ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்! ஐ.நா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்! மோடிக்கு இடித்துரைத்த சந்திரிகா!

0

போர்க்குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்; மோடியுடனான சந்திப்பின் பின் சந்திரிகா தெரிவிப்பு

“இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதனை இந்தியா ஆதரிக்கும் என்றே எதிர்பார்க்கின்றேன்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சந்திரிகா அம்மையார், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இந்தச் சந்திப்பின் பின்னர் இந்திய ஊடகங்கள் சில, சந்திரிகாவிடம் நேர்காணல் செய்தன. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் வைத்து, போரின்போது இடம்பெற்ற போர்க்குற்ற சம்பவங்கள் தொடர்பில் உண்மையைக் கூறி மறப்போம் மன்னிப்போம் என்று தெரிவித்துள்ள நிலையிலேயே, சந்திரிகா அம்மையாரின் கருத்தும் வெளியாகியுள்ளது.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இலங்கை தொடர்பில் போர்க்குற்றங்களை முதன்மையாகக் கொண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்ட பொறுப்புக் கூறல் விடயத்தை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த முறையும் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக நான் அறிகின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தண்டிக்கப்பட வேண்டும். அதனை ஆட்சியில் உள்ளவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா பெரும்பாலும் ஆதரிக்கும்.

கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்தது.

இலங்கைக்கு எதிராகச் செயற்படவேண்டும் என்று இந்தியா அதனை ஆதரிக்கவில்லை. இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் மத்தியில் நல்ல பெயர் வரவேண்டும் என்பதற்காகவே இந்தியா ஆதரித்தது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.