ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு: பிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் மே மாதம் 02 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம், பதினாறாம் சாட்சியங்கள் மேல் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதனடிப்படையில் 16 ஆவது சாட்சியான முன்னாள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.அப்துல்லா மன்றில் ஆஜராகி விளக்கமளித்தார். ஏனைய சாட்சியங்களின் விளக்கங்களை பெறுவதற்காக எதிர்வரும் மே மாதம் 02 ஆம் மற்றும் 03 ஆம் திகதிகளுக்கு வழக்கினை ஒத்திவைப்பதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸடீன் அறிவித்துள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்

சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.