குண்டு வெடிப்பில் கிழக்கு அரசியல் பிரமுகரின் ஆயுதக் குழு!!

0

மட்டக்களப்பின் காத்தான்குடி பகுதியின் தாழங்குடா, வேடர் குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் உளவுத்துறையின் கவனம் இப்பொழுது மீண்டும் திரும்பியுள்ளது.

கொழும்பிலிருந்து வந்த விசேட புலனாய்வு குழு, காத்தான்குடி பகுதியை மையமாக கொண்டு ஆயுதக்குழு ஏதேனும் இயங்குகிறதா என ஆராய்ந்து வருகிறார்கள்.

கடந்த வாரம், தாழங்குடாவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் அவ்வளவு பெரிய விவகாரமாக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

அல்லது ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காத விதமாக, அந்த செய்தி முழுங்கடிக்கப்பட்டிருந்தது.

கிழக்கில் தொடரும் குண்டு வெடிப்பு, ஆயுத பயன்பாட்டின் தொடர்ச்சியாக பலமுனை வெடிப்பு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

ஆரையம்பதி, மட்டக்களப்பு கட்சி அலுவலகமொன்றில் குண்டு வெடிப்பு, காத்தான்குடியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் என்பன அண்மையில் நடந்தது.

கட்சி அலுவலக குண்டு வெடிப்பிற்கு பின்னர் நடத்தப்பட்ட சோதனைகளில் காத்தான்குடியில் நேரக்கணிப்பு குண்டை பொலிசார் மீட்டிருந்தனர்.

இதேவேளை, காத்தான்குடி கொலைசம்பவத்தின் பின்னர் கைதான ஒருவர் இப்பொழுதும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் சில மாதங்களின் முன்னர் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

கிழக்கின் முக்கிய பொறுப்பை வகிக்கும் அரசியல் பிரமுகர் ஒருவரின் பின்னணியில் இயங்கும் ஆயுதக்குழு பற்றியும், அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடங்களை பற்றியும் தனக்கு தெரியும் என அவர் தெரிவித்திருந்தார், அந்த இடங்களை காண்பிப்பதாக தெரிவித்தும், பொலிசார் அதில் அக்கறை காண்பிக்கவில்லையென தெரிவித்தே, அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் என சில வாரங்களின் முன் ஊடகங்களில் அரசல்புரசலாக தகவல் வெளியாகியிருந்தது.

கிழக்கில் ஆயுதக்குழுவொன்று இயங்குகிறது என சமூகவலைத்தளங்களில் பரவலாக குறிப்பிடப்படுவதுண்டு. அவ்வப்போது, பகிரங்கமாகவும் சிலர் சொல்வதுண்டு.

இந்த நிலையில்தான், தாழங்குடா வெடிப்பு சம்பவம் நடந்தது. ஆட்களற்ற காணிக்குள் இடம்பெற்ற வெடிப்பு பற்றி, காணி உரிமையாளர் பொலிசாரிடம் முறையிட்ட பின்னரே, பொலிசாரின் கவனம் இதில் திரும்பியது.

பொலிசாரின் விசாரணையில் பல அதிரச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அது ஒரு பரீட்சார்த்த குண்டு வெடிப்பு என்பது முதலாவது பரபரப்பு தகவல்.

ஸ்கூட்டிபெப் மோட்டார்சைக்கிளிற்குள் வெடிகுண்டை வைத்து, நேரக்கணிப்பு அல்லது தொலைவிலிருந்து இயக்கி அதை வெடிக்க வைத்துள்ளார்கள் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். அங்கு மோட்டார் சைக்கிளின் சிதைவடைந்த பாகங்கள் இருந்தன.

அந்த பகுதியில் இரண்டு ஆயுதக்குழுக்கள் இயங்குவதாகவும், அவற்றிற்கிடையிலான மோதலின் விளைவாக, மறுதரப்பின் மீது தாக்குதல் நடத்த இந்த ஒத்திகை நடத்தப்பட்டிருக்கலாமென்று பொலிசார் ஏற்கனவே சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

தற்போது இலங்கையின் பல பகுதிகளிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்துள்ளன.

இதை யார் நடத்தினார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. கிழக்கில் சிறியளவில் இடம்பெற்ற முன்னைய சம்பவங்களின் சூத்திரதாரிகளிற்கும், இந்த தாக்குதல்களிற்குமிடையில் ஏதாவது தொடர்புள்ளதா என்பதே இப்பொழுதுள்ள மிகப்பெரிய வினாவாகும்

Leave A Reply

Your email address will not be published.