`அந்த சிங்கங்களுக்காக ஊரையே எதிர்த்தான்; கடைசில உயிரே போச்சு!’ – கலங்கும் செக் குடியரசு மக்கள்

0

சிங்கங்களை வீட்டில் வைத்து வளர்த்து வந்த இளைஞர், சிங்கத்தால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செக் குடியரசு நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் மைக்கேல் பிரசேக் என்னும் 33 வயது இளைஞர் தன் வீட்டுத் தோட்டத்தில், கூண்டுகள் அமைத்து ஒரு ஆண் சிங்கம் மற்றும் ஒரு பெண் சிங்கத்தை வளர்த்து வந்தார்.

கடந்த செவ்வாய்க் கிழமை காலை மைக்கேல், சிங்கத்தின் கூண்டுக்குள்ளேயே இறந்து கிடந்ததை அவரின் தந்தை பார்த்துக் கதறி அழுதுள்ளார். போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்த போலீஸ், சிங்கங்களைச் சுட்டால்தான் மைக்கேலின் உடலை மீட்க முடியும் என்று கூறிவிட்டனர். வேறு வழியின்றி மைக்கேலின் தந்தையும் அதற்குச் சம்மதித்தார். போலீஸ் அதிகாரிகள் சிங்கங்களைச் சுட்டுக் கொன்று மைக்கேலின் உடலை மீட்டனர்.

சிங்கம்


இதுகுறித்து உள்ளூர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போலீஸ் அதிகாரி ஒருவர், `மைக்கேல் 2016-ம் ஆண்டு ஆண் சிங்கத்தையும், 2018-ம் ஆண்டுப் பெண் சிங்கத்தையும் வாங்கியுள்ளார். தன் வீட்டுக்குப் பின்புறம் கூண்டு அமைத்து வளர்த்து வந்தார். சுற்றியுள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களிடம் பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால், மைக்கேலோ தன் சிங்கங்கள் பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களை இங்கே அனுமதிக்க மாட்டேன் எனவும் கூறி வழக்கை வாபஸ் வாங்க வைத்தார்.

சிங்கம்

உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாகச் சிங்கங்களை வளர்த்துவந்ததாக இரண்டு முறை அவர் அபராதமும் செலுத்தியிருக்கிறார். ஒருமுறை சிங்கங்களை வாக்கிங் கூட்டிச் சென்றபோது சைக்கிளில் வந்த ஒருவர் மோதி, சிங்கம் அந்த நபரைக் கடித்துவிட்டது. பின்னர் அந்த வழக்கு விபத்து என்று கூறி கைவிடப்பட்டது. மைக்கேல் தான் சிங்கங்களுடன் இருக்கும் புகைப்படங்களைப் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு பிரபலமாகி வந்தார். இனப்பெருக்கம் செய்யும் நோக்கத்தில் சிங்கங்களை வளர்த்து வருவதாகவும் கூறியிருந்தார்.

சிங்கம்

இந்த நிலையில்தான் உணவு வைப்பதற்காகக் கூண்டுக்குள் வந்த மைக்கேலை ஆண் சிங்கம் கடித்துக் குதறிக் கொன்று போட்டுள்ளது. எங்களுக்கு வேறு வழியில்லாததால் சிங்கங்களைச் சுட்டுக் கொன்று அவரின் உடலை மீட்டோம்’’ எனக் குறிப்பிட்டார்.

மைக்கேல் இறப்புச் செய்தி கேட்டு அப்பகுதி மக்கள் சோகத்தில் இருந்தாலும் `சிங்களுக்காக ஊரையே எதிர்த்தான், ஆனால் அதுவே அவன் உயிருக்கு உலை வைத்துவிட்டது. சிங்கங்களை வீட்டில் வைத்து வளர்த்தது அவரின் தவறு’ என்று கூறி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.