புரோக்கர் நிர்மலாதேவி பிணையில் விடுதலை!

0

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலாதேவியை உயர் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று (செவ்வாய்க்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முருகன், கருப்பசாமி ஆகியோர் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் மூலம் பிணை பெற்றனர். ஆனால் நிர்மலா தேவியின் பிணை மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.

இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வரும் நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக 3 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். உரிய விசாரணை நடத்தப்படவில்லை என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின்னர் பிணை கேட்டு நிர்மலாதேவி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரும் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று பிற்பகல் நிர்மலாதேவியை விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. வழக்கு விசாரணையையும் இன்றைய திகதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையில், 11 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு நிர்மலா தேவி தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் இன்று விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவரை பிணையில் விடுதலைசெய்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.