இலங்கை தொடர்பான ஐநாவின் 40/1 பிரேரணையின் உள்ளடக்கம் இது தான்!

0

இலங்கை தொடர்பான பிரேரணை பிரிட்டன், கனடா, ஜேர்மனி உள்ளிட்ட ஐந்து நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தது. இன்று பிரேரணை நிறைவேற்றப்படும் போது அதனை சமர்ப்பித்த நாடுகளும், இலங்கையும் உரையாற்றவுள்ளன.

மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை, இன்று வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக இலங்கை அறிவித்துள்ள நிலையில், பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட வாய்ப்புள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரேரணையில் நான்கு முக்கிய செயற்பாடு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  1. 40வது கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமை ஆணையாளர், இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையை பாராட்டுகிறது. அத்துடன் 30/1 பிரேரணையை முழுமையாக அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
  2. இலங்கை அரசாங்கமானது 2015ஆம் ஆண்டில் இருந்து ஐநா மனித உரிமை அலுவலகத்துடன் பேணுகின்ற ஈடுபாட்டு தன்மை பாராட்டப்படுகிறது. இந்த ஈடுபாட்டுதன்மை தொடர வேண்டுமென புதிய பிரேரணை வலியுறுத்துகிறது. மனித உரிமை, உண்மை, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை பாதுகாத்தல், ஊக்குவித்தல் போன்றவற்றில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.
  3. மனித உரிமை, உண்மை, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை பாதுகாத்தல், ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளரிடமும், தொடர்புடைய விசேட நிபுணர்களிடமும் கோரிக்கை விடுக்கிறோம்.
  4. இலங்கை முன்னேற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தொடர்ந்து மதிப்பீடுகளை செய்ய வேண்டும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் செயற்பாடுகளை மனித உரிமை ஆணையாளர் மதிப்பிட வேண்டும். பிரேரணை அமுலாக்கல் தொடர்பான இடைக்கால அறிக்கையை 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரிலும், முழுமையான அறிக்கையை 2021 ஆம் ஆண்டு நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகின்றது.

தற்போது வரை இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக பல நாடுகள் அறிவித்துள்ளன. அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, அல்பேனியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரேஷியா, டென்மார்க் , பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், நெதர்லாந்து, நியூசிலாந்து, சுவீடன் என்பவற்றுடன் இலங்கையும் இணை அனுசரணை வழங்குகிறது.

இதேவேளை, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட சுமார் 6 தொடக்கம் 8 வரையான நாடுகள் இலங்கையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை தலையிட வேண்டியதில்லையென்ற அப்பிராயத்தை கொண்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.