட்டாக்களுக்கு அடிமையாக வாழ்வது ஓரு வாழ்க்கையா… இதே போல் தான் அங்கு வாழும் காஷ்மீரீகள் பெரும்பாலும் நினைக்கிறார்கள், நம் வீட்டு வாசலில் ராணுவம் நின்றுகொண்டு நம்மை கண்காணித்தால் அதன் வலி நமக்கு புரியும். நான் அவர்களிடம் கேட்டு அறிந்தவரை அங்கு வாழும் மக்கள்.. ஐந்து சதவீதம் பாகிஸ்தான் ஆதரவு நிலையும், ஐந்து சதவீதம் இந்தியா ஆதரவு நிலையும், 90 சதவீதம் தனிநாடு நிலையுடனும் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலான மக்கள் இந்திய ராணுவத்திற்க்கு எதிராக நிற்கிறார்கள்

ஏன் பெரும்பான்மையான மக்கள் ராணுவத்திற்கு எதிராக நிற்கிறார்கள் என்ற கேள்வியில் தொடர்கிறது காஷ்மீர் பிரச்சனை…

மக்களுக்காகதான் ராணுவம், ஆனால் இந்திய அரசு ராணுவத்திற்க்கு செலவிடும் தொகைக்கு சம அளவு அம்மாநில மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், உள்கட்டமைப்பு, பொருளாதாரம் ஆகியவற்றை உயர்த்த செலவிட்டு இருக்கலாம்..

அம்மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்தாமல், இந்தியா நமக்கு சம உரிமை தரும் என்ற எண்ணத்தை அம்மக்களிடம் ஏற்படுத்தாமல் அவர்களின் தனி நாடு கோரிக்கையை எப்படி தவிர்க்க போகிறது இந்தியா..

பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் மக்களை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் மூலை சலவை செய்து இந்தியாவுக்கு எதிராக உயிரிழப்புகள் ஏற்படுவதை எப்படி தடுக்க போகிறது இந்தியா…

ஐம்பது ஆண்டுகளை கடந்தும் அம்மக்களின் உள்ளங்களை இந்தியா வெல்லாமல் எவ்வளவு ஆண்டுகள் ராணுவ முனையில் காஷ்மீரை தக்கவைக்க போகிறது இந்தியா..

எந்த ஒரு மாற்று திட்டமும் இல்லாமல் வெறும் ராணுவ தீர்வை மட்டுமே வைத்து காஷ்மீர் பிரச்சனையை எப்படி தீர்க்க போகிறது இந்தியா…

இந்திய இறையாண்மை, பாகிஸ்தான் சதி என்று மட்டுமே காஷ்மீர் பிரச்சனையை சொந்த நாட்டு மக்களின் பிரச்சனையாக அணுகாமல், காஷ்மீர் வரலாற்றை அறியாமல் தேசபக்தியாக மட்டுமே பார்ப்பது காஷ்மீர் இன்னொரு ஈழமாக உருவாகுமே தவிர தீர்வு கிடைக்க போவதில்லை..

ஆனால் உண்மையில் இந்தியா_ பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே அரசியல் ரீதியாக காஷ்மீரை பயன்படுத்திக் கொண்டனவே தவிர அம்மக்களின் உரிமைகளை, கோரிக்கைகளை மதிக்கத் தயாராக இல்லை…

பாகிஸ்தான்_ இந்தியா இரண்டு அரசுகளும் விளையாடும் இந்த தேச பக்தி என்ற சித்து விளையாட்டில் செத்து மடிவது அப்பாவி ராணுவ வீரர்களும் காஷ்மீர் மக்களும்தானே ஒழிய.. தேச பக்தி நாடகம் நடத்தும் அரசியல்வாதிகள் அல்ல..

நன்றி…
Ayyappan P K R …

Leave A Reply

Your email address will not be published.