`பிரதமர் மோடி வருகை; அடைத்துவைக்கப்பட்ட பட்டியலின மக்கள்!’ – வாராணாசியில் போலீஸார் அராஜகம்

0

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல மாநிலங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்துவருகிறார். 

மோடி

இந்நிலையில், நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதிக்கரையில் இருந்து காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு எளிதாகச் செல்லும் வகையில், 50 அடி அகலத்தில் 600 கோடி ரூபாய் செலவில், பிரமாண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை நேற்று பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதில், பாதுகாப்பு என்ற பெயரில் அந்தப் பகுதியில் வசித்துவரும் பட்டியலின மக்களை வீடுகளுக்குள் அடைத்துவைத்துள்ளனர் காவல் துறையினர்.

அடிக்கல் நாட்டுவிழா

சாலை அமைத்தல், கோயில் சீரமைத்தல், சிலை கட்டுதல் போன்றவைக்காகத் தங்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அநீதி இழைக்கப்படுவதாகவும், தங்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.  இதுதொடர்பாகத் தங்கள் தொகுதி மக்களவை உறுப்பினர் மோடியை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகக் கூறிய நிலையில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரதமர் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே, அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். சுமார் 40 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில், அனைவரும் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி வெளியில் வந்தவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று வீட்டில் அடைத்துள்ளனர். 

பட்டியலின மக்கள்

‘பிரதமர் எங்களைப் பார்க்க அஞ்சுகிறார். அதன் காரணமாகவே, அவர் இங்கு வரும்போதெல்லாம் எங்களை அடைத்து வைத்துவிடுகின்றனர். இந்த இடத்தை விட்டு எங்களை வெளியேற்றுவதிலேயே மோடி அரசு குறியாக உள்ளது. நாங்கள் இந்த இடத்தை விட்டு ஏன் செல்ல வேண்டும், எங்கு செல்ல வேண்டும்? எதுவும் தெரியவில்லை. இது எங்கள் மண். நாங்கள் இதை விட்டுச் செல்ல மாட்டோம்’ என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26-ம் தேதி, அப்பகுதியில் உள்ள ஒரு கோயில் நிர்வாகிகளும் காவல் துறையினரும் வந்து, அங்குள்ள பட்டியலின மக்களைத் தங்களின் வீடுகளைக் காலிசெய்யும்படிக் கூறியுள்ளனர். அப்போது, பெண்கள் மட்டுமே அப்பகுதியில் இருந்துள்ளனர். ஆண்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுள்ளனர். ஆண்கள் வந்த பிறகு, அவர்களிடம் பேசிக்கொள்ளுங்கள் எனப் பெண்கள் கூறியுள்ளனர்.  ஆனால், அதைக் கேட்காத காவல் துறையினர், பட்டியலின மக்களின் வீடுகளைச் சுத்தி மூலம் தாக்கியுள்ளார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இந்தப் பிரச்னையே இன்னும் முடியாத நிலையில், அடுத்த வாரமே அந்த மக்கள் அடைத்துவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.