ரெலோ- ஈ.பி.ஆர்.எல்.எவ் திடீர் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

0

நேற்று (20) இரவு 7.30 மணியளவில் கட்டப்பிராயிலுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் ரெலோ அமைப்பிற்கும், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் ரெலோ சார்பில் அதன் செயலாளர் என்.சிறிகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்ககூடாது என்பதை வலியுறுத்தி தயாரிக்கப்படும் மகஜரில் கையொப்பமிட வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிடம், ரெலோ பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

எனினும், சுரேஷ் பிரேமச்சந்திரன் சில நடைமுறை குறைபாடுகளை சுட்டி காட்டியுள்ளார்.

ரெலோவில் அண்மைக்காலமாக கட்சியின் பொதுக்குழு, அரசியல்குழு என்பன ஒரு முடிவெடுப்பதும், கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கோடீஸ்வரன் ஆகிய எம்.பிக்கள் வேறுவிதமாக செயற்படுவதும் நடந்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டிய சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த மகஜரில் அவர்கள் இருவரும் கையொப்பமிடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ரெலோ தரப்பு , இவ்வாறு செல்வம் அடைக்கல நாதன் கட்சி முடிவுக்கு மீறி செயற்பட்டால் அதிகபட்சமான முடிவை எடுக்கவும் கட்சி தயங்காது, அவர்கள் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா உறுதி அளித்துள்ளார்.

நேற்றை சந்திப்பில், ரெலோவின் முடிவின் மீது முழுமையான நம்பிக்கையை சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளிப்படுத்தவில்லை.

ஆரம்பத்தில், செல்வம் அடைக்கலநாதனை வந்து பேசும்படி வலியுறுத்திய சுரேஷ், பின்னர் ரெலோவின் இரண்டு எம்.பிக்களின் கையொப்பத்தையும் முதலில் பெறும்படியும், அப்படி பெற்றாலே ஏனைய கட்சிகள் நம்பிக்கையுடன் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பார்கள் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.