அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டாம் ! அருட்தந்தை சக்திவேல் தெரிவிப்பு !

0

அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டாமென எங்களுடைய அமைப்புத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. பொது மன்னிப்பு என்பது குற்றவாளிகளுக்குரியது. அரசியல் கைதிகள் என்பவர்கள் குற்றவாளிகள் கிடையாது எங்களுடைய பாதுகாப்பிற்காக எழுந்து நின்றவர்கள், எங்களுடைய பாதுகாப்பிற்காகத் தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் எங்களுடைய பாதுகாப்பிற்காகத் தற்போது சிறைகளில் வாடிக் கொண்டிருப்பவர்கள் தான் அவர்கள். எனவே, இவர்கள் ஒருபோதும் குற்றவாளிகளல்லஎன அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

“ஜெனீவாவும் ஈழத்தமிழரின் மனித உரிமை நகர்வும்” எனும் தலைப்பிலான கருத்தரங்கு நேற்றுப் புதன்கிழமை(06) பிற்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய அரசியல்வாதிகளெனில் அரசியல் தீர்மானமெடுத்து, எந்தவித நிபந்தனையுமின்றி அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையையே முன்வைக்க வேண்டும்.

ஆனால்,பொது மன்னிப்பின் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழ் அரசியல் வாதிகள் பலரும் கூறுகிறார்கள். இவ்வாறு கூறுபவர்கள் எங்களுடைய அரசியல்வாதிகள் கிடையாது.

அவ்வாறு அவர்கள் கூறுவதன் மூலம் அரசாங்கம், நீதிமன்றம் என்பன குற்றவாளிகள் எனத் தீர்ப்பெழுதுவதற்கு முன்னதாகவே குற்றவாளிகள் என இவர்கள் முடிவு செய்கிறார்கள். இவர்களைத் தான் நாம் சிறையிலடைக்க வேண்டும். இவர்களுக்கு மக்களாகிய நாம் சரியான தீர்ப்பு வழங்க வேண்டும். அது ஜனநாயகத் தீர்ப்பாகவே அமைய வேண்டும்.

அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்ட விடயத்தில், அவர்கள் விசாரிக்கப்பட்ட விடயத்தில், அவர்களுடைய நீதிமன்ற நடவடிக்கைகளில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. ஆனால், எங்களுடைய பிரச்சினை மனித உரிமை சார்ந்த பிரச்சினை மாத்திரமல்ல. மனித உரிமை சார்ந்து மாத்திரம் இதனை நாங்கள் நோக்கக் கூடாது. ஏனெனில், எங்களுடைய பிரச்சினை அரசியல் சார்ந்தது.

எங்களுடைய தேசியத்தை, எங்களுடைய இனத்தை, எங்களுடைய மொழியை, எங்களுடைய கலாசாரத்தைப் பாதுகாப்பதற்காக, எங்களுடைய மக்களைப் பாதுகாப்பதற்காக எழுந்துநின்றவர்கள் தான் தற்போது அரசியல் கைதிகளாகவுள்ளனர். இவர்களுடைய கைதிகளில், இவர்களுடைய விசாரணைகளில், இவர்களுக்குச் செய்யப்பட்ட சித்திரவதைகளில் மனித உரிமை மீறப்பட்டிருக்கிறது.

இவ்வாறான சூழல்களுக்கு மத்தியில் நாம் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காக அரசியல் தீர்வைத் தேடிப் பார்க்க வேண்டும். இந்த விடயத்தில் யாரெல்லாம் எங்களுடன் காணப்படுகிறார்கள் என்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த-2018 ஏப்ரல் மதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு வழங்குவதற்காகப் பத்துக் கோரிக்கைகளை முன்வைத்தது. அதில் ஒரு கோரிக்கை அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக அமைந்திருந்தது.

கடந்த வருடம் யூலை மாதம் அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த சம்பந்தனைச் சந்திக்கச் சென்ற போது வெளிநாட்டுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி இன்னும் இரண்டு கிழமைகளில் வந்து விடுவார். நாங்கள் அவருடன் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் உரையாடவுள்ளோம் எனக் கூறினார். ஆனால், எத்தகைய முன்நகர்வுகளும் இடம்பெறவில்லை என்பதே உண்மை.

கடந்த ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற அரசியல் சதி நடவடிக்கையின் போது கூட அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் ஒரு கட்டத்தில் உச்ச நிலையை அடைந்தது. இவ்வாறான நிலையில் தான் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். இதற்கென நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், வியாழேந்திரன் ஆகியோரை உள்ளடக்கிய உப குழுவொன்றும் அமைக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் எங்களால் ஒதுக்கப்பட்டவர்கள்.

இவ்வாறானவர்களைத் தான் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அனுப்புகின்றார்கள்.அரசியற் கைதிகள் அவர்கள் எங்களுக்குச் செய்தி அனுப்புகிறார்கள். மகிந்த ராஜபக்சவுக்கு சம்பந்தன் ஆதரவளிக்க வேண்டுமென்பதே அந்தச் செய்தி. அதற்குப் பதிலாக நானுப்பிய செய்தியில் நாமல் ராஜபக்சவை என்னுடன் கதைக்குமாறு தெரிவித்திருந்தேன். ஆனால், அதற்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

கடந்த தீபாவளி தினத்தன்று அலரி மாளிகையில் நடந்த தீபாவளிப் பண்டிகையின் போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான மானியங்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இதுதொடர்பாக கதைத்துக் கொண்டிருக்கின்றோம் எனத் தற்போதைய ஜனாதிபதி கூறினார். ஆனால், கடந்த டிசம்பர் மாதம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவியைக் கையளிக்கும் போது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மாட்டோம் எனக் கூறினார்.

ஆகவே, தங்களுடைய அரசியல் நலன்களுக்காகவே இவ்வாறெல்லாம் எங்கள் அரசியல் கைதிகள் விவகாரத்தைக் கையாளுகிறார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கூடத் தங்களுடைய அரசியலுக்காகத் தான் அரசியல் கைதிகள் விவகாரத்தைக் கையாள நினைக்கின்றார்கள். இதன்காரணமாக எங்களால் தூரமாக்கப்பட்ட நிலையில் தான் இவர்கள் தற்போது தங்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போர்க் குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக மகிந்த, மைத்திரி மட்டுமல்ல ஐ.நாவும் தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

அதுமட்டுமல்ல இலங்கையில் நடந்த யுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நாடுகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று இந்தியாவும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இவர்கள் அனைவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு ஐ. நா ஆயத்தமாகவிருக்கின்றதா? என இந்தச் சந்தர்ப்பத்தில் நான் கேள்வியெழுப்ப விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.