நம் தாயைப்போல இவள் ஒருத்தி; நம்மோடு வாழும் சக மனுஷி (பெண்கள்) – உணரட்டும் இந்த சமூகம்!

0

உன்ன நம்பித்தானே வந்தேன்.. என்ன ஏன் இப்படி பண்ணே என்பன போன்ற வார்த்தைகளின் மூலம் தனது இயலாமையை, ஆற்றாமையை, தனக்கு இழைக்கபட்ட நம்பிக்கை துரோகத்தை வெளிப்படுத்துகிறாள் அந்த காணொளியில் ஒரு பெண். இன்னுமோர் பெண்ணோ என்னை பெல்ட்டால் அடிக்காதீர்கள் அண்ணா எனது கால்சட்டையை கழட்டுகிறேன் என குரலுடைந்து அழுகிறாள்.

நெஞ்சை பிளக்கும் இத்தகைய கொடூரங்கள் நிறைந்த காணொளி சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் என்ற விஷமிகளும் பெண்களிடம் நன்றாக பழகி அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதை ஆபாச வீடியோவாக எடுத்து தொடர்ந்து அந்த பெண்களை மிரட்டி வந்ததாகவும், இவர்களால் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களிடமிருந்து அதிகப்படியான ஆபாச விடீயோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலம் காலமாய் கூட்டுப் புழுவாய், சிறகற்ற பறவைகளாய், விட்டில் பூச்சிகளாய் தங்களது திறைமைகள், விருப்பங்கள், எண்ணங்கள் அனைத்தையும் தங்களுக்குள்ளாகவே போட்டு புதைத்துக்கொண்டு சட்டகங்களுக்குள் சிக்கிக்கிடந்த பெண்கள் தற்போது தான் அனைத்து துறைகளிலும் விரவிவருகிறார்கள். தங்களது தடத்தை அழுத்தமாய் பதித்து ஆண்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் முன்னுதாரணமாய் உள்ளனர்.

அதே சமயம், பெண்களை வெறுமனே போகப்பொருளாய் பார்ப்பதுவும், அவர்கள் மீது பாலியல் ரீதியாக நடத்தப்படும் குற்றச்செயல்களும் அதிகரித்த வண்ணமே உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவ்வப்போது நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாம் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகள் நம்மை அச்சமடைய – அதிர்வடைய செய்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரங்களை முற்றாக ஒழித்திட அரசு மூர்க்கமாக செயல்படுகிறதா என்றால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று பாடிய நாமக்கல் பெருங்கவிஞன் இருந்திருப்பானேயானால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை நடுவீதியில் கழுமரத்தில் ஏற்றுங்கள் என பாடியிருப்பானோ என்னவோ.

அந்த அளவுக்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்முறைகள் அதிகப்படியாக அரங்கேறிவருகின்றன. இதோ,பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் என்ற மனசாட்சியை கழற்றிவைத்துவிட்ட, மனிதர்கள் இவர்களென கருதுவதற்கு தகுதியற்ற கும்பல் பள்ளி – கல்லூரி பெண்களிடம் நட்பாக பழகி, அவர்களை தனியே வரவழைத்து வேட்டை நாய்களைப்போல சிதைத்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டிவந்துள்ளது. இவர்களால் இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது.

பெண் பிள்ளைகளை பெற்ற எந்த தகப்பனும் ஓர் நொடி இதயம் நின்றுபோக கூடிய அளவுக்கு உணரும் அளவுக்கான இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மேற்காண் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் என்ற நபர்கள் மட்டுமே தொடர்புபட்டிருக்கவில்லை. இவர்களுக்கு பின்னணியில் ஆளும் தரப்பின் முக்கிய புள்ளியின் வழித்தோன்றல்கள் உள்ளதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகின்றன.

இந்த உலகில் அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான முக்கிய ஆதாரமான ஜீவநதிகளுக்கு பெண்பாற் பெயரை சூட்டியும், நாம் வணங்கும் தெய்வங்களில் பெண் தெய்வங்களுக்கு முதன்மை இடம் அளிக்கும் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகப்படியாக அரங்கேறுவதும், அல்லது சமூகத்தை வழிநடத்திட வேண்டிய அதிகார வர்க்கத்தின் துணையுடனேயே நடத்தப்படுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள கூடியதே அல்ல.

மேற்கண்ட நபர்களை குண்டர் சட்டத்தில் அடைப்பதாகட்டும், இந்த விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்றுவதாகட்டும் குற்றவாளிகளை எந்த வகையிலும் தப்பிக்க செய்திட கூடாதென்ற நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். இந்த விவகாரம் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு தீர விசாரணைக்கு உள்ளாக்கிடப்பட்டு குற்றவாளிகள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கிடப்பட வேண்டும். மேலும், இத்தகைய கொடூரங்கள் அரங்கேறாத வண்ணம் அரசு கடுமையான சட்டங்களை வரையறுக்க வேண்டுமென்பதுதான் எளிய மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அதேபோல் சமூக வலைத்தளங்களை பாதுகாப்பாய் கையாள்வதற்கும், நம் தாயைப்போல இவள் ஒருத்தி ; நம்மோடு வாழும் சக மனுஷி என்ற ரீதியில் பெண்களை அணுகுவதற்கு இந்த சமூகத்திற்கு தேவையான கருத்துருவாக்கங்களை உண்டாக்கிட வேண்டுமென்பதுதான் எளிய மக்களின் உணர்வாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.