இந்தியத் தேர்தலில் ஈழத் தமிழர்களின் ஆதரவு யாருக்கு?

0

எதிர்வரும் 18ஆம் திகதி இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் பாரிய போட்டி நிலவுகின்றது. தற்போதைய இந்திய பிரதமர் மோடி தொடரந்தும் இந்தியாவின் முதல்வராக இருந்தால் அந்நாட்டின் மாநிலங்கள் அனைத்துக்கும் பாரிய பாதிப்பு என்ற கருத்துக்கள் வலுவடைந்து வருகின்றன. 
பிரதமர் மோடி பிரதமர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னர் பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பல்வேறு குழப்பங்களும் பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கறுப்பு பணத்தை ஒழிக்கும் செயற்பாடு என்று பணப் பெறுமதியழப்பு நடவடிக்கை இந்திய மக்கள் அனைவரிடமும் மோடிமீதான கடும் கோபத்தை அதிகரிக்கச் செய்தது. 
இதனால் இந்திய மக்கள் பெரும் பொருளாதார யுத்தத்தை எதிர்கொண்டனர். தம்மிடமிருந்த பழைய நாணயத்தாள்களை மாற்றவும் சில்லறைப் பணத்தை பெறவும் சில நாட்கள் எதிர்கொண்ட பாரிய நெருக்கடிகள் இந்தியாவின் வரலாற்றில் இடமபெறாத கொடுமை. கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டதா,? அப்பாவி மக்களை துன்புறுத்த இவ்வாறு செய்யப்பட்டதா?
பணத்தை கொள்ளையடிப்பவர்களை இதன் மூலம் தோற்கடிப்பது என்பது மிகவும் சிறுபிள்ளைதனமான செயல். சீப்பை எடுத்து ஒளித்தால் திருமணம் நின்றுவிடும் என்பதுபோல்தான் மோடியின் வேலை. அத்துடன் மோடி பிரதமராகிய பின்னர் செய்த ஒரே சாதனை, உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதுதான். அதில் கிண்ணஸ் சாதனை செய்துள்ளார். ஆடம்பரங்களை அனுபவித்து உலகம் சுற்றிய முதியவர்தான் மோடி அவர்கள். 
சரி, இந்த தேர்தலில் மோடியை எதிர்த்து காங்கிரஸிற்கு ஆதரவு அளிப்பதா இந்தப் பத்தியின் நோக்கம்? பா.ஜ.க கத்தி என்றால் காங்கிரஸ் துப்பாக்கி. பா.ஜ.கா துப்பாக்கி என்றால் காங்கிரஸ் கத்தி. இரண்டுமே ஒன்றுதான். ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இந்த நிலைதான். காங்கிரஸ் ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இழைத்த கொடூரங்கள் கொஞ்சமல்ல. 
ஈழத்தில் மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியதில் காங்கிரஸ் அரசுக்கு பெரும் பங்குண்டு. தமிழகத்தின் எழுச்சிக்கும் கேள்விக்கும் உரிய மரியாதை கொடுக்காமல், இனப்படுகொலையைாளி மகிந்த ராஜபக்சவுக்கு பேராதரவு கொடுத்தது காங்கிரஸ். அத்துடன் விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக ஆயுத உதவிகளையும் இராணுவ உதவிகளையும் தராளமாக வழங்கியது. 
இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலை இந்தியாவின் பேராதரவுடன்தான் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டது. பெரும் ஒத்துழைப்புடன்தான் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. ஈழ இனப்படுகொலை குறித்த நீதி கோரும் செயற்பாட்டில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய விடயத்தில், ராஜபக்சவுடன் காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாவும் தண்டிக்கப்பட வேண்டும். 
இந்திய அளவில் மாற்றுக் கட்சிகள் பலவுண்டு. மாற்றுக் கூட்டணிகள் கூட ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாயாவதி, மம்தாபனர்ஜி போன்ற இந்திய தலைவர்களின் கூட்டணி முயற்சிகள் வலுவாக்கப்படுவது இந்திய மக்களுக்கு மாத்திரமல்ல, ஈழத் தமிழர்கள் போன்ற சிறுபான்மை இனங்களுக்கும் நல்லது. தமிழகத்தில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் இவர்களுடன் நல்லுறவை பேண வேண்டும். 
தமிழகத்தில் உள்ள கட்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் இழைத்த துன்பங்களும் அரசியல் துரோகங்களும் தமிழகத்திற்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை. இதற்காகவே கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் சட்ட மன்றத் தேர்தல்களிலும் தமிழக மக்கள் திமுகாவையும் காங்கிரஸையும் தோற்கடித்தார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்பீட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கும் காட்சியாக மாறியது. 

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர்கள்மீது தவறான புரிதலை கொண்டிருந்தபோதும், பின்னர் தமிழக மக்களுக்காக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அது வரவேற்கத் தக்கது. அவருடைய இழப்பு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பு. தற்போது அக் கட்சி மோடி அரசின் கைக்கூலியாக மாறியுள்ளது. அதனால் இம்முறை தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என கூறப்படுகின்றது. 
எனவே இந்தியாவின் இரண்டு பிரதான கட்சிகளும் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் துரோகம் இழைத்ததுபோலவே தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் செயற்படுகின்றன. எஎனவே மாற்றுக்கட்சி ஒன்றுக்கு இம்முறை தமிழக மக்கள் வாக்களித்துப் பார்க்கலாம். சீமானின் நாம் தமிழர் கட்சி மீது லேசான விமர்சனங்கள் உள்ளபோதும் அக் கட்சி ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழக தமிழ் மக்களுக்காகவும் கடுமையான வேலைகளை செய்து வருகின்றது. 
சீமானின் குரல் தமிழகத்தின் ஆதிக்குரல். தமிழகத்தை மீட்டெடுப்பதே ஈழத்தை மீட்பதற்கு உதவும். தமிழகத்தின் விடுதலையில் ஈழத்தின் விடுதலையும் தங்கியுள்ளது. சீமான் தமிழகத்தின் மீட்சிக்காக செயற்படுகின்ற அரசியல் தலைவர். அத்துடன் தலைவர் பிரபாகரனின் அபிமானத்தையும் வென்றவர். அக் கட்சியில் இன உணர்வு நிறைந்த துடிப்பான இணைஞர்களும் பெண்களும் போட்டியிடுகின்றனர். எனவே இம்முறை நாம் தமிழருக்கு வாக்களிப்பதன் மூலம் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரலை வலுப்படுத்த தமிழக மக்கள் முன்வரவேண்டும். 

Leave A Reply

Your email address will not be published.