தலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது!! மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்

0

வன்னியில், நித்திகைக்குளக் காடுகளில் புலிகளின் தலைவர் பதுங்கியிருந்ததாக நம்பப்பட்ட பிரதேசத்தில் இந்தியப்படையினர் பாரிய முற்றுகை ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

அந்த முற்றுகை காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரது உணர்வுகள் எவ்வாறு இருந்தன என்பது பற்றி கவிஞர் மு.வே.யோ.வாஞ்சிநாதன் தனது கட்டுரை ஒன்றில் உணர்ச்சிபட எழுதியிருந்தார்.

18.04.2004 அன்று வீரகேசரியில், ‘இந்திய அமைதிகாக்கும் படையின் நித்திகைக்குள முற்றுகையை உடைத்தெறிந்த பிரபாகரன்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த அந்தக் கட்டுரையில் நித்திகைக்குளச் சம்பவங்கள் பற்றி அவர் இவ்வாறு தெரிவிக்கின்றார்:

‘… தலைவர் பிரபாகரனைப் பிடிப்பதற்காகப் போடப்பட்ட எல்லா முற்றுகைகளிலும் நித்திகைக்குளம் முற்றுகைதான் மிகப் பெரிய முற்றுகை. கடல் – தரை-ஆகாயப் படைகள் இணைந்து நடாத்திய முற்றுகை அது. முற்றுகைச் செய்தி றோ’வுக்கு அறிவிக்கப்பட்டதும் ‘ஓ.. பிரபாகரன் தொலைந்தார்.. இனி ஈழப்போராட்டம் முடிந்துவிடும்..’ என்று நினைத்த றோவின் முக்கிய அதிகாரிகள் சிலர் உடனடியாக டில்லியில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டார்கள்.

சென்னை திருவான்மையூரில் வீட்டுக் காவலில் இருந்த புலிகளின் முன்னாள் யாழ் மாவட்டத்தளபதி கேணல் கிட்டுவை ‘றோ’ வும், கியூ (Q-Branch ) அமைப்பின் சில அதிகாரிகளும் நள்ளிரவில் சென்று சந்தித்தார்கள்.

‘உங்கள் தலைவர் நித்திகைக் குளத்தில் மூன்று வலைப்பின்னல் முற்றுகைக்குள் திணறிக்கொண்டிருக்கின்றார். அவர் சில ஆயுதங்களை மட்டும் பத்திரிகையாளர்கள் முன்பாக எம்மிடம் ஒப்படைத்துவிட்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகக் கையெழுத்துப் போடுவதாக இருந்தால் எமது படையினர் உடனடியாக முற்றுகையை நீக்கிவிடுவார்கள். இல்லையேல் 200 தொன்களுக்கு மேல் வெடிபொருட்களை நிரப்பிய பொம்பர்களும், ஹெலிகொப்டாகளும் -முப்பதினாயிரம் படையினரும் புலிகளின் தலைவரையும், அவரைக் காத்துவரும் புலிகளையும், நித்திகைக் குளக் காட்டையும் பதினைந்து நிமிடங்களில் அழித்துச் சாம்பலாக்கிவிடுவார்கள்.’

‘பின்னர் பிரபாகரன் உடலைக்கூட உங்களால் பார்க்கமுடியாது.’

‘நாங்கள் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்களே அவருடன் பேசிச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

கிட்டு இதைக்கேட்டு அதிர்ந்துவிட்டார்.

உடனே வான் அலை ஊடாகத் தலைவர் பிரபாகரனைத் தொடர்புகொண்டார்.இந்தியப் படையினரின் எச்சரிக்கையையும், அவர்கள் தெரிவித்த கருத்துக்களையும் தேசியத்தலைவரிடம் தெரிவித்தார்.அனைத்தையும் நிதானமாகக் கேட்டறிந்த புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது முடிவை வான் அலையில் தெரிவித்தார்.

அவரது குரல் நிதானமாக ஒலித்தது. அது மிகமிக உறுதியாகவும் இருந்தது.

‘சரணடைவதோ, ஆயுதங்களை ஒப்படைப்பதோ அல்லது ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதே – என்கின்ற பேச்சுக்கே இடமில்லை. இயக்கத்தில் வீரமரணமடைந்த ஒவ்வொரு வீரனும் தனது உயிரைக் கொடுத்து வளர்த்த போராட்டம் இது. இதை ஒரு நொடியில் விலையேசி விற்க எனக்கு உரிமையில்லை…. என்னால் முடிந்தால் முற்றுகையை உடைத்தெறிந்து வெளியில் வருவேன். …சிலவேளை இந்த முயற்சியில் நான் இறந்தால் உங்களுக்குள் ஒரு தலைவரைத் தெரிவுசெய்து போராட்டத்தை தொடர்ந்து நடத்துங்கள்… ஓவர்…’

கிட்டுவின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் வான் அலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

புலிகளின் தலைவரது முடிவு ‘றோ’வுக்கும், கியூ பிரஞ்சிற்கும் அறிவிக்கப்பட்டது. ‘றோ’ மூலம் ராஜீவ் காந்திக்கும், இந்தியப் படைத்தளபதிகளுக்கும், இலங்கையின் அமைதிகாக்கும் படைகளுக்கும்செய்தி உடனடியாகப் பறந்து செல்கின்றது.

‘தாக்குதலை தொடங்குங்கள்.. பிரபாகரனைக் கொல்லுங்கள்..’ என்ற உத்தரவு பறக்கின்றது இந்தியப் படைத்துறைத் தலைமையிடம் இருந்து

தொடரும்…

Leave A Reply

Your email address will not be published.