எண்பதுகளில் யாழ்ப்பாணத்திலிருந்த பிரபல தியேட்டர்கள்; மறக்கமுடியுமா?

0

யாழ்ப்பாணத்தில் யுத்த காலத்தின்போதும் அதற்கு முத்திய காலத்திலும் மக்களது பசுமையான ஞாபகச் சிதறல்கள் அவ்வப்போது பகிரப்பட்டுவருகின்றன.

அன்றைய நாட்களில் தமது இளம் பராயத்தில் துள்ளித்திரிந்த காலங்களை இன்றும் சமூக வலைத்தளங்களூடாக அசைபோடுவோர் பலர் உள்ளனர்.

அந்தவகையில் யாழ்ப்பாண மக்களை ஒரு காலத்தில் திரைப்படம் எனும் சினிமாவினூடாக ஈர்த்துவைத்திருந்த பெருமை சில முக்கியமான திரையரங்குகளைச் சாரும்.

ஈழத்து மக்களின் சினிமா இரசனை சற்று வித்தியாசமானது. அன்றைய காலங்களில் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு உள்ளிட்ட தாயகப் பிரதேசங்களைத் தேடி இந்திய சினிமா பிரபலங்கள் வந்துபோனமை ஈழத்துமக்களின் சினிமா இரசனை குறித்த ஒரு எடுத்துக்காட்டாகும்.

யாழ்ப்பாணத்திலிருந்த திரையரங்குகள் பல யுத்தத்தின் பின்னர் காணாமல் போய்விட்டன. ஆனால் அவை குறித்த ஞாபகங்கள் மக்களுக்கு இன்னமும் படர்ந்திருக்கின்றன என்றுதான் சொல்லமுடியும்.

ராஜா, ராணி, வெலிங்டன், லிடோ, றியோ முதலான திரையரங்குகள் மக்களால் காலத்தால் மறக்கமுடியாதவையாகும்.

1.ராஜா திரையரங்கு

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வின்சர் தியேட்டருக்கு முன்பாக(தற்போதைய சதொஷ விற்பனை நிலையம்) இந்த திரையரங்கு தற்பொழுதும் உள்ளது. எஸ்.டி தியாகராஜா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டதால் இது ராஜா என பெயர்பெற்றதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆர் ராஜா திரையரங்கிற்கு வந்துசென்றுள்ளார். இவருடன் சரோஜாதேவியும் வருகைதந்திருந்ததாக கூறப்படுகிறது.

நீரும் நெருப்பும், காவல்காரன், ஒளி விளக்கு போன்ற திரைப் படங்களும் சிவாஜிகணேசனின் பாபு என்ற திரைப் படமும் ராஜா திரையரங்கில் நீண்ட நாட்கள் ஓடின. இலங்கை மற்றும் இந்திய திரையரங்குகளைவிட இந்த படங்கள் ராஜா திரையரங்கில் நீண்ட நாட்கள் ஓடி சாதனை படைத்தன.

2.ராணி தியேட்டர்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக மின்சார சபை வீதியில் இந்த திரையரங்கு அமைந்திருந்தது. பல்கணி வசதியற்று பெரும் பகுதி தகரத்தாலான இந்த திரையரங்கு அந்த நாட்களில் மிகவும் வசதி குறைந்த திரையரங்குகளிலொன்றாக இருந்தபோதும் பல மக்கள் விரும்பிப் பார்க்கத்தக்க முக்கிய திரைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன.

எம்.ஜி.ஆரின் நாளை நமதே, விவசாயி, கமலஹாசனின் சகலகலாவல்லவன், நீயா, சிவாஜி கணேசனின் சொர்க்கம் போன்ற வெற்றிப்படங்கள் இங்கு நீண்ட நாட்களாக ஓடியுள்ளன.

3.வெலிங்டன் தியேட்டர்

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் போதனா வைத்தியசாலையின் பின் வீதிச்சந்தியில் அமைந்திருந்தது. இதுவும் பெரும்பாலும் தகரத்தாலான திரையரங்காக வசதிகள் குறைந்து இருந்தது. ரஜினிகாந்தின் ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம் இங்கு பெருமளவான மக்களால் பார்க்கப்பட்டது.

4.லிடோ தியேட்டர்

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் கஸ்தூரியார் வீதி சந்தியில் அமைந்திருந்தது. இதுவும் பல்கணி இல்லாத அகலத்தால் குறைந்த திரையரங்கமாக காணப்பட்டது. வசதி குறைவானபடியால் கட்டணத்தில் சிறு சலுகை காட்டப்பட்டது. லிடோ மற்றும் வெலிங்டன் ஆகியவை ஒரே முகாமைத்துவத்தின் கீழ் இருந்ததால் சில சந்தர்ப்பங்களில் ஒரே படம் இரு பட மாளிகைகளிலும் 30 நிமிட இடைவெளி விட்டு ஓடும்.

ஒரு திரைப் படங்கள் 30 நிமிடங்கள் கொண்ட நான்கு அல்லது ஐந்து திரைப்படச் சுருள்களால் ஆனவை. முதலில் வெலிங்டனில் திரைப் படம் ஓடத் தொடங்கும். முதலாவது சுருள் ஓடி முடிக்கப்பட்ட பின்பு அந்தச் சுருளை உடனடியாக காரில் எடுத்துக்கொண்டு லிடோ திரைப்பட மாளிகைக்கு கொண்டு சென்று படத்தை ஓடவிடுவார்கள். இப்படியாக திரைப்படச் சுருள்கள் மாறி மாறி பரிமாறப்பட்டு அரை மணித்தியால இடைவெளியில் இரு திரை அரங்குகளிலும் ஓடவிடப்படும். இதனால் திரைப்பட உரிமையாளருக்கு கொள்ளை இலாபம் கிட்டும்.

ஒரு திரைப்பட சுருளை இந்தியாவிலிருந்து காசு கொடுத்து வாங்கி இரு மடங்காக இலாபம் காண்பார்கள் யாழ்ப்பாண திரையரங்க முதலாளிகள். எனினும் எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தான் இவ்வாறாக ஓடக்கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கு பாட்டி சொல்லைத்த தட்டாதே, சிகப்பு ரோஜாக்கள், பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் போன்ற படங்கள் திரையிடப் பட்டன.

5.றியோ தியேட்டர்

யாழ்ப்பாணம் பழைய மாநகரசபை கட்டடத்தின் பின் பகுதியில் சுப்பிரமணியம் பூங்காவுக்கு முன்பாக கண்டி வீதியில் அமைந்து இருந்தது.

6.ஹரன் சினிமா

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் யாழ் கோட்டைக்கு அருகில் அமைந்திருந்தது. திரைப்பட மாளிகையின் பெரும் பகுதி தகரத்தால் ஆனது, வசதிகள் குறைந்த திரைப்பட மாளிகையாக இருந்துள்ளது.

7.சாந்தி தியேட்டர்

யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் யாழ் கோட்டைக்கு அருகில் அமைந்திருந்தது. இதனருகில் முன்பு சம்பந்தன் கிளினிக் இருந்தது, இந்த திரைப்பட மாளிகையின் விசேடம் யாதெனில் சூப்பர் பல்கணி இங்கு இருந்தது, அதாவது பல்கணிக்கு மேல் இன்னுமொரு பல்கணி, சாந்தி தியேட்டர் இப்பொழுது நாதன்ஸ் தியேட்டராக மாறியிருக்கிறது.

8.றீகல் தியேட்டர்

யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்பாக வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்து இருந்தது, அநேகமாக ஆங்கிலப் படங்கள் தான் அதிகமாக இங்கு ஓடும். ரீகல் திரையரங்கிலும் வின்சர் திரையரங்கிலும் சில சந்தர்ப்பங்களில் ஒரே படம் இரு பட மாளிகைகளிலும் 30 நிமிட இடைவெளி விட்டு ஓடும். ஜேம்ஸ் பாண்ட் 007, புரூஸ்லி போன்றோரின் திரைப் படங்களுக்கு இந்த திரையரங்குகளில் இளைஞர்கள் அலை மோதிய காலங்கள் உண்டு.

9.மனோகரா தியேட்டர்

கே.கே எஸ் வீதியில் நாவலர் வீதி சந்தியில் அமைந்திருந்தது, யாழ்ப்பாணத்தில் இருந்த “A” சான்றிதழ் பெற்ற மிகச் சிறந்த, வசதிகள் கொண்ட திரையரங்காக மனோகரா இருந்தது. இங்கு மிகப் பெரிய கார் தரிப்பிடம் இருந்துள்ளது. திரை அரங்கினுள் குடும்ப அறைகளும் காணப்பட்டன.

10. ஸ்ரீதர் தியேட்டர்

ஸ்டான்லி வீதியில் ஆரியகுளம் சந்திக்கு மிக அருகில் உள்ள புகையிரத்தைக் கடவைக்கு அருகில் அமைந்துள்ளது. யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியமான திரைப்படங்கள் பலவற்றை திரையிட்ட வரலாறு இந்த திரை அரங்கிற்கு உண்டு. அதன் பின் பல ஆண்டுகளாக ஈ.பி.டி.பி அமைப்பின் கட்டுப் பாட்டில் கட்சி அலுவலகமாக இருந்தது. எம்.ஜி.ஆரின் மீனவ நண்பன், சிவாஜிகணேசனின் கௌரவம் உள்ளிட்ட வெற்றிப்படங்கள் இங்கு திரையிடப்பட்டன.

11.வின்சர் தியேட்டர்

கே.கே. எஸ் வீதியில் ஸ்டான்லி வீதி சந்திக்கு அருகில் அமைந்து இருந்தது, யாழ்ப்பாணத்தில் இருந்த மிகப் பிரம்மாண்டமான அதிக இருக்கைகள் கொண்ட பெரிய திரையரங்கமாக வின்சர் இருந்தது. அன்றைய யாழ்ப்பாணத்தாருக்கு இந்த திரையரங்கம் குறித்த பெரிய குறைபாடு என்னவெனில் இங்கு கார் தரிப்பிடம் இன்மையாகும். இதனால் தான் இந்த திரையரங்கு அன்று A தரச் சான்றிதழ் பெறத் தவறியது. 90 களின் பின் பல ஆண்டுகளாக யாழ் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பாவனையில் களஞ்சியமாக இருந்தது.

இங்கு சிவாஜி கணேசனின் பைலட் பிரேம் நாத், சுதாகரின் நிறம் மாறாத பூக்கள், கமலஹாசனின் மூன்று முடிச்சு, சிவாசிகணேசனின் வசந்த மாளிகை, வாடைக் காற்று என்ற ஈழத்து தமிழ் திரைப் படம் போன்ற படங்கள் ஓடின.

12. மஹேந்திரா தியேட்டர்

யாழ்ப்பாணம் சுண்டிக்குளி வீதியில் பரியோவான் கல்லூரிக்கு முன்பாக அமைந்து இருந்தது. பின்பு இந்த திரையரங்கை யாழ் பரியோவான் கல்லூரியே வாங்கி கல்லூரி உடைமையாக்கிக் கொண்டது.

இவ்வாறாக யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய சினிமா பட மாளிகைகளாக மேற்கண்ட திரையரங்குகள் அன்றைய நாட்களில் விளங்கின.

எண்பதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட கடும் யுத்த சூழ்நிலைகளால் யாழ்பாணத்து நகர திரையரங்குகள் பல இயங்காத நிலையை அடைந்தன. இதனால் யாழில் நூற்றுக்கு மேற்பட்ட மினி திரையரங்குகள் முளைத்தன. இவை வெறுமனே ஒரு தொலைக்காட்சிப் பெட்டித் திரையரங்குகளே. சிலவற்றில் தொலைக்க காட்சிப் பெட்டிகளின் முன்பு உருப் பெருக்கிக் கண்ணாடி வைக்கப் பட்டிருக்கும்.

இன்று அன்றைய திரையரங்குகளின் எச்சங்களாக இன்னமும் சில திரையரங்குகள் நவீன வசதிகளைக்கொண்டவையாக இயங்கிக்கொண்டிருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.