உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் அறிவிப்பு!

0

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை, கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இத்தொடர், குறித்த ஒவ்வொறு புதிய அறிவிப்பினையும் இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அத்தோடு வீரர்களும் உலகக்கிண்ண தொடருக்கான அணியில் இடம்பிடிக்க வேண்டுமென கடுமையாக போராடி வருகின்றனர்.

இதற்கிடையில் இத்தொடரில் விளையாடப் போகும் இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதலாவதாக இந்தியா அணியின் விபரத்தை தற்போது பார்க்கலாம்,

எதிர்பார்ப்பு மிக்க இந்திய அணியில், அம்பத்தி ராயுடு மற்றும் ரிஷப்பந்த் ஆகியோருக்கு அணியில் இடம்கொடுக்கப்படவில்லை.

மாற்று விக்கெட் காப்பாளராக தினேஷ் கார்த்திக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும் சகலதுறை வீரரான விஜய் சங்கர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அத்தோடு அவர் நான்காவது துடுப்பாட்ட

வீரராக களமிறங்கவுள்ளார்.
இதுதவிர, மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக கே.எல். ராகுல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவர் விக்கெட் காப்பாளர் பணியையும் செய்யக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜா அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார். முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

உலகக்கிண்ண தொடருடன் ஓய்வுப் பெறுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆகையால் அவர்கள் வெகு விரைவாக ஓய்வினை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விராட் கோஹ்லி தலைமையிலான அணியில், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், மொஹமட் ஷமி, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்ததாக அவுஸ்ரேலியா அணியின் விபரத்தை பார்க்கலாம்,

அவுஸ்ரேலிய அணியில், ஓராண்டு தடை விதிக்கப்பட்டு தற்போது அத்தடையிலிருந்து மீண்டுள்ள முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

தடைக்காலத்தின் போது வெளிநாட்டு ரி-20 தொடர்களில் விளையாடிவந்த இருவரும், தற்போது எவ்வித சர்வதே போட்டிகளிலும் விளையாடமல் நேரடியாக அணிக்குள் நுழைந்துள்ளனர்.

இருவரும் தற்போது, இந்தியாவில் நடைபெற்றும் ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடிப்பார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதுதவிர அவுஸ்ரேலியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த பிக் பஷ் ரி-20 தொடரில், சிறப்பாக விளையாடிய ஜெய் ரிச்சட்சன், மார்க்ஸ் ஸ்டோனிஸ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆரோன் பின்ஞ் தலைமையிலான அணியில், ஜேசன் பெஹ்ரெண்டாப், அலெக்ஸ் கேரி, நாதன் கோல்டர்-நைல், பெட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லியோன், ஷோன் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜெய் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டோனிஸ், டேவிட் வோர்னர், ஆடம் சம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.