இலங்கை அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு!!

0

2019ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றதுடன் இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டதாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 

இன்று காலை 8.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமான இந்த கூட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றுள்ளது. 

இதேவேளை, மக்களை வலுவூட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை வலுப்படுத்துவதற்காக அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பிக்கவுள்ளார். 

சுதந்திர இலங்கையின் 73 ஆவது வரவு செலவுத் – திட்டத்தை, நாட்டின் 24 ஆவது நிதியமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர சமர்ப்பிக்கின்றார். நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வர்த்தக மற்றும் ஆளணி வளங்களை வலுப்படுத்தும் நோக்கில் இது சமர்ப்பிக்கப்படுகின்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை மேலும் வலுவூட்டுவது இதன் நோக்கமாகும். 

2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவினம் 4,550 பில்லியன் ரூபாவாகும். மொத்த வருமானம் 2,400 பில்லியன் ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைய வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை மொத்தத் தேசிய உற்பத்தியில் 4 தசம் 5 சதவீதமாகும். 

2020 ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்டத்தின் துண்டும் விழும் தொகையில் 3 தசம் 5 சதவீதம் வரை குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருகின்றது. 2015 ஆம் ஆண்டில் துண்டு விழும் தொகை 7 தசம் 6 சதவீதமாக இருந்ததோடு, 2018 ஆம் ஆண்டில் 5 தசம் 3 சதவீதம் வரை குறைவடைந்தது. 

இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 4 தசம் 5 சதவீதம் வரை குறைக்கப்பட இருக்கின்றது. வரவு செலவுத் கடன் சேவைக்கான தொகையை 2,220 பில்லியன் ரூபாவில் இருந்து 2,079 பில்லியன் ரூபா வரை குறைத்துக் கொள்வது இலக்காகும். 

கடந்த வருடம் (2018) ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு – செலவுத் திட்டம் அன்று ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக தடைப்பட்டது. நெருக்கடி நிலைக்கு தீர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் புதிய வரவு – செலவுத்திட்டத்தை தயாரித்து இன்று நிதியமைச்சர் சமர்ப்பிக்கின்றார். 

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் புதன்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது. 12 ஆம் திகதி பிற்பகல் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. 

வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது. ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.