இவ்வருட தரம் 5 புலமைப் பரிசில் கட்டாயமானதா?- கல்வி அமைச்சு விளக்கம்!

0

இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் விரும்பினால் தோற்றலாம் எனவும், அவர்கள் தோற்றுவது கட்டாயமானதல்ல எனவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக்க அறிவித்துள்ளார்.

தரம் 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவது கட்டாயமில்லை எனும் அரசாங்கத்தின் நிலைப்பாடு, அதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்ட திகதி முதல் செல்லுபடியாகுமெனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமில்லையெனத் தெரிவித்து கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இலக்கம் 08/2019 எனும் சுற்று நிருபத்தில், தீர்மானம் நடைமுறைக்கு வரும் வருடம் குறிப்பிடப்படாததால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளதாக கல்வி அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து அமைச்சின் மேலதிகச் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

“இதன்படி 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 08 ஆம் திகதியன்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான சுற்று நிருபம் அத்திகதி முதல் நடைமுறைக்கு வருவதனால் இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இச்சுற்று நிருபம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பரீட்சைக்குத் தோற்றுவது குறித்து தமது விருப்பின் அடிப்படையில் தீர்மானத்தை மேற்கொள்ள முடியும். இது பாடசாலை மட்டத்தில் எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்றும் அவர் விளக்கமளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.