குறைந்த செலவில் மக்களுக்கு மின்சாரம் ! கருணை காட்டும் ரவி கருணாநாயக்க

0

பொதுமக்களுக்கு குறைந்த செலவில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை சமன் தேவாலயத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டில் மின்சார தேவை மக்களின் அடிப்படை தேவையாக இருப்பதால் இதன் மூலமாக ஏற்பட்டிருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் நான் ஆராய்ந்துள்ளேன்.

குறைந்த செலவில் பொதுமக்களுக்கு மின்சார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நடவடிக்கைகளை மின்சார சபை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன்.

மஸ்கெலியா லக்ஷ்பான நீர்மின் உற்பத்தி அபிவிருத்தியின்போது இந்த அபிவிருத்தி திட்டம் முறையாக நடைபெற வேண்டும் என சமன் தேவாலயத்தில் நேத்திக்கடன் வைக்கப்பட்டது.

அந்த நேத்திக்கடனை இன்று நிறைவேற்ற இப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளேன். அதேநேரத்தில் எதிர்வரும் காலங்களில் மக்கள் மின்சார பாவனையில் சிக்கனமாக ஈடுபட வேண்டும் என விசேடமாக வலியுறுத்துகின்றேன்.

இங்கிலாந்தில் தேங்காய் ஒன்று மரத்திலிருந்து விழுந்தால் இது ஆளுங்கட்சியின் ஏற்பாடு என்று குறை கூறுகின்றார்கள். ஆனால் எதிர்க்கட்சியை விட ஆளுங்கட்சியின் ஊடாகவே மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என நாம் முயல்கின்றோம்” என தெரிவித்ததார்.

இதேவேளை எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்படும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் சதியா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுப்பு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.