விரைவில் விடுதலையாகவுள்ள சசிகலா? தமிழக அரசியலில் பரபரப்பு!

0

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா இன்னும் ஆறு மாதங்களில் விடுதலையாவார் என்கிறார் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல். 

அ.தி.மு.க ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவந்தது.  2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி இந்த வழக்கில், `ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் சசிகலா உட்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி குன்ஹா. 

சசிகலா

சிறையில் இருந்தபடியே கர்நாடக உயர்நீதிமன்றத்தில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி `ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுவித்து  உத்தரவிட்டார்’. இதையடுத்து, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அவர் முதல்வரானார். அதன்பிறகு 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று ஜெயலலிதா தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்குள் ஜெயலலிதா இறந்துவிட, கட்சியின் பொதுச்செயலாளரானார் சசிகலா. முதல்வர் கனவில் இருந்த சசிகாலாவை `தர்மயுத்தம்’ நடத்தி கிலி ஏற்படுத்தினார் பன்னீர்செல்வம். இதையடுத்து, கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்துவைத்து கண்ணாமூச்சியாடினார் சசிகலா. இந்த நிலையில்தான், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ‘குன்ஹாவின் தீர்ப்பை உறுதிசெய்து’ தீர்ப்பை வெளியிட்டது உச்ச நீதிமன்றம். ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்ததோடு, குன்ஹா வழங்கிய 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும்  உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, 2017 பிப்ரவரி 15-ம் தேதி  பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, இரண்டு ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்திருக்கிறார் சசிகலா. இதற்கிடையில்தான் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை காரணமாக மரணமடைந்தார். இந்த நிலையில்,  நன்னடத்தை அடிப்படையில் சசிகலா முன்கூட்டியே வெளியில்வர வாய்ப்பிருப்பதாகத் தெரியவருகிறது. மேலும், சசிகலாவுக்கு உடல் ரீதியான பிரச்னைகளும் அதிகமிருப்பதாகத் தெரியவருகிறது.

வெற்றிவேல்


இதுகுறித்து தினகரன் ஆதரவாளரான வெற்றிவேலைத் தொடர்புகொண்டு பேசினோம். “சின்னம்மா சிறையில் நடந்துகொண்ட விதம், விடுமுறை நாள்கள், நன்னடத்தை அடிப்படையைக் கருத்தில் கொண்டு இன்னும் ஆறு மாதத்தில் வெளியே வந்துவிடுவார். தேர்தலுக்கு முன் இதுசாத்தியப்படுமா என்று தெரியவில்லை. ஆனால், விரைவில் சின்னம்மா வெளியே வருவது உறுதி’’ என்கிறார்.

கட்சி சார்பில் சசிகலாவை வெளியே கொண்டுவர ஏதாவது முயற்சி செய்துவருகிறீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் முயற்சி செய்யவில்லை. ஆனால், சின்னம்மாவின் நன்னடத்தையால் அவர் விரைவில் வருவார்’’ என்று வெற்றிவேல் பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.