போதைப்பொருள் குற்றங்களுக்கு விசேட நீதிமன்றம்! மைத்ரிபால சிறிசேன அறிவிப்பு!

0

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.

நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபற்றி தான் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நீண்டகாலம் செல்கின்றமை, போதைப்பொருள் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பெரும் தடையாகவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமை விரைவில் சரி செய்யப்பட வேண்டுமென சுட்டிக் காட்டினார்.

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றில் இடம்பெறும் குற்றங்களை தடுப்பது குறித்தும் இதன்போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள பாரதூரமான குற்றவாளிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பிலும் தற்போதைய நிலைமைகளை கேட்டறிந்த ஜனாதிபதி, அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கண்டறியும் கலந்துரையாடல் ஒன்றை ஏப்ரல் மாதம் 02 திகதி தனது தலைமையில் மீண்டும் ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுதார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.