காடுகளை பிள்ளைகள்போல் வளர்த்த விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் எங்கே?

0

இலங்கையில் பெருமளவான காடுகள் பாதுகாக்கப்பட்டிருப்பது வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே என்று சிறிலங்காவின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பெருமைப்படுவதுடன் அதற்கு முன்னுதாரணமாக செயற்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதனை தமிழர் தேசம் எவ்வாறான கண்ணொட்டத்தில் பார்கமுடியும் என்பதை அடுத்துவரும் பந்திகளில் பார்க்கலாம்.

தனது சொந்த ஊரில் சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றிய சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, உண்மையிலேயே இந்த விடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக சொல்லியுள்ளாரா என்பதை நோக்கினால் இல்லை என்றுதான் சொல்லமுடியும்.

வடக்கில் மரங்களை அழிக்காமல் பாதுகாத்தமையானது அவர் தனது கொரில்லா போரை முன்னெடுப்பதற்காகவே என்றும் கொரில்லா போருக்கு மரங்கள் முக்கியமானவை என்றும் அரச தலைவர் சுட்டிக்காட்டுகின்றார். ஆகவே மரங்களைப் பாதுகாத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தனது போர் நோக்கத்துக்காகவே அதனைச் செய்ததாக மைத்திரியின் கருத்து அமைகிறது.

விடுதலைப் புலிகள் தமது கொரில்லா தாக்குதல் முறையிலிலிருந்து மரபுவழி இராணுவமாக தொண்ணூறுகளிலேயே பரிணமித்துவிட்டனர் என்பது கடந்த கால யுத்த வரலாறு கூறும் செய்தியாகும். இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன் மரபுவழி போர்களில் விடுதலைப்புலிகள் ஆர்வம் செலுத்தியதன் விளைவே யாழ்ப்பாணக் கோட்டை மீதான முற்றுகைச் சமரும் கோட்டை மீட்புமாகும்.

சூரியகதிர் இராணுவ நடவடிக்கையின் பின்னர் வன்னிக்கு பின்வாங்கிச் சென்ற விடுதலைப் புலிகள் மீண்டும் சிறிலங்கா இராணுவம்மீது பாரிய முற்றுகைச் சமரினை ஓயாத அலைகள் ஒன்று என்ற பெயரிட்டு முல்லைத்தீவில் தொடுத்திருந்தனர். இது அவர்களின் மிகப்பெரிய மரபுவழி இராணுவ நடவடிக்கையாகும்.

இதற்கு பின்னர் வந்த அனைத்து தாக்குதல் முறைகளுமே மரபுவழி இராணுவத் தாக்குதல் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. முற்றுகை, தரையிறக்கம், ஊடறுப்பு உள்ளிட்ட அத்தனை அம்சங்களும் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நடந்த ஓயாத அலைகள் நடவடிக்ககளின்போது கையாளபட்ட மரபுவழி இராணுவ யுக்திகளாகும்.

இன்றளவும் உலகின் வல்லரசு நாடுகளால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படும் தரையிறக்கமாக வட போர்முனையில் மேற்கொள்ளப்பட்ட குடாரப்பு தரையிறக்கம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. பளை ஊடறுப்பு, ஆனையிறவு முற்றுகை உள்ளிட்ட அனைத்துமே ஒரு மரபுவழி இராணுவத் தாக்குதலின் மேம்பட்ட பண்புகளைக் கொண்டிருந்தமை மறுக்கமுடியாத ஒன்றாகும்.

கொரில்லா தாக்குதலுக்காக மரங்களை கேடயமாக பயன்படுத்தினார்களெனில் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின்போது ஆனையிறவு வெளியை சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சிறிலங்கா விமானப் படை விமானங்களின் சூட்டாதரவுகள், பின் தள பீரங்கி முனைகளின் எறிகணை வீச்சுக்கள் என அத்தனையையும் கடந்த ஆனையிறவு சமரை மரங்களைக் கேடயமாக பயன்படுத்தும் கொரில்லா போருக்குள் எவ்வாறு உள்ளடக்குவது?

விடுதலைப்புலிகள் தமது போர்முனை எல்லைகளை நிர்ணயம் செய்து முன்னரங்க காவலரண்களை தெள்ளத்தெளிவாகவே முகமாலை, நாகர்கோவில், ஓமந்தை, உயிலங்குளம், மணலாறு என அமைத்து படைகளை நிலைகொள்ளவைத்தமை கொரில்லாப் பாணியிலான வழிமுறை கிடையாது. இந்த இடம்தான் என அடையாளப்படுத்தி எதிராளியால் தாக்குதல் நடத்தமுடியும் என அவர்கள் தெரிந்தும் இந்த முன்னரங்குகளில் பலமான அரண் அமைத்து வெளிப்படையாகவே யுத்தம் செய்தமை மைத்திரியின் கொரில்லா சம்மந்தப்பட்ட பேச்சுக்களை பொய்யாக்குகின்றது.

தொண்ணூறுகளின் பின்னர் விடுதலைப்புலிகள் பெருமளவான கொரில்லா போரை முன்னெடுத்திருந்தர்களென்றால் அது கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் என்றுதான் சொல்லமுடியும். கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவந்தோம் என படைத்தரப்பு 2007இல் அறிவித்தமை அவர்களின் மரபுவழி ரீதியான நடவடிக்கைகளையே. அதன்பின்னரும் கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கொரில்லா தாக்குதல்கள் இறுதிப்போர்வரை நடந்துவந்தமை தெரிந்தவொரு விடயமாகும்.

ஆக, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறுவதைப்போல் வடக்கு மாகாணத்தில் மரங்கள் பாதுகாத்தமை தனியே கொரில்லா தாக்குதல்களுக்காகத்தான் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.

வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளால் தார்மீகமாகவே மரங்கள் பாதுகாக்கப்பட்டன. மரங்களின் சூழலியல் சார்ந்த தேவை அனைத்து மக்களுக்கும் விளிப்புணர்வூட்டல்களுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மரங்களைப் பாதுகாப்பதற்கென்று தனியான ஒரு பெரும் பிரிவு அவர்களின் நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் இருந்தது. வனவளப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராக சக்தி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஏராளமான மரங்கள் பாதுகாக்கப்பட்டமைக்கு சக்தியின் முயற்சி இன்றளவும் வன்னி மக்களால் நினைவுகூரப்படுவதே சிறந்த எடுத்துக்காட்டு.

இன்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இதுகுறித்து பெருமைப்படுகிறாரெனில், இறுதிப்போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகளின் வன வளப் பாதுகாப்புப் பொறுப்பாளராக இருந்த சக்தி எனும் போராளியையோ அவரது குடும்பத்தினரையோ விடுவிப்பாரா? அவர்கள் எங்கே என்பதற்கு பதில் சொல்வாரா?

இதில் பார்க்கப்படவேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில், இருந்த மரங்களைப் பாதுகாத்ததோடு மட்டும் விடுதலைப் புலிகள் நிற்கவில்லை. மரங்களை நட்டு, அவற்றை கவனமாக வளர்த்தெடுத்து காடுகளை உருவாக்கினார்கள். வன்னியில் பெரும்பாலான இடங்களில் கவையாகிக் கொம்பாகி நிற்கும் தேக்கு, சமண்டலை, சஞ்சீவி, மரமுந்திரிகை உள்ளிட்ட பெரும் காட்டு மரங்கள் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டமைக்கு உதாரணமாகும்.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளைத் தவிர ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் உள்ள வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அரசியல்வாதிகள், ஊழல்மிகுந்த சில அரச அதிகாரிகள், மரக்கடத்தல் காரர்கள், சட்டவிரோத வர்த்தகம் செய்கின்ற பிரிவினர் ஆகியோர் நாட்டின் வனப்பகுதிகளை அழித்தார்கள் என்றும் கூறுகிறார் மைத்திரி. இற்றைக்கு யாழ்ப்பாணத்திலும் வடகிழக்கின் ஏனைய பகுதிகளிலும் படையினரால் காவலரண்களுக்காக அழிக்கப்பட்ட பனைகளும் பல்குழல் எறிகணைகளால் முறிக்கப்பட்ட பனைகளும் எத்தனை என்ற தரவுகள் உள்ளனவா?

இன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்வதில் ஆர்வம்காட்டும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் காடழிப்பை முப்படைகளையும் கொண்டு ஏன் தடுக்கமுடியாதுள்ளது?

காடழிப்பில் ஈடுபடுகின்ற அரசியல்வாதிகள் அரச உத்தியோகத்தர்கள் போன்ற தரப்பினர்க்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கமுடியாமலுள்ளது?

வடக்கின் முக்கிய மிகப்பெரும் காடொன்றை அழித்து முஸ்லிம் குடியேற்றங்களை மேற்கொண்டுவரும் முக்கிய அரசியற்புள்ளி தொடர்பில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? காடழித்துத்தான் குடியேற்றங்கள் மேற்கொள்ளவேண்டுமா?

வடக்கில் காடுகள் அழியாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என பெருமைபேச முடிகின்றதெனில் விடுதலைப்புலிகள் அந்த காட்டை பாதுகாக்க என்ன செய்தார்கள் என்பதை சிந்திக்கமுடியாமலுள்ளதா? விடுதலைப்புலிகளால் செய்யமுடிந்த அந்த உன்னத பணியை ஒரு அரசாங்கத்தால் ஏன் செய்யமுடியாமலிருக்கின்றது?

விடுதலைப்புலிகளிடமிருந்த இயற்கை வளத்தை பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தின் ஒரு சிறுதுளி சிந்தனைகூட தற்போதைய அரச தரப்புக்களிடம் இல்லை.

மாற்றான் காணிக்குள் எம் மக்களை குடியேற்றவேண்டும்; மாற்றான் காணிகளை அபகரிக்கவேண்டும்; இயற்கை வளத்தை அழித்து வியாபாரம் செய்யவேண்டும்; எவன் எக்கேடு கெட்டாலும் என் குடும்பமும் என் பிள்ளைகளும் நன்றாக இருக்கவேண்டும் என்ற சிந்தனை விடுதலைப்புலிகளிடம் இருந்ததில்லை.

அந்த சிந்தனைகள்தான் இன்று வடகிழக்கில் விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட எஞ்சியுள்ள காடுகளையும் அழித்தொழிப்பதில் குறியாக நிற்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.