`வர்மா’ படத்துக்கு இனி பாலா இயக்குநர் இல்லை! தயாரிப்பு நிறுவன அறிக்கையால் திரையுலகம் பரபரப்பு!

0

தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

விக்கிரமின் மகன், துருவ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் படம், `வர்மா’. இந்தப் படத்தை முதல் காப்பி அடிப்படையில் இயக்கித் தர பாலா ஒப்பந்தமாகியிருந்தார். படத்தின் ஃபைனல் வெர்ஷனைப் பார்த்த தயாரிப்பு நிறுவனம், தற்போது வேறோர் இயக்குநரை வைத்து இயக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வர்மா

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளிவந்த தெலுகு படம், `அர்ஜூன் ரெட்டி’. தெலுகு மட்டுமல்லாது, படம் தென்னிந்திய முழுவதுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை கேரளாவை மையமாகக் கொண்ட E4Entertainment நிறுவனத்தின் முகேஷ் R மேத்தா பெற்றிருந்தார். முகேஷும், நடிகர் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள். அதனால், விக்ரமின் மகனான துருவை வைத்து இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டார். தனக்கு சேது படத்தின் மூலம் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த பாலா படத்தில்தான் தன் மகனை அறிமுக செய்ய வேண்டும் என்பது விக்ரமின் எண்ணம்.

வர்மா

இந்த நிலையில், தயாரிப்பாளர் தரப்பிருந்து ஒரு பரபரப்பு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது, அதில் கூறியிருப்பதாவது, `படத்தின் ஃபைனல் வெர்ஷன் எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. ஒரிஜினலுக்கும் இதுக்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை. அதற்கு பதில் ஷூட்டிங்கை மீண்டும் புதிதாக தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். துருவ்தான் படத்தின் ஹீரோவாக நடிப்பார். ஆனால், இந்தப் படத்தை வேறொருவர் இயக்குவார். படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்தும், இயக்குநர் குறித்தும் பின்னர் அறிவிப்போம். இது எங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தெலுகு பதிப்பின் கதைக்கருவை அப்படியே தமிழ் ரசிகர்களுக்குக் கொடுப்பதில்தான் எங்களுக்கு விருப்பம். படம் சொன்னதுபோலவே ஜூன் மாதம் வெளியாகும்.’ என்ற அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

பிதாமகன் படத்தின் மூலம் விக்ரமுக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தவர். நான் கடவுள் படத்தின் மூலம், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றவர். விக்ரமும், பாலாவும் நெருங்கிய குடும்ப நண்பர்கள். இந்த நிலையில், தயாரிப்புத் தரப்பு வேறோர் இயக்குநரை வைத்து வர்மா படத்தை ரீஷுட் செய்வதாக அறிவித்திருப்பது, தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Leave A Reply

Your email address will not be published.