சீமான் எனும் சிற்பி!

0


ஆடு, மாடு மேய்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன், என்று சீமான் சொன்னது முதலாக, தொடர்ந்து அவரை ஒரு பழைமைவாதி என்ற போர்வைக்குள் அடைக்க பலரும் துடிக்கின்றனர். எம்பிபிஎஸ் படித்தவர்களை மாடு மேய்க்கச் சொல்கிறார் சீமான் என்று மேடைகளில் பேசி கைத்தட்டல் வாங்குவதை பகுத்தறிவு அதிமேதாவிகள் பலரும் பெருமையாகக் கருதுகின்றனர்.

சீமான் பேசுவது தாய்மைப் பொருளாதாரக் கொள்கை. அதை கொஞ்சம் ஆழமாக எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். ஓர் அரசனுக்கு உரிய தர்மம் என்பது கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய தர்மம் என்கிறது மகாபாரதம். அப்படி என்றால் என்ன? எது தனக்கு சுவையான உணவோ, அதனை ஒரு கர்ப்பிணி உண்ணக் கூடாது. தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எது சிறந்த உணவோ அதனையே தாய் உண்ண வேண்டும். அதுதான் கர்ப்பிணிகளுக்கான தர்மம்.

அதுபோலதான் நாட்டின் தற்போதைய தேவை உணர்ந்து சட்டத்திட்டங்களை வகுத்துக் கொள்வதுதான் அரசனுக்கான தர்மம். சீமான் ஆடு, மாடு மேய்த்தல் அரசு பணியென சொல்வது நிகழ்காலத் தேவை சார்ந்தது. எம்பிபிஎஸ், எம்பிஏ, எம்எஸ்ஸி படித்த எவரையும் சீமான் மாடு மேய்க்கச் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் இன்றும் 16% மக்கள் படிப்பறிவு அற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தான். அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் உருவாக்கிக் கொடுப்பதுதான் ஒரு அரசின் கடமை. அந்த படிப்பறிவு அற்ற மக்களுக்குதான் ஆடு, மாடு மேய்க்கின்ற பணி வழங்கப்படும்.

படித்தவர்களுக்கு நாம் தமிழர் அரசு அமைக்கும் பால் பண்ணைகளில்தான் வேலை வழங்கப்படும். மறுபடியும் பால் பண்ணைகளில் வேலை செய்யவா? நாங்கள் எம்பிஏ, எம்எஸ்ஸி படித்தோம் என்று யாரும் கூப்பாடு போடவேண்டாம். ஏற்கனவே ஹட்சன், ஆரோக்கியா போன்ற பால் பண்ணைகளில், எம்பிஏ படித்தவர்களும் எம்எஸ்ஸி மைக்ரோ பையாலஜி, எம்எஸ்ஸி கெமிஸ்ட்ரி படித்தவர்களும்தான் பெருமளவில் பணி புரிகின்றனர். கை நிறைய சம்பாதிக்கின்றனர். ஏற்கனவே, தனியார் பால் பண்ணைகளில் இலாப நோக்கத்திற்காக யூரியாக் கலப்படப் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அமைய இருக்கும் நாம் தமிழர் அரசு, தரமான பால், பால்கோவா, பால் பவுடர், வெண்ணெய், தயிரு, மோர், பால் சார்ந்த இனிப்பு பண்டங்கள் போன்ற பலவிதமான பொருள்களை பண்ணைகளில் உற்பத்தி செய்யும்.

அந்த பண்ணை முழுக்க முழுக்க கணிப்பொறி வசதியால் கட்டமைக்கப்படும். எனவே எம்எஸ்ஸி, பிஎஸ்ஸி கணினி, பிசிஏ படித்தவர்கள் பலருக்கும் பால் பண்ணையில் வேலை வழங்கப்படும். உற்பத்தி செய்யப்பட எல்லா பால் பொருள்களையும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்கு பிபிஏ, எம்பிஏ, எம்சிஏ படித்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும். இப்படிதான் சீமான் சொல்கின்ற எல்லா நிலமும், அதன் வளமும் சார்ந்த தொழிற்சாலைகளும் கட்டமைக்கப்படும்.

அதன் வழியாக படித்தவர், படிக்காதவர் அத்தனைப் பேருக்கும் வேலை வழங்கப்படும். அரசின் அடுத்த இலக்காக படிக்காதவர்களே இல்லாத சூழலையும் உருவாக்க அரசு முயலும். வேலையில்லாத வெட்டி பயல்கள்தான், ‘சீமான் அதை எப்படி செய்வார்?, சீமான் இதை எப்படி செய்வார்?’ என்று கேள்விக் கேட்டுக் கொண்டே இருக்கிறனர். ஆனால் உண்மையில் சீமான் தனக்கான பாதையில் சரியாகவே பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார். எந்தவிதமான அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் சீமானுக்கு எதிராக எழுப்பப்படும் எல்லா விமர்சனங்களும் சீமானை இன்னும் இன்னும் மெருகேற்றவே பயன்படுகிறது.

அரைகுறை பகுத்தறிவு அதிமேதாவிகள் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சீமானுக்கு எதிராக வீசுகின்ற எல்லா ஆயுதங்களும் அவரை மேலும் மேலும் பட்டைத் தீட்டவே பயன்படுகிறது. அவர் அமைக்க இருக்கும் நாம் தமிழர் அரசிற்கான சட்டத்திட்டங்களையும், செயல்பாட்டு வழிமுறைகளையும் மேலும் மேலும் செறிவோடு செதுக்கிக் கொள்ளவே நீங்கள் எறியும் விமர்சனம் எனும் ஆயுதங்கள் அவருக்கு பயன்படுகிறது. விமர்சனம் என்ற பெயரில் அவரை பழைமைவாதி என்று கூட்டுக்குள் அடைக்க நீங்கள் அத்தனைப் பேரும் செய்கின்ற முயற்சியை எங்களால் நன்கு உணர முடிகிறது.

சீமான் பேசுகின்ற அரசியல், வாழ்வியல் அனைத்தும் பழைமைவாதம் அல்ல. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நிலத்தில் பின்பற்றப்பட்டு வந்த ஒரு வாழ்வியல் நெறி. இடைப்பட்ட திராவிட ஆட்சியில் கொஞ்சம் தமிழர்கள் நெறி பிறழ்ந்து வாழப் பழகிவிட்டனர்.

அதனை மீண்டும் சரி செய்கின்ற வேலையைத்தான் சீமான் தொடங்கி இருக்கிறார்… ஏனெனில் சீமான் தமிழர்களிடம் இருக்கும் தவறுகளை நீக்கி, சரியான திசையில் பயணிக்க வைத்து, ஓர் அறம் சார்ந்த அரசை நிறுவத் துடிக்கும் ஒரு சிற்பி. ஒரு சிற்பிக்குத்தான் தெரியும் ‘எதைச் செதுக்க வேண்டும்; எதைச் சிதைக்க வேண்டும்’ என்று. திராவிடம் பழைமையான காலாவதியான தத்துவம். அதன் காலம் முடிந்துவிட்டது. இது தமிழ்த்தேசியத்தின் காலம். சீமான் தமிழ்த்தேசிய சிற்பி. இதுதான் உண்மை. இதுமட்டும்தான் உண்மை..

-பேராசிரியர் ஆ.அருளினியன்

Leave A Reply

Your email address will not be published.