இன்று அனைத்துலகப் பெண்கள்நாள்! –

0

உலகம் முழுவதிலும் இன்றையநாளில் பெண்கள்குறித்த எண்ணங்களும், ஆய்வுகளும், கலந்துரையாடல்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஈழத்தமிழ்ப்பெண்களாகிய நாமும் எம்மைப்பற்றி சிந்திக்கவேண்டியவர்களாகின்றோம்.
‘ நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்’ எனப் பாரதியாரும்,

‘ காலங்காலமாக மனவுலக இருட்டுக்குள் முடங்கிக்கிடந்த பெண்ணினம் விழித்தெழவேண்டும். விழிப்புத்தான் அவர்களின் விடுதலைக்கு முதற்படி ‘ எனத் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களும் முன்வைத்த கருத்துகளை மீண்டும் இன்றைய நாளிலும் நாங்கள் மனங்கொள்ள வேண்டியவர்களாகின்றோம்.
ஆண், பெண் என்கின்ற பாலியல் வேறுபாட்டிற்கு அப்பால், பெண்களின் ஆளுமைகள் மதிக்கப்படவேண்டும்.

பாலியல்வேறுபாட்டின் காரணமாகவே ஆண் – பெண் வேறுபாடுகள் தோற்றம்பெற்றன. இந்தப்பாலியல் வேறுபாடு என்பது உயிர்விருத்திக்கான படைப்பின் நியதியாகவே உள்ளது என்பதை நாங்கள் எல்லோரும் நன்கறிவோம். இயற்கையின் இத்தகைய வேறுபாட்டினை அடிப்படையாகக்கொண்டு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட சமுக விதிமுறைகள் பல்வேறுபெயர்களில் பெண்கள்மீது அடக்குமுறைகளாக காலப்போக்கில் மாற்றம் பெற்றன.
இந்த அடக்குமுறைகளில் சிக்கி உழலும் பெண்களுக்கான விழிப்பு என்பது இன்னமும் அவசியமானதாகவே நம்மிடையே உள்ளது. ஆணும்பெண்ணும் ஒரேமாதிரியான மனிதப்பிறவியாக இருக்கின்றபோதும், அவர்களை சமத்துவமனிதர்களாக ஏற்றுக்கொள்ளவிடாது இந்த அடக்குமுறை மனோபாவம் தடைபோட்டு நிற்கிறது.

பிறக்கின்றபோது நாங்கள் எல்லோருமே குழந்தை என்கின்ற பெயரோடுதான் பிறக்கின்றோம். பின்னர்தான் எங்களுக்குள் பாகுபாடுகள் திணிக்கப்படுகின்றன. இந்த திணிப்பானது மனதின் அடியாழத்தில் பதிந்து, பெண்களை அடக்கி ஒடுக்கவும், பெண்கள் அடிமைகளாகவாழவும் வழிவகுக்கின்றது. பெண்ணடிமைப் பாங்கு என்பது ஒரு பரம்பரை அலகு இல்லாவிடினும், காலங்காலமாக எமது ஒவ்வொரு தலைமுறையினருக்கூடாகவும் கடத்தப்பட்டுவருவதை நாங்கள் கண்ணுற்று வருகின்றோம்.


சமுகத்தின் அடக்குமுறை ஒருபுறம், இனஒடுக்குமுறை மறுபுறமென பெண்களாகிய நாம் தாங்கமுடியாத வலிகளுடன் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். 1958 இல் சிங்கள சிறி எழுத்தை எதிர்த்து தமிழர்கள் போராட்டம் நடத்தியபோது, தமிழ்ப்பெண்களை நடுத்தெருவுக்கு இழுத்துவந்து, தமிழச்சிகளின் மேற்சட்டைகளை கிழித்து, பழுக்கக் காய்ச்சிய இரும்பால் சிங்கள எழுத்தை அவர்களின் முதுகுகளில் பதித்தவர்கள் பெரும்பான்மை இனவாதத்தால் உசுப்பிவிடப்பட்ட சிங்களகாடையர்கள்.

அக்காலம் தொட்டு சிங்கள இனவாதத்தின் கொடூரப்பற்களில் சிக்கி, எமது பெண்கள் அனுபவித்த, இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற துயரங்களின் உச்சக்கட்டம் தான் ஊடகவியலாளர் தங்கை இசைப்பிரியாவும் அவர் தோழிகளும் அனுபவித்த வன்கொடுமையாகும். சிங்களப் பேரினவாதத்தின் திமிர்நிறைந்த செயற்பாடே இத்தகைய கொடும் வன்முறைகளாக எம்மை அழுத்திவருகின்றன.

தமிழர்களின் இனவிடுதலைப்போராட்ட வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகாலப் போர்க்காலம் ஒரு புதிய வரலாற்றைப் பதிவுசெய்தது. கைகளிற் கருவிதாங்கிய பெண்கள் தம்மை மட்டுமன்றி, தம்மினப்பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாத்தனர் என்பது நாம் பெருமைப்படவேண்டிய விடயமாகிறது. இதனையே ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப்பெண்கள் பெரும்போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி, விவாதங்களைப் புரிந்து, கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவைகளைவிட எமது பெண்புலிகள் மிகக்குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக்கொடுத்த உரிமைகளும் சுதந்திரங்களும் அளப்பரியவை என தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.
சிங்கள இனவாதம் எம்மீது தொடுத்தபோர் எங்கள் பலரிடமிருந்த அனைத்து ஆற்றல்களையும் ஆளுமைகளையும் தின்று ஏப்பமிட்டுள்ளது. எதுவுமே செய்யமுடியாதவர்களாக பெரும்பாலான பெண்கள் துவண்டுகிடக்கின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட மண்ணிலே இன்றும் பெண்கள்மீதான அநீதிகளும் அவலங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இலங்கையின் வடபகுதியில் வாழக்கைத்துணையிழந்த 40 ஆயிரம் பெண்களும், கிழக்கில் வாழ்க்கைத்துணையிழந்த 49 ஆயிரம் பெண்களும் உள்ளதாக தகவல்கள் உள்ளன. இது இன்னும் அதிகமாகத்தான் இருக்கும். இந்தப்பெண்கள் எத்தகைய நெருக்கடிகளுக்குள் வாழ்கின்றார்கள் என்பதை நாம்சிந்தித்துப் பார்க்கவேண்டியவர்களாக உள்ளோம்.
துணையிழந்த பெண்கள் வீட்டுக்குவெளியே சென்று உழைப்பது சவால்மிக்கதாக உள்ளது. அவர்கள்மீது வைக்கப்படுகின்ற சமுக விமர்சனமானது அவர்களை உளரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாக்குகின்றது.

பெண்கள்மீது பிரயோகிக்கப்படும் உடல்ரீதியான பிரச்சினைகள் உள்ளன. பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. உங்களுக்கு தெரியும் மன்னம்பேரி, கோணேஸ்வரி எனஆரம்பித்து இசைப்பிரியா நீண்டு கிரிசாந்தி, வித்தியா… என இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
சட்டத்தில் பலவீனங்கள் இருப்பதாலும், சட்டத்தின் நீதி தாமதிப்பதாலும் பெண்கள் சட்டத்தீரர்வுகளில் நம்பிக்கைகொள்ளமுடியாதவர்களாக உள்ளனர். (எடுத்துக்காட்டாக கிரிசாந்திவழக்கு). பாதுகாப்பற்ற நிலையில் பெண்கள் உள்ளனர்.

தேசவழமைச்சட்டம் பெண்களுக்கு சாதகமில்லாமல் இருக்கின்றது. (எடுத்துக்காட்டாக பெற்றோரால் தனக்கு சீதனமாக வழங்கப்படும் வீட்டை விற்க பெண் துணைவனின் அனுமதியைப்பெற்றாகவேண்டும்)
பெண்களின் உழைப்பை சுரண்டும் நிலை உள்ளது. போர் காரணமாக கல்விவாய்ப்பற்று இருந்தபெண்கள் பலர் பல்வேறுதுறைகளில் ஆளுமையுடன் இருக்கின்றார்கள். அவர்கள் குறைந்தசும்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றார்கள். கூலிவேலைகளில் பெண்களுக்கு சமஊதியம் இல்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உதவிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்யப்படுகின்றபோதிலும், எல்லோருக்கும் கிடைப்பதாக சொல்லிவிடமுடியாது.
பெண்களை மிகவும் உலுப்பிஎடுக்கின்ற பிரச்சினையாக இன்று, காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினை உள்ளது. இருக்கின்றார்கள் என்பதற்கும் ஆதாரம் இல்லாமல், இல்லை என்பதற்கும் ஆதாரமில்லாமல் வாழ்வதன் வலியை நாங்கள் ஒருதரம் நினைத்துப் பார்க்கவேண்டும். காணாமலாக்கப்பட்டவர்கள் தமக்கான தீர்வினைவேண்டி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவருகின்றனர். உலகஅரங்கில் ஐக்கிய நாடுகள் அவையின் அமர்வுகளில் கலந்துகொண்டு, தம் வலிகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இன்னமும் இதற்கான தீர்வு எட்டாக்கனியாகவே காணப்படுகிறது.

பெண்ணின் சுதந்திரம் குறித்த தவறான புரிதல் நிறையப் பெண்களிடமும் இருப்பதை நாங்கள் காண்கிறோம். சுதந்திரம் என்கின்ற பெயரில் பண்பாட்டுச்சீரழிவையோ அல்லது சமுகச்சீரழிவையோ பெண்கள் மேற்கொண்டால் அது பின்நாளில் எமது இனத்தையே ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும் என்பதை நாம் மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டியவர்களாகிறோம். ஒவ்வொரு பெண்ணும் தாய்மை உணர்வுமிக்கவர்களாக சிந்தித்து, எம் சிறார்களை கல்வியிலும், கலைகளிலும், பண்பாட்டுயர்வினிலும் சிறந்தோங்கச்செய்யவேண்டிய கடப்பாடுடையவர்களே.

திட்டமிட்டு பெண்களைச் சீரழிப்பதன் மூலம் ஓர் இனத்தையே அழித்துவிடமுடியும். ஆதனால்தான் ஒடுக்குமுறையாளர்கள் பெண்களை இலக்குவைத்து செயற்படுபவர்களாக இருக்கின்றனர். எப்போதும் எத்தகைய நெருக்கடிகளையும் சமாளிக்கக்கூடியவர்களாகவும், எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொள்பவர்களாகவும், அசைக்கமுடியாத மனஉறுதிமிக்கவர்களாகவும் வாழவேண்டிய கட்டாயம் பெண்களுக்கு உண்டு.

நவீன தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல எல்லாவற்றிலுமே நன்மைகளும் தீமைகளும் காணப்படுகின்றன. ஆகவே, எமக்குத்தேவையானது எது? எமது குழந்தைகளுக்கு தேவையானது எது என்பதை நாமே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

பல ஊடகங்கள் பெண்களைப்பற்றிய செய்திகளை மிக மோசமானமுறையில் வெளியிடுகின்றன. ஊடகங்கள் பலவற்றுக்குள் போட்டி மனப்பாங்கால் பெண்களைப் பற்றிய செய்திகள் கற்பனை கலந்து மெருகூட்டப்படுகின்றன. இவை அருவெறுப்பையும் அவற்றின் மீதான வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன. பொதுவெளியில் மிகவும் தரக்குறைவான சொற்பாவனைகள் மலிந்துவிட்டுள்ளன. எந்தவித தயக்கமும் இன்றி பெண்கள் இழிவுபடுத்தப்படுகின்றார்கள். இவற்றைவிடுத்து, பெண் என்பவள் ஒரு மனிதப்பிறவி என்பதை இன்றைய நாளில் எல்லோரும் புரிந்துகொண்டு, அதே புரிதலுடன் எமது தமிழ்ப்பெண்களின் உயர்வுக்கும், துயரம்நீங்கிய வாழ்வுக்கும் இன்னும் கூடுதலாக பாடுபட இன்றைய அனைத்துலகப் பெண்கள்நாளில் சிந்திப்போம். செயலாற்றுவோம்.

Leave A Reply

Your email address will not be published.