`6 கோடியால்தான் அ.தி.மு.க-வில் சீட் மறுத்தார் ஜெயலலிதா..!’ – ஜவாஹிருல்லாவுக்கு ஹைதர் அலியின் 18 பக்கக் கடிதம்

0

“தலைமை நிர்வாகக் குழு என ஒன்று இருக்கிறது. தலைவர் என்று ஒருவர் இருக்கிறார். அதற்கு நேர்மாறான செயல்பாடுகளில் ஹைதர் அலி ஈடுபட்டு வருகிறார். இது அமைப்புக்குள் தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.”

`6 கோடியால்தான் அ.தி.மு.க-வில் சீட் மறுத்தார் ஜெயலலிதா..!' - ஜவாஹிருல்லாவுக்கு ஹைதர் அலியின் 18 பக்கக் கடிதம்

னிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கு த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி எழுதியுள்ள 18 பக்கக் கடிதம், இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது. `நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வில் சீட் மறுக்கப்பட்டதன் பின்னணியில் த.மு.மு.க-வே உடையும் அளவுக்கு விவகாரம், வீதிக்கு வந்துள்ளது’ என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள். 

ஹைதர் அலி

`நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க அணியில் இணைந்து போட்டியிடுவது’ என மனிதநேய மக்கள் கட்சி முடிவெடுத்திருந்தது. இதுதொடர்பாக, தி.மு.க-வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் ம.ம.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். `உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தியதால் ம.ம.க மறுத்துவிட்டது’ என்ற தகவல் வெளியானது. இருப்பினும், `தி.மு.க அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என ஸ்டாலின் தெரிவித்ததாகச் செய்திகள் வெளிவந்தன. தி.மு.க-வில் கதவுகள் அடைக்கப்பட்டதால், `அடுத்து என்ன செய்வது?’ என்ற ஆலோசனையில் அக்கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க-வில் சீட் மறுக்கப்பட்டதன் பின்னணியில் ஹைதர் அலி இருக்கிறார் என்பதால் ஜவாஹிருல்லா கடும் கோபத்தில் இருக்கிறார் என்ற தகவல் வெளிவரத் தொடங்கியுள்ளது. தவிர, அமைப்பை சீர்குலைக்கும் சதி ஆலோசனைகளைச் செய்ததாகக் கூறி ஹைதர் அலியிடம் விளக்கக் கடிதம் கேட்டுள்ளதாகவும் ம.ம.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

ஹைதர் அலி கடிதம்

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தபோது, `ஹைதர் அலிக்குத்தான் சீட் கொடுப்போம்’ எனக் கூறிவிட்டனர். ஆனால், `ஜவாஹிருல்லாதான் களத்தில் நிற்பார்’ என நிர்வாகிகள் தெரிவித்தனர். சீட் கிடைத்தால் திருச்சி அல்லது வேலூரில் போட்டியிட விரும்பினார் ஜவாஹிருல்லா. இதற்கு தி.மு.க தரப்பில் இசைவு தெரிவிக்கப்படவில்லை. ஸ்டாலினின் குட்புக்கில் ஹைதர் அலி இருப்பதால், ஜவாஹிருல்லாவுக்கு அவர்கள் சீட் கொடுக்க விரும்பவில்லை. ஹைதரால்தான் சீட் பறிபோனது என்ற மனநிலைக்கு ஜவாஹிருல்லா வந்துவிட்டார். இதன்பிறகு, தாம்பரம் யாகூப் என்பவர் மூலமாக, மாநிலம் முழுவதும் ஒரு தகவலை அனுப்பியுள்ளனர். அதில், `ஹைதர் அலி ஏறக் கூடிய மேடையில் ஜவாஹிருல்லா இருக்க மாட்டார்’ எனக் கூறியுள்ளனர்.

ஹைதர் அலி கடிதம்

நாகர்கோவிலுக்கு ஹைதர் அலி சென்றபோது, இதுதொடர்பாகப் பேசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, `இயக்கத்துக்கு எதிராக சதிவேலை செய்கிறீர்கள்’ எனக் கூறி, விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார் ஜவாஹிருல்லா. இந்த விளக்கம் கேட்பு கடிதத்தை ஹைதர் அலி எதிர்பார்க்கவில்லை. இதன் விளைவாக, கடும் கோபத்துடன் 18 பக்கங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், பி.ஜெய்னுல் ஆபிதீன் விலகல், தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சு, கனிமொழியிடம் 6 கோடி ரூபாய் வாங்கியதாக எழுந்த சர்ச்சை, கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் திரட்டப்பட்ட நிதி எனப் பல விஷயங்களை வெளிப்படையாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார் ஹைதர் அலி” என விவரித்தவர்கள், அந்த 18 பக்கக் கடிதத்தை நமக்குக் கொடுத்தனர். 

ஜவாஹிருல்லா

அந்தக் கடிதத்தில் உள்ள விவரங்கள் பின்வருமாறு: 

த.மு.மு.க-வின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நான் நடந்துகொண்டதாகக் கூறி விளக்கக் கடிதம் கேட்டுள்ளீர்கள். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக் கடைசியாக மனிதனைக் கடித்த கதையாக உங்கள் கதை இருக்கிறது. சமீபகாலமாக, காரணம் கேட்காமல் நேரடியாகவே நீக்குவது போன்ற பாசிச நடவடிக்கையாகவே இருக்கிறது தங்களது செயல். எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நீங்கள் மிகவும் குழம்பியுள்ளீர்கள் என்பது தெரிகிறது. `பிப்ரவரி 5, 2019 அன்று நாகர்கோவிலில் ஒரு சதி ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் பங்கு கொண்டுள்ளீர்கள். பொதுச் செயலாளர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பலருக்கும் அழைப்பு கொடுத்துள்ளீர்கள்’ எனக் கூறியிருக்கிறீர்கள். `பிப்ரவரி 2-ம் தேதி தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிலர், இத்தகைய கூட்டம் நடைபெறுவதை குறிப்பிட்டு நீங்கள் கலந்துகொள்வது அமைப்பின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் எனச் சுட்டிக் காட்டிய பிறகும் கலந்து கொண்டீர்கள்’ எனக் கூறுகிறீர்கள். இது கள்ள மசூரா எனக் கூறுகிறீர்கள். யாருக்கும் தெரியாமல் நடத்தப்படுவதுதான் கள்ள மசூரா. ஆனால், இன்று வரையில் நீங்கள்தான் அப்படி ஒரு சதி ஆலோசனையை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களோடு இருப்பவர்களுக்குத் தெரியும். பலர் என்னிடமும் சொல்லியிருக்கிறார்கள். அது உங்களுடைய பிறப்புரிமை. 

ஹைதர் அலி கடிதம்

அக்டோபர் மாதம் 7-ம் தேதி அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என்ற பெயரில் திருச்சியில் ஒரு மாநாட்டைக் கூட்டினோம். மறுநாள் பெமினா லாட்ஜில் உங்களோடு நெருக்கமாக இருப்பவர்களைக் கூப்பிட்டு, `ஹைதர் இந்த மாநாட்டுக்கு எப்படியெல்லாம் இடையூறு செய்தார் எனச் சொல்லுங்க’ எனப் பேசியிருக்கிறீர்கள். `என்னை த.மு.மு.க-வில் இருந்து தூக்கி எறிய வேண்டும்’ எனக் கூறி, `அப்போது அலுவலகத்தை எப்படிக் காப்பாற்றுவது’ என்ற பேச்சு வந்தபோது, உங்கள் பங்குதாரரான தாம்பரம் யாகூப், `நான் 50 பேரைக் கூட்டி வருகிறேன். அவர் எப்படி வருகிறார்’ எனப் பார்ப்போம் எனப் பேச வைத்தீர்கள். இதன் பெயர்தான் சதி ஆலோசனை.

த.மு.மு.க-வை எப்படிக் காப்பாற்றுவது, அதை எப்படிப் பொழிவோடு எடுத்துச் செல்வது என்பது பற்றித்தான் நாங்கள் ஆலோசித்தோம். தவிர நீங்கள் செய்தது போல ஆலோசனைகளைச் செய்யவில்லை. 2004-ல் பி.ஜே போயிட்டார். அதன்பிறகு 2004-ல் நடந்த சம்பவம் ஒன்று. `2 முறை பொறுப்பில் இருந்தவர்கள் மீண்டும் பதவிக்கு வரக் கூடாது. அடுத்த தலைமுறைகளைக் கொண்டு வர வேண்டும்’ என நான் சொன்னேன். அதை மூன்று முறை என மாற்றம் செய்தோம். அப்போது நடந்த பொதுக்குழுவில், `பிஜே போய்ட்டார். இப்ப இயக்கம் தூய்மையாக இருக்கிறது. கட்டமைப்பைச் சரியாகக்கொண்டு செல்லுங்கள். நான் இதிலிருந்து விடுபட்டுக் கொள்கிறேன்’ என அன்றைக்கே பதிவு செய்தேன். பொறுப்பின் மீதான வெறித்தனம் என்னிடம் இல்லை. 

ஸ்டாலினுடன் மமக சந்திப்பு

2009 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, 2 எம்.பி சீட் வேண்டும் எனக் கேட்டபோது, `ஒரு சீட் தர்றோம். ராமநாதபுரம் தொகுதி’ என தி.மு.க-வில் சொன்னார்கள். 2 சீட் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். அ.தி.மு.க-வில் 2 சீட் கிடைக்கும் எனப் பேசப்பட்டு வந்தது. ஆனால், நிர்வாகக் குழுவில் பேசிய சமது, ` 2009-ம் ஆண்டு சீட் கிடைக்காமல் போனதற்கு இவர்தான் காரணம். இவர் நினைத்திருந்தால் சீட் வாங்கியிருக்கலாம். கலைஞர்கிட்ட பேசியிருக்கலாம்’ எனச் சொன்னார். அப்போது பேசியது ஞாபகம் இருக்கிறதா பேராசிரியரே, `ஒரு சீட் வாங்கிக்குவோம். ஜெயிச்சா மந்திரி போஸ்ட் தருவாங்களான்னு கண்டிஷன் போடுங்கள்’ எனச் சொன்னீர்கள். `அப்படிப் போய்க் கேட்டா காரித் துப்ப மாட்டாங்களா. இப்பத்தான் பாராளுமன்றமே போறாங்க. இவ்வளவு அற்பத்தனமா இருக்காங்களேன்னு நினைக்க மாட்டார்களா…’ எனச் சத்தம் போட்டேன். அந்த நிகழ்வு நடக்காமலேயே நாமெல்லாம் சுயேட்சையாக நின்று தோற்றோம். இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனப் பார்க்கிறோம். 

இது நடந்து முடிந்து, நீங்கள் எம்.எல்.ஏ-வாக ஆகிவிட்டீர்கள். ஆனால் மக்கள் மத்தியில் அ.தி.மு.க-வின் சிண்டிகேட் போலவே செயல்பட்டீர்கள். அதேநேரம், கனிமொழிக்காக 6 கோடி ரூபாய் வாங்கிட்டீங்க எனச் சொல்லி அ.தி.மு.க-வில் சீட் மறுக்கப்பட்ட பிறகுதான், அவசரம் அவசரமாக தி.மு.க அணிக்குப் போனோம். அப்போது பேசிய ஸ்டாலின், `கடைசி நாள் சட்டமன்றம் முடியும் வரையில் அந்த அம்மாவைத்தானே புகழ்ந்தீர்கள்’ எனச் சொல்லும்போது நீங்கள் தலையைக் குனிந்துகொண்டு நின்றீர்கள். அதன்பிறகு கலைஞர்கிட்ட சண்டை போட்டு சீட் வாங்கினோம். `சட்டமன்றத் தேர்தலில் நின்றவர்கள் நிற்கக் கூடாது’ என நிர்வாகக் குழுவில் பேசினோம். ஆனால், நீங்களே மீண்டும் நிற்கக் கூடிய சூழலை ஏற்படுத்திக்கொண்டீர்கள்’ என விவரித்தவர், இறுதியாக, `நீங்கள் அனுப்பிய காரணம் கேட்பு கடிதத்தைத் திரும்பப் பெற்று உங்களுடைய தவற்றைத் திருத்திக்கொள்ளவும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள்

ஹைதர் அலியின் கடிதம் தொடர்பாகப் பேசிய ம.ம.க நிர்வாகி ஒருவர், “தலைமை நிர்வாகக் குழு என ஒன்று இருக்கிறது. தலைவர் என்று ஒருவர் இருக்கிறார். அதற்கு நேர்மாறான செயல்பாடுகளில் ஹைதர் அலி ஈடுபட்டு வருகிறார். இது அமைப்புக்குள் தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. போட்டியாக ஓர் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் அவர் செயல்படுகிறார். இந்த நிலையில், 20 பேர் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இதை விரும்பாதவர்கள், இப்படியெல்லாம் தகவல் பரப்புகிறார்கள். தி.மு.க-வில் சீட் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. த.ம.மு.க என்பது 23 ஆண்டுக்கால அமைப்பு. 2012 முதல் 2018 வரையில் ஹைதர் அலி எந்தப் பொறுப்பிலும் இல்லை. அதன்பிறகுதான் அவரைச் சேர்த்துக்கொண்டோம். தொடர்ச்சியாக முரண்பாடான செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்” என்றார் கொதிப்புடன்.  

ஹைதர் அலியைத் தொடர்பு கொண்டோம். ” வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன்” என்றதோடு முடித்துக் கொண்டார். 

இறுதியாக, ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லாவிடம் பேசினோம். “நாளை நடக்க இருக்கும் செயற்குழுவில் இதுகுறித்து விவாதிக்க இருக்கிறோம். பிரச்னையை முடிவுக்குக்கொண்டு வர நினைக்கிறோம். தேர்தல் தொடர்பான நிலைப்பாடு குறித்தும் நாளை அறிவிக்க இருக்கிறோம்” என்றார் பொறுமையாக.

Leave A Reply

Your email address will not be published.