அமெரிக்காவின் மிகப்பெரும் சர்வதேச முகத்திரையை அன்றே கிழித்தெறிந்த தேசியத் தலைவர்!

0

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் தன்னலப் போக்கு எத்தகையது என்பதை தேசியத் தலைவர் அன்றே தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார்.

இந்தியாவிலிருந்து வெளியாகும் வீக் வார இதழுக்கு 1986ஆம் ஆண்டு தலைவர் வழங்கிய நேர்காணல் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக அமைந்திருந்தது. போராளிக் குழு ஒன்றின் தலைவராக அன்றைய நாட்களில் அவர் விளங்கியபோதும் அவரது பூகோள அரசியல் தீர்க்கதரிசனம் குறித்து பலதரப்பட்ட அரசியல் ஆய்வாளர்களும் வியந்துபேசினர்.

இலங்கையின் இன்றைய மோதலில் அமெரிக்க அரசின் பங்கு பற்றி என்ன கருதுகிறீர்கள்?என்ற கேள்வி பல கேள்விகளில் ஒன்றாக கேட்கப்பட்டது.

அதற்கு தலைவரின் பதில் பின்வருமாறு அமைந்திருந்தது,

”அமெரிக்கா அரசுக்கு இப்பகுதியில் இராணுவ நலன் சார்ந்த, புவியியல் அரசியல் சார்ந்த நலன்கள் உள்ளன. திருகோணமலையில் உள்ள இயற்கைத் துறைமுகம் இந்திய மாக்கடல் பகுதியில் படை முக்கியத்துவம் பெற்றதாக அமைதுள்ளது.

அமெரிக்க வல்லாண்மையின் இலக்கு மெல்ல மெல்ல இலங்கைக்குள் ஊடுருவி இறுதியில் தனது செல்வாக்கிலும் ஆதிக்கத்திலும் இப்பகுதியைக் கொண்டுவந்து விடவேண்டும் என்பதே.

முறுகி வரும் இனப்போராட்டம் ஜெயவர்தன அரசை அமெரிக்க உதவியை நாடி ஓட வைத்துள்ளது. அமெரிக்கா தனது நேச நாடுகளான இஸ்ரேல், பாக்கிஸ்தான், தென் கொரியா, சைனா மூலம் நேரடியாக உதவிவருகிறது.

அமெரிக்காவின் இலக்கு இந்த இனச் சிக்கல் தொடர்வதோடு, பரவிடவும் வேண்டும் என்பதே. அதன்வழி மெல்ல மெல்ல இலங்கை மண்ணில் காலூன்றி, திருகோணமலையில் ஒரு படைத்தளம் அமைப்பது என்பதே அமெரிக்காவின் நோக்கம்.” என சுருக்கமாகவே அமெரிக்கா குறித்த மாபெரும் உண்மையினை பதிலாக வழங்கியிருந்தார்.

இலங்கையின் உள்நாட்டுப்போரில் அமெரிக்காவின் வகிபாகம் என்பது தெள்ளத்தெளிவான சார்பு நிலையினை அடியொற்றியதாக இருந்ததுடன் போருக்குப் பின்னரான அதன் நகர்வுகளும் தமிழர்களால் இலகுவாகவே யூகிக்கக்கூடிய ஒன்றாகவே காணப்படுகிறது.

குறிப்பாக வடகிழக்கில் உக்கிர யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது போரை நிறுத்துவதற்கான எந்தவித முயற்சியிலுமே ஈடுபடாது மௌனம் காத்த அமெரிக்கா, போர் ஓய்ந்ததன் பின்னர் உள்நாட்டு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் தீர்மானத்தினைக் கொண்டுவந்தது.

இதில் தனது பினாமி நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா வெற்றியும் கண்டது. ஆனால் அதற்கு பின்னர் அமெரிக்காவின் நிலைப்பாடு எவ்வாறு அமைந்தது?

உண்மையில் சீன சார்புடைய அரசாங்கமாக சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் போரை வழி நடத்தியவருமான மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் விளங்கியபோதே அமெரிக்கா இந்த விடயத்தில் கரிசனம்கொண்டு சிறிலங்கா அரசாங்கத்தை எச்சரிப்பதுபோல் அல்லது மிரட்டுவதுபோல் நாடகமாடியது. ஆனாலும் கடந்த 2015ஆம் ஆண்டு சிறிலங்கா ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமெரிக்கா தனது மேற்கண்ட முயற்சியில் பின்வாங்கியது.

அமெரிக்காவின் இந்தப் போக்கு இலங்கைக்கு மட்டும் உரித்தானதல்ல. சர்வதேச ரீதியில் நலிவுற்றுக் காணப்படும் நாடுகளில் அவசர நிலையினை சாதகமாகக் கொண்டு தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதையே அமெரிக்கா செய்துவருகிறது.

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் மிக மொடூரமாக இடம்பெற்ற காலத்தில்கூட அதனை நிறுத்துவதற்கான வல்லாதிக்க சக்தி இருந்தும் அமெரிக்கா அதனை விரும்பியதில்லை. ஏனெனில் அமெரிக்காவின் நோக்கம் அதுவாக இருந்ததில்லை என்பதுவே உண்மை நிலைப்பாடாகும்!

Leave A Reply

Your email address will not be published.