காயமடைந்தவர்களை மக்களே சுமந்து சென்ற கொடுமை; இறுதிப் போரின் நெஞ்சைப் பிழியும் காட்சிகள்!!

0

இறுதிப் போரில் ஈழத் தமிழர்கள் அனுபவித்த கொடிய அவலங்களின் காட்சிப் படிமங்கள் எக்காலத்திலுமே மறக்கமுடியாதவை.

அந்த வகையில் இறுதிப் போரில் இராணுவத்தால் போர் அற்ற வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்களிலும் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு பல்லாயிரம் மகள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவங்களின்போது படுகாயமடைந்த மக்களை வைத்தியசாலைகளுக்கு சேர்ப்பதற்காய் உறவுகளும் தன்னார்வ அமைப்புக்களும் படாதபாடுபட்டன.

காயமடைந்தவர்களை எவ்வாறு சுமந்து சென்றார்கள் என்பதை விளக்கும் ஒரு சிறிய எடுத்துக்காட்டை இங்கு இணைக்கின்றோம். வன்னியில் இறுதிப்போரின்போது இருந்த ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு என்பவரால் படமாக்கப்பட்டு அவரால் தற்பொழுது இவை வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன.

இதுகுறித்து தனது முகநூலில் அவர் பதிவுசெய்த விடயத்தினை இங்கு தருகின்றோம்…

“படம் எடுக்கிற பல இடங்களில் எனக்கு சனம் கெட்டவார்த்தையில் பேசுவினம். சிலர் திட்டினவர்களே தேநீர் தருவார்கள். அவர்களது வலியையும் பசியையும் என்னால் போக்கமுடியாது. சில இடங்களில் அடிக்க வந்திருக்கினம். “நான் வைத்தியசாலையில் வேலை செய்யிறன். அங்க சொல்லித்தான் எடுக்கிறன்” என்று சொன்னபடியால் பேசமால் போடுவினம்.

ஏப்பிரல் 22 2009 அன்றைய காலை நானும் மதியும் வலைஞர்மடம் சென்றிருந்தோம். வலைஞர்மடத்தில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கே அன்றைய தினம் காயப்பட்டவர்களை கொண்டு செல்லமுடிந்தது. இந்தப்படங்களை நான் எடுக்கும் போது, காயமடைந்த இந்த முதியவரை தூக்கி வந்தவர்கள் என்னை கண்டபடி பேசினவை.

அவர்களால் முதியவரைத்தூக்கிக்கொண்டு கடற்கரை மணலில் நடக்கமுடியவில்லை. துப்பாக்கி ரவைகள் அதிகம் வந்துகொண்டிருந்தது. நான் அவர்கள் பேசினதை காதில் போடாமல் நானும் அவர்களோடு சேர்ந்து மாறி மாறி தூக்கி வந்தேன். அவர்களிடம் நான் எந்த விபரங்களையும் கேட்கவில்லை. அவர்கள் பேசக்கூடிய நிலையில் அப்போதிருக்கவில்லை. கடைசியாக இந்த முதியவரை இரட்டைவாய்க்காலிலும் படம் எடுத்திருந்தேன். அப் பகுதியில் நின்ற ஒருவர் உந்துருளி ஒன்றில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உதவியிருந்தார்.” என அவர் கூறியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.