கோட்டாவை எண்ணி சர்வதேசம் அச்சம் ! பொரிந்து தள்ளும் பொதுஜன பெரமுன

0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எண்ணி சர்வதேசமும் அச்சமடைந்துள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் மீது அன்பு கொண்ட ஒரு நபர். அவருக்கு எதிராக இந்த அரசாங்கம் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதில் ஒன்றிலும் அவரை சிறைபிடிக்க முடியவில்லை.

எனவே தற்போது போர்க்குற்றங்களை மையப்படுத்தி, ஜஸ்மின் சூக்கா ஊடாக அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவதற்காக இவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவை மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட வேண்டும் என்பதாகும்.

இவர்களுக்கு தலையில் ஆணி அடிக்க வேண்டும். தற்போது வரைக்கும் அவருக்கு எதிராக எந்தவொரு அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்பதை நாம் உறுதியாக கூறுகின்றோம். அவருக்கு ஐக்கிய தேசிய கட்சி மாத்திரம் அல்லாது முழு சர்வதேசமும் அஞ்சியுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்வதே அவர்களது நோக்கம். அதற்கு எதிராக நாம் போராடுவோம். இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினர் சிறிய சந்தோசத்தை அனுபவிக்கின்றனர்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.