ஈழம் வருகின்ற புலம்பெயர் தமிழர்களுக்கு இப்படியும் ஒரு ஆபத்து?; எச்சரிக்கை தகவல்!

0

கடந்த கால உள்ளநாட்டு போரின்போது பல தமிழர்கள் உயிரிழந்தும், பலர் மாற்றுத்திறனாளிகளாகவும் தற்போது வாழ்ந்து வருகின்ற நிலையில், யுத்த வடுக்களை தாண்டிவருவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இப்படியான சூழ் நிலையில்தான் தற்போது விபத்துக்களால் பல உயிர்கள் பறிபோய்க்கொண்டிருக்கின்றன, இந்த விபத்துக்களால் உயிரிழப்பவர்களையும், கடந்த யுத்த கால ஆரம்பங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் உயிரிழந்தவர்களினதும் தொகையையும் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையில்தான் இருக்கின்றது.

பல உயிரிழப்புக்களை பார்த்து மறக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு இந்த விபத்துக்கள் இன்னும் வேதனைகளை கொடுக்கின்றது.

இப்படி விபத்துக்களில் தமிழர் தாயகம் சார்ந்து அதிகம் உயிரிழப்பவர்கள் புலம்பெயர்ந்து பல வருடங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் சொந்த ஊரை பார்க்கும் ஆவலில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இரவு வேளையில் வந்திறங்கி, வடக்கு கிழக்கு நோக்கி நள்ளிரவுகளில் பயணிக்கின்றவர்கள்.

இப்படி பயணிப்பவர்கள் சாரதியின் நிலை தொடர்பில் ஜோசிப்பதும் இல்லை விசாரிப்பதும் இல்லை, வந்திறங்கியவுடன் அவசர அவசரமாக சொந்த ஊருக்கு பயணிக்கின்றனர், குறித்த சாரதி தூக்கக்கலக்கத்தில் வாகனத்தை செலுத்தியோ அல்லது எதிரில் வரும் வாகன சாரதி தூக்கத்தில் வந்தோ இந்த விபத்துக்கள் பெரும்பாலும் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன, ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்க முடியாதா?? பல வருடங்கள் சொந்த ஊரை விட்டு வாழ்ந்த உங்களுக்கு ஒரு இரவு கொழும்பில் ஏதோ ஒரு விடுதியில் தங்கியிருந்து காலையில் பயணிக்க முடியாதா??? அப்படி என்ன அவசரம்?? வரும் விளைவுகளை பற்றி ஜோசிக்க மாட்டீர்களா?? நேரத்தைவிட உயிர் முக்கியம் உறவுகளே இனியாவது கொஞ்சம் கவனமாக செயற்படுங்கள்.

இது ஒரு புறமிருக்க வடக்கு கிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ் இளைஞர்கள் பலர் நாங்கள் எந்த நிலையில் தற்போது இருக்கிறோம் என்பதை மறந்து, எங்களுக்காக உயிரிழந்த உறவுகளை கொஞ்சமாவது நினைக்காமல், அவர்களின் தியாகத்திற்கு ஒரு அளவிலான குறைந்த பட்ஷ தீர்வைக்கூட பெறாமல் வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணத்தில் சொந்த ஊரில் போதைவஸ்துக்களுக்கு அடிமையாகி போதையுடன் வாகனங்களை செலுத்தி தாங்களும் உயிரிழந்து எதிரில் வரும் உறவுகளையும் உயிரிழக்க செய்கின்றீர்கள், உங்களால் ஒழுங்காக செயற்படுபவர்களுக்கும் வீதிகளில் ஆபத்து, வரும் காலங்களில் இதை உணர்ந்து செயற்படுங்கள்.

இது தவிர வீதி ஒழுங்குகளை பின்பற்றாமை, தொலைபேசி பேசிக்கொண்டு வாகனத்தை செலுத்துதல், இரவு வேளைகளில் தூக்கமின்றி வாகனத்தை செலுத்துதல் போன்ற பல காரணங்களினால்தான் இங்கு பல விபத்துக்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன. இனியாவது நீங்கள் உரியமுறையில் செயற்பட்டு உங்கள் பெறுமதிமிக்க உயிர்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் உறவுகளே!

இது தொடர்பில் இலங்கை அரசு சில விடயங்களை கருத்தில் கொள்ளவேண்டும், சாரதி அனுபதிப்பத்திரம் வழங்கும் போது பரீட்சைகளில் சித்தியடையாதவர்கள், மற்றும் வாகனத்தை செலுத்த தெரியாதவர்களுக்கெல்லாம் லஞ்சம் வாங்கிவிட்டு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் லேர்னஸ் எனப்படும் சாரதி பயிற்சி கல்லூரிகளின் அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும், போக்குவரத்து பொலிஸாரை அதிகப்படுத்தி நேர்மையாகவும், மக்கள் மீது அக்கறையுடனும் செயற்பட வைக்க வேண்டும், நள்ளிரவு வேளைகளில் இலங்கையில் செலுத்தப்படும் மகிழுந்து, முச்சக்கரவண்டி, இருசக்கர வாகனங்கள் போன்ற குடும்ப வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் இரண்டு சாரதிகள் இருக்க வேண்டுமென்பது தொடர்பான புதிய சட்டமொன்றை கொண்டுவருவது தொடர்பில் பரிசீலிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

Leave A Reply

Your email address will not be published.