அமெரிக்க இரகசிய சேவை தலைவர் பதவி நீக்கம் ! ட்ரம்ப் அதிரடி

0

அமெரிக்க இரகசிய சேவையின் தலைவர் ரந்தோல்ப் அலெஸ்ஸை (Randolph Alles) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக பதவிநீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது பதவிவிலகலை வெள்ளைமாளிகை உறுதிப்படுத்தியுள்ளபோதும், ஜனாதிபதி ட்ரம்ப் அவரை பதவி நீக்கியதை உறுதிப்படுத்தவில்லை.

அவரது இடத்திற்கு ஜேம்ஸ் முர்ரே நியமிக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் மே மாதம் அவர் பதவியேற்கவுள்ளதாகவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர் சாரா சண்டெர்ஸ், கடந்த 2 வருட காலமாக இரகசிய சேவையில் ரந்தோல்ப் சிறந்த சேவையை வழங்கியிருந்தார் என்றும், நாட்டிற்காக கடந்த 40 வருடகாலமாக ஆற்றிய சேவைக்கு ஜனாதிபதி ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கமாகவே இரகசிய சேவை இயங்கிவருகின்றது. உள்நாட்டு பாதுகாப்புத் துறையில் பிரதானி நீல்சென் தனது பதவியை இராஜிநாமா செய்த சிலமணி நேரங்களில் ரந்தோல்பின் இந்த பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, அமெரிக்க – மெக்சிக்கோ எல்லைச்சுவர் விடயத்தில் காணப்பட்ட அழுத்தங்களே நீல்சனின் இராஜிநாமாவிற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் ட்ரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பதவிகளை வகித்தவர்கள் படிப்படியாக பதவி விலகுவதும் பதவிநீக்கம் செய்யப்படுவதும் தொடர்கதையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.