பொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு தெரிவித்த கிட்டு ! கொள்கை வீரன் !

0

இந்திய உளவுத்துறை ரா (RAW) வுக்கு
தண்ணி காட்டிய தளபதி கிட்டண்ணை..!!!


கிட்டண்ணை பற்றியும், அவரது வீரம், ஆளுமை, போராட்ட குணம் எல்லாவற்றையும் கேள்விப் பட்டிருப்போம். அவர் சம்பந்தமான பல கட்டுரைகள் படித்திருப்போம், கானொளிகளிலும் பாத்திருப்போம்.

அனால், அவரது இறுதி நாள் பற்றி அறிந்தவர் குறைவாகவே இருக்கும் என்றே நம்புகின்றேன். அந்த கணங்களை உங்களோடு பகிர விரும்புகின்றேன்.எனக்கும் கிட்டண்ணைக்குமான சந்திப்பு
மணலாற்றுக் காட்டில் இடம் பெற்றது.

அவர் காடு வந்த, சிறிது காலத்திலேயே, நான் யாழ் நோக்கி பணி நிமித்தம் சென்றமையால், அவருடன் நீண்ட நாட்கள் பழக முடியவில்லை. இரண்டாவது முறையாக நான், அவரை சந்திக்கும் போது, நான் யாழில் காயமடைந்து காட்டுக்கு வந்திருந்தேன்.

அப்போது ஓய்வில் இருந்தபடியால், நான் கூடிய நேரத்தை கிட்டண்ணை, சங்கரண்ணை போன்றோருடன் செலவழிப்பதே வழமை. நான் இளையபோராளி என்பதால், அவர்களது சண்டை அனுபவங்களை கேட்டபடி இருப்பேன்.

அந்த நேரங்களில், நான் யாழிலிருந்து வந்திருந்தமையால், யாழ் நிலவரம் பற்றி துருவித், துருவி என்னிடம் கேட்பார். அப்போதெல்லாம் யாழை நினைத்து, அவரது ஏக்கம் அவரில் தெரியும். அவர் யாழ் மக்களின் வாழ்வியலில் ஒன்றியிருந்தார்.

1980களில் யாழ்பாணத்தில், சிங்கள இராணுவத்தை சில நூறு போராளிகளை வைத்து, முகாமினுள் முடக்கிய பெரும் வீரனல்லவா எங்கள் கிட்டண்ணா.!

ஒரு கால் இழந்த பின்னும் அவர் ஓயவில்லை. இந்தியச் சிறையிலிருந்து விடுதலையாகி மனலாற்றுக்காட்டிற்கு வந்த பின், போராளிகளின் முகாமில், இரவு நேரங்களில் திடீரென விசில் சத்தம் கேட்கும்.

உடனே எல்லோரும் ஓடிச்சென்று நிலை எடுக்க வேண்டும். இது பயிற்சி ஒத்திகை தான். அனால், அது பகலிலும் தொடரும். அத்தோடு சிறப்பு பியிற்சிகளும் நடக்கும். போராளிகள் சும்மா இருப்பதை கண்டால், உடனே கிட்டண்ணையின் விசில் சத்தம் கேட்கும்.

அதனாலேயே கிட்டண்ணையை கண்டால் இளைய போராளிகள் ஏதாவது வேலை செய்வது போல பாவனை செய்வார்கள், அல்லது அவரது கண்ணில் தட்டுப்படாது சென்று, வருவார்கள். இதை பார்த்து கிட்டண்ண புன்னகைப்பார்.

இந்த நேரங்களில் என்னை பார்த்து சங்கரண்ணை அடி கடி சொல்லுவார் “காயப்பட்டதால நீ தப்பிற்றாய், இன்னும் எவ்வளவு நாளைக்கு பாப்பம்” என்பார். அது தான் உண்மையும்.

நானும் இரவு சென்றி பார்க்கும் கள்ளத்திலும், கிட்டண்ணைக்கு பயத்திலையும் கொஞ்சம் ஏலாதது போல நடிப்பேன், அதிலையும் ஒரு சந்தோசம் அந்த நேரத்தில்.
இனிமையான பொழுதுகள் அவை.!

அப்போதெல்லாம் அண்ணை, சங்கரண்ணைக்கு சொல்லுவார் ஆமிய பாத்து ஓடாத பெடியள், கிட்டண்ணை பாத்து ஓடுறாங்கள் என்பார். எல்லோரும் சிரிப்பார்கள்

அது தான் அண்ணையின் மறுபக்கம். முக்கியமான நேரங்கள் தவிர. மற்றைய நேரங்களில் அண்ணையின் நக்கல் நையாண்டிகளுக்கு அளவே இருக்காது.
அண்ணையின் நகைச்சுவை உணர்வு, கூட இருந்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.

இந்த நேரத்தில் சிங்கள அரசோடு பேச்சு வாத்தை நடந்து, ஒரு புரிதல் வந்த நேரம்,தேசத்தின் கடமையின் நிமித்தம், கிட்டண்ணை கொழும்பு சென்று, அங்கிருந்து லண்டன் செல்ல ஆயத்தமானார்.

எல்லோர் மனங்களிலும் ஒரு இறுக்கம். அதை முதலில் உடைத்தது கிட்டண்ணை தான். கிட்டண்ணை, அண்ணையை அணைத்த படி கண்ணீர் விட்டார்.

அடுத்த நாள் எல்லோரது கண்ணீருடனும், கிட்டண்ணையும் அழுத படியே லண்டன் நோக்கி பயணமானார். அதை பார்த்த போது இயக்கம் என்பதையும் தண்டி ஒரு குடும்பம் போல உணர்ந்தோம்.!

கிட்டண்ணை லண்டன் சென்று புதிய நிர்வாகங்களை அமைத்து, சீர் செய்து கொண்டிருந்த காலங்களில், இந்திய ரா உளவுத்துறையாள் (raw) தொடர்பெடுக்கப்பட்டார்.

நயவஞ்சகமாக இயக்கத்துக்கும், அண்ணைக்கும் எதிராக அவரை திசை திருப்பும் முயற்சியை ஆரம்பித்தது. அதன்படி லண்டனில் வைத்து கிட்டண்ணை, அடிக்கடி ராவினால் சந்திக்க பட்டு,அவரது மனதை மாற்ற முயற்சி செய்ய பட்டது.

நிலைமையை உணர்ந்த கிட்டண்ணை, விட்டு பிடிக்க நினைத்தார். சில காலங்களின் பின் குறித்த நாளில் வரும்படியும், தனது முடிவை அன்று கூறுவதாகக் கூறி அந்த அதிகாரிகளை கழட்டி விட்டார்.

அன்றே இது பற்றி அண்ணையிடம் கூறி, முடிவு எடுக்கபட்டது. அதன்படி சில நாட்கள் இழுத்தடித்த பின் ஒரு நாள் வந்த ரா அதிகாரிகளுக்கு சம்மதம் தெரிவித்தார்.

அதன் பின் கிட்டண்ணைக்கு மாதம் மாதம் பெரும் தொகை பணம், ரோவால், செலவுக்கென்று கொடுக்கப் பட்டது. (உளவாளிகளுக்கு பணம் கொடுப்பது உளவு வலையமைப்பில் சாதாரண நிகழ்வு)

கிட்டண்ணையும் அந்த பணத்தில் தனது செலவு போக , மிகுதியை வெளிநாடுகளில் மக்களிடம் சேர்க்கும் பணத்துடன் ஆயுதம் வாங்க அனுப்பி விடுவார்.இப்படி பெரும் தொகையை அவர்களிடம் கறந்துவிட்டார்.

இப்படி அவர் வீரச்சாவடையும் வரை ரா வுக்கு கயிறு விட்டுக் கொண்டிருந்தார்.1991இல் ராஜீவ் காந்தி மரணத்தின் பின் கிட்டண்ணையை தொடர்பு கொண்ட ரா அமைப்பு அதில் புலிகளுடனான பங்கு பற்றி கேட்டிருந்தது.

அதற்கு கிட்டண்ணை தனக்கு தெரிந்த வரை அதை புலிகள் செய்யவில்லை என்று அடித்து கூறியிருந்தார். உண்மையில் அந்த நேரத்தில் இது பற்றி கிட்டண்ணை அறிந்திருக்கவில்லை.

இதை ராவினர் அவர்கள் மேலிடத்திற்கு தெரிய படுத்தியிருந்தார்கள். ஆனால் அந்த விசாரணையில் ஈடுபட்டிருந்த இன்னொரு உளவமைப்பான IB, சில ஆதாரங்களையும் திரட்டி புலிகளையே குற்றம் சாட்டி இருந்தது.

அதன் பின் விழித்துக் கொண்ட ரா, கிட்டண்ணையை ஒரு வித கடுப்பில், அவரை சந்தேக வட்டத்துக்குள் கொண்டு வந்தது. அவரை லண்டனில் தொடர் கண்கானிப்பினுள் வைத்திருந்தது.

இதன் பின் கிட்டண்ணையின் நடமாட்டம் அவதானிக்கபட்டு, ரா வினால், பின் தொடரப்பட்டார். இதை கிட்டண்ணையும் நன்கு அறிந்திருந்தார்.

1992இன் இறுதிப்பகுதியில் தனது பொறுப்புகளை தான் தெரிவு செய்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு, தாயகம் நோக்கி செல்ல ஏற்பாடு செய்தார்.

புலிகளின் ஆயுதக்கப்பலில் பயணப்படவேண்டி இருந்தமையால், இந்திய உளவுத்துறைக்கு தெரியாது, பயணப்பட வேண்டிய தேவை எழுந்தது. அதனால், தன்னை கண்காணிக்கும் ராவுக்கு, தண்ணி காட்ட முடிவெடுத்தார்.

அதன் படி KP என்று அழைக்கப்படும் புலிகளின் நிழல் உலகை அன்றைய நேரத்தில், கைகளில் வைத்திருந்த, குமரன் பத்மநாதனிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

அதனைத்தொடந்து ரகசிய நடவடிக்கை வேகம் பெற்றது. ராவின் கண்காணிப்பை உடைக்கும் முகமாக, குறிப்பிட்ட திகதி, நேரத்திற்கு சிங்கபூருக்கு பயணசீட்டொன்று, கிட்டண்ணையால் அவரது பெயரில் போடப்பட்டது.

அது உடனே ராவுக்கு தெரிய வந்தது. அதைத் தான் கிட்டண்ணையும், KP யும் எதிர்பார்த்தார்கள். அந்த நாளுக்கு முதல் நாள், KP யாள், சுவிசுக்கு போடப்பட்ட , இன்னொரு பயண அனுமதியுடன் ராவிற்கு கயிறு கொடுத்துவிட்டு, கிட்டண்ணை சுவிஸ் சென்று, அங்கிருந்து KP யின் ஒழுங்கில் போலந்து சென்றார்.

அங்கு சில நாட்களின் பின், கிட்டண்ணையை சந்தித்த KP, அங்கிருந்து உக்றேனுக்கு கொண்டு சென்று, அங்கு சில நாள் இருந்தபின், தாய்லாந்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து தாயகம் செல்ல தயாராக இருந்த, புலிகளின் M.V.அகத் என்ற கப்பலில், கடலில் வைத்து ஏற்றிவிடப்பட்டார்.

இங்கு லண்டனில் ரா தலையை உடைத்துக் கொண்டிருந்தது. கிட்டண்ணை மாயமானதை ஜீரணிக்க முடியாது இந்திய உளவாளிகள் கிட்டண்ணையை தேடிக்கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில் கிட்டண்ணையின் தாயகம் நோக்கிய பயணம் பற்றி மாத்தையாவாள் ராவுக்கு கூறப்பட்டது. யாருக்கும் பயணத்திகதி தெரிந்திருக்கவில்லை.

இந்த நேரத்தில், சர்வதேசக்கடலில் கண்காணிப்பிலிருந்த, இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கி கப்பலொன்று, தற்செயளாக, இவர்களது கப்பலின் தொலைதொடர்பு உரையாடலை, ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தது.

இந்தத் தகவல், உடனேயே ராவுக்கு பரிமாறப்பட்டது. உடனே அவர்கள் அந்த நேரத்தில் தொடர்பில் இருந்த, மாத்தையாவிடம் கிட்டண்ணை பயணம் பற்றிய தகவலை, உறுதிப்படுத்தும்படி ராவால் கேட்கப்பட்டது.(அந்த நேரத்தில் மாத்தையா ராவின் கையாள்)

அடுத்த நாள், மாத்தையாவினால் அவருக்கு விசுவாசமாக மாற்றப்பட்டிருந்த, அண்ணையின் தொலைத் தொடர்பாளன் முருகன் என்பவன் ஊடாக, கிட்டண்ணையின் பயணம் அறிந்து, ராவுக்கு உறுதிப்படுத்தப்டது.(மாத்தையாவின் கைதின் போது முருகனுக்கும் மரண தண்டனை வழங்கப் பட்டது)

கிட்டண்ணையின் பயணம் உறுதிப்படுத்தப்பட்டதும், இந்தியக் கடலில், வலை விரித்து காத்திருந்தது இந்திய பாசிசம். 10/01/1993 அன்று இந்திய கடற்படையின் கதுவி(radar) இவர்களது கப்பலை இனம் கண்டது.

அவர்களது கப்பல் சர்வதேச கடலில் இருந்தமையால் இந்தியகடலினுள் வரும் வரை காத்திருந்து, புலிகளின் M.V.அகத் என்னும் கப்பல், இந்தியக்கடற்படையால் 14/01/1993அன்று சுற்றிவளைக்கப் பட்டது.

அதிலிருந்த கிட்டண்ணையிடம், தொடர்பெடுத்த இந்திய கற்படை அதிகாரி, கப்பலுடன் சரணடையும் படி கூறினார். அதற்கு கிட்டண்ணை மறுத்திருந்தார்.

அப்படியே கப்பலையும் கொஞ்சம் கொஞ்சமாக எமது எல்லைக்கு நகர்த்தி கொண்டிருந்தார். தொடர்ந்து ஒலிபெருக்கியில், கப்பலுடன் சரணடையும் படி அறிவித்தார்கள். ஆனால் கிட்டண்ணை, தொடர்ந்து அதை மறுத்துவிட்டார்.!

அதைத் தொடந்து, இந்திய கற்படை எச்சரிக்கை வேட்டை தீர்த்த போதும்,இவர்களின் கோரிக்கைக்கு அவர் அசையவில்லை.!

இந்த நேரத்தில்15/01/1993 சிங்கள கடற்படை காட்சிக்குள் நுழைகிறது. இரு அரசுகளும் அவரை உயிரோடு பிடிக்கவே, முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

இங்கு புலத்திலும் எமது தலமைகளினால், இந்திய தமிழ்நாட்டு தொடர்புகள் ஊடாக, கப்பலை விடுவிக்க முயற்சி செய்யப்பட்டது. அது பலனளிக்காது போனமையால், எமது கடற்படையைக் கொண்டு, ஒரு தாக்குதல் மூலமாக, ஒரு மீட்பு நடவடிக்கை செய்யவும் ஆராயபட்டது.

அதவும் சில இராஜதந்திர காரணங்களால் கைவிட பட்டது.15ம் திகதி தனது நீண்டகால நண்பன் என்றரீதியில், பொட்டு அம்மானுடன் கிட்டண்ணை உரையாடினார்.

ஏனெனில்1980களின் ஆரம்ப காலங்களில், இருவரும் ஒன்றாகவே திரிந்து போராட்டத்தை வளர்த்தவர்கள். இதனால் அலாதியான நட்பு இருவற்குள்ளும் இருந்தது. அதை நான் இருவரையும் சேர்த்து பாக்கும் போது பல தடவை காண முடிந்தது.

அண்ணையைப்போல அம்மானையும் அவர் நேசித்தார். அதே போல் லண்டன் போன பின்பும் அது தொடர்ந்தது.லண்டனில் இருந்த போதும் அம்மானுக்கு கடிதம் அனுப்பவும் அவர் தவறியதில்லை

அவர்களது நட்பின் முடிவுரை எழுதும் நாளும் வந்தது.!

அம்மான் கிட்டண்ணை மேல் உள்ள அன்பினாலும், அவர் மூலம் எமது அமைப்புக்கு, தொடந்து வழிகாட்டலுக்கான சேவை, கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்தார்.

நட்பினால் உந்தப்பட்ட அம்மான், கிட்டண்ணையை சரணடையும் படியும், சரணடைந்தால் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை ஊடாக(கிட்டண்ணை இதற்கு முன்னும் இந்திய அரசால் கைது செய்யப்பட்டு விடுவிக்க பட்டவர்) மீண்டும் நாடு திரும்ப முடியும் என்று கூறினார்.

அதற்கு பதில் கிட்டண்ணையிடம் இருந்து, கடும் தொனியில் கண்டனத்துடன் கூடிய மறுப்பே வந்தது.!

அதன் போது அவர் கூறினார், இயக்கத்தை வழிநடத்தும் நாங்களே கையை தூக்கி சரணடைந்தால், சாதாரண போராளிகளும் சரணடைய ஆரம்பித்தால், இயக்கத்தின் கொள்கை அழிந்து போகும்.

நாங்கள் உருவாக்கி கடைப்பிடித்த, கொள்கையை மீறி, அந்த தவறை நான் செய்ய மாட்டேன் என்றார் உறுதியுடன்.!

ஒரு பிழையான முன்னுதாரனமாக நான் ஒரு போதும் இருக்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்த பின், அண்ணையுடனும் தொலைத் தொடர்பில் உரையாடினார்.

பின் 16/01/1993 காலை, கப்பலில் கொண்டு வந்த தளபாடங்களை அழித்த பின், கப்பலில் இருந்த 3 மாலுமகளை (பொதுமக்கள் ) கடலில் குதித்து நீந்திச் சென்று சரணடையும் படி கூறிவிட்டு, கப்பலை வெடிக்க வைத்து, எமது எதிரிகளுக்கு புலிகள் யார் என்பதை தெளிவாக நிருபித்தார்கள் புலிகள்.!

பெரும் தளபதியாக இருந்தபோதும், தனது உயிரைக்காக்க சந்தர்ப்பம் இருந்தும், இயக்க கொள்கையை கைவிடாது, அதன் வழிநின்று, கப்பலுடன் சேர்த்து தங்களையும் அழித்த தளபதி எங்கள் கிட்டண்ணா..!

பெரும் துரோகம் ஒன்றால், நாம் கிட்டண்ணை உட்பட பெரும் வீரர்களை அன்று இழந்தோம்.!

Leave A Reply

Your email address will not be published.