உலகத் தலைவர்களை திரும்பிப்பார்க்க வைத்த 16 வயது சிறுமி? நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்!

0

பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலைத் தடுக்குமாறு வலியுறுத்தி தனது ஆர்ப்பாட்டம் மூலம் உலகத் தலைவர்களை திரும்பிப்பார்க்க வைத்த 16 வயது சிறுமி நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு குறித்த சிறுமி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலைத் தடுக்குமாறு வலியுறுத்தி சுவீடனின் பாராளுமன்ற வாசலில் சிறிய பதாகையுடன் அமைதியான போராட்டத்தில் தனி ஆளாக ஈடுபட்டார்.

மேலும், உலகத் தலைவர்கள் அனைவரிடமும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை புறக்கணிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக அனைத்து உலக அரசியல் தலைவர்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதையடுத்து, கிரேட்டா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாவோஸ் பகுதியில் நடைபெற்ற ஐ.நா பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாடினார். அவரது பேச்சு உலகின் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகிறது.

இது மட்டுமின்றி கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலைக்கு செல்வதை விடுத்து, பாராளுமன்ற வாசலில் உலக வெப்பமயமாதலைத் தடுக்கக் கோரி, அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டார்.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறுமி கிரேட்டா தன்பெர்க் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தான் பரிந்துரைக்கப்பட்டதை மிகுந்த கௌரவமாகவும் ஆசியாகவும் கருதுவதாக கிரேட்டா கூறியுள்ளார்.

தேசிய தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசியர்கள் என பலரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த பரிசுக்கு மொத்தம் 304 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் 219 தனி நபர்கள், 85 அமைப்புகள் உள்ளதாக நோர்வேயைச் சேர்ந்த நோபல் பரிசு கமிட்டி கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.