சீமான் நல்லவரா? கெட்டவரா?

0

இன்னும் சீமான் நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்காதீர்கள் ஈழத்தமிழர்களே! அன்னை பிரபாகரன் சாதிக்காததை அண்ணன் சீமான் சாதித்துவிடுவாரா? அன்னை இழந்த ஈழத்தை அடையும் வலிமை உங்கள் அண்ணனிடம் உள்ளதா?என்று நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்பதால் மட்டும் எதை நீங்கள் சாதித்துவிடப் போகிறீர்கள்? 
போதும் கொஞ்சம் சீமானை உற்று கவனியுங்கள்.

நடந்து கொண்டு இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் தமிழகத்தில் இருக்கும் திராவிட, தேசிய, சாதி, மதக் கட்சிகளில் இருந்து ஒரேவொரு தலைவர் கூட ஈழத்தின் விடுதலையே எங்கள் இலட்சியம்’ என்று பேசுவதில்லை. தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த பதாகையோடு எந்தக் கட்சி தேர்தலில் களமாடுகிறது? 
தமிழக நிலத்தில் வாழும் மக்களுக்கு, இதுவரை ஈழத்தமிழர்கள் அடைந்த இன்னல்களை, இழந்த உரிமைகளைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு சீமான் ஒருவரைவிட்டால் வேறு நாதியில்லை என்பதை என்று நீங்கள் உணரப்போகிறீர்கள்?

ஒருநாள் இந்த அதிகாரம் என் கையில் சிக்கும்.. அன்னைக்கு நீங்க செத்திங்க என்ற வரியை திமிரோடு வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் சீமான் பேசிய வரிக்கு பின்னுள்ள தகவல் என்ன? அதை அவர் சொல்லும் போது வெறும் உதட்டளவில் இருந்தா சொன்னார்? உயிரை உருக்கி உள்ளத்தில் இருந்து சொன்னாரா?

அந்த வரிகளை மீண்டும் ஒருமுறை கேளுங்கள். அடிபட்ட ஈழத்தமிழர்களாகிய நீங்களே சிங்கள அரசையும் இந்திய அரசையும் மன்னித்துவிட்டாலும், சீமான் ஒருபோதும் மன்னித்துவிடப் போவதில்லை. வஞ்சம் தீர்க்கமால் இந்த புலியும் ஓயாது. இந்த புலியால் வளர்க்கப்படும் நாம் தமிழர் குடும்பத்தின் பிள்ளைகளும் ஓயப்போவதில்லை.

தமிழக நிலத்தில் இன்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று யோசியுங்கள்? 
ஒரு பக்கம் ஐபிஎல் தொடக்கம், இன்னொரு பக்கம் டாஸ்மாக் கடைகள், மற்றொரு பக்கம் சினிமா போதை. இத்தனை போதைகளையும் கடந்து, தமிழகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் களத்தில் புலிக்கொடியோடும், தலைவர் பிரபாகரன் படத்தோடும் வீடு, வீடாக துண்டறிக்கைகளைத் தூக்கிக் கொண்டு, கடுமையான கோடை வெயிலென்றும் பாராமல், வெறிகொண்ட வேங்கைகளாக, ஓடுவதன் காரணகர்த்தா யார்?

என் வயதொத்த என்னுடைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் பலரும் ஐபிஎல் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களில் ஒருவருக்கும் ஈழம் என்றால் என்னவென்றே தெரியாது. தலைவரின் பெருமைகள் எதுவொன்றும் தெரியாது. ஈழம் நம் தாய்மொழிக்கான தேசம் உலகத் தமிழர்களுக்கான தேசம் என்பதே அவர்களுக்கு தெரியாது. இந்த போதைச் சமூகத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம், இத்தனை ஆயிரம் பிள்ளைகள் வெறிகொண்டு களத்தில் பரப்புரை செய்யும் ஓர் இலட்சிய நோக்கத்தை அவர்களின் நெஞ்சில் விதைத்த காரணகர்த்தா யார்?

எந்த அதிகாரத்தை வைத்து நம் கனவு தேசத்தை திராவிட, தேசியக் கட்சிகள் சிதைத்தனவோ, அந்த அதிகாரத்தைக் கொண்டுதான் மீண்டும் எழுவோம்!’ என்ற புரிதலை மெல்ல மெல்ல தமிழ் இளையோர் கூட்டத்திற்கு தினம் தினம் தெருவெங்கும் கற்பித்துக் கொண்டு இருக்கும் சீமான்தான், அனைத்துக்குமான காரணகர்த்தாவாக நிற்கிறார் என்பதை நீங்கள் இன்னுமா உணரவில்லை?

போதும் உங்களின் அற்ப கேள்விகளை ஓரமாக எடுத்து வையுங்கள். அனைவரையும் நம்புவது எவ்வளவு பெரிய பிழையோ, அதற்கு சற்றும் குறைவில்லாதது ஒருவரையும் நம்பாமல் இருப்பது. உங்களுக்கு எங்களைவிட்டால் வேறுவழியில்லை. எங்களுக்கு உங்களைவிட்டால் வேறுவழியில்லை. ஏனெனில் நாம் தமிழ்தாயின் பிள்ளைகள். நம்புங்கள். அன்னை தேசியத்தலைவர் மீது உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்ததோ, அதே நம்பிக்கையை நாங்கள் எமது அண்ணன் சீமான் மீது வைத்திருக்கின்றோம்.

சீமான் என்ற ஒற்றை மனிதன், ஈழம் குறித்தான இதுவரை எமது தமிழக மக்களுக்கு இருந்த எல்லா புரிதல்களின் மீதும் பெரும் மாற்றத்தை உருவாக்கி முடித்து இருக்கிறார். ஈழம் கட்டாயம் மலரும். அதனை இந்த தாய்கத் தமிழகத்தில் இருந்து கட்டாயம் நாங்கள் நிகழ்த்தி முடிப்போம். அன்னை உங்களை எப்படி வழிநடத்தினாரோ, அப்படித்தான் எம்மையும் எமது அண்ணன் சீமான் வழிநடத்துகிறார். எம்மிடம் இருந்து இனியும் விலகி நிற்காதீர் ஈழ உறவுகளே!

நாங்கள் ஈழத்தின் விடுதலைக்காகத்தான் வெறி கொண்டு ஓடுகிறோம் என்பதை நிரூபிக்க எங்கள் நெஞ்சங்களை பிளந்து எல்லாம் காட்ட முடியாது. நீங்கள் நம்பினாலும், நம்பாமல் போனாலும் நாங்கள் கட்டாயம் ஒருநாள் திருப்பி அடிப்போம். இதனை ஏற்பவர்கள் ஒன்றுபடுங்கள்.

அப்படி ஒன்றுபடுகின்ற ஈழத்தமிழர்கள் அண்ணன் சீமானுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தோளுக்கு துணையாக நில்லுங்கள். உங்களின் சக்திக்கு தகுந்தவற்றை நாம் தமிழரின் வெற்றிக்காக செய்யுங்கள். உலகம் முழுவதும் வாழ்கின்ற ஈழ உறவுகளுக்கு, தமிழகத்தில் நண்பர்களுண்டு. அவர்கள் அனைவரும் அவரவர் வாழும் நிலத்தில் இருந்து, தமிழக உறவுகளிடம் அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வாக்கு சேகரியுங்கள். உலகம் முழுவதும் அகதியாக்கப்பட்ட 40 இலட்சம் ஈழத்தமிழரும் ஒரேவொரு வாக்கை அங்கிருந்து மாற்றினாலும், அது இமாலய பாதிப்புகளை தமிழக அரசியலில் ஏற்படுத்தும்.

இணைய உலகை கட்டியாளும் ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்டு, நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாக்கை திரட்ட ஆரம்பித்தால் தமிழக அரசியல் வரலாற்றையேப் புரட்டிப் போடமுடியும். இணையம் உங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இனி தமிழக அரசியலும் உங்கள் கண் அசைவில் இருக்கும். பேரறிவும், பேராற்றலும் மிக்க உங்களால் இதனை சாதிக்க முடியுமென நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்…

திராவிட, தேசியக் கட்சிகளின் வாக்கு வாங்கிகளை தமிழகப் புலிகளாகிய நாம் தமிழர் புலிகள் தரையில் தாக்கி அழிக்கத் தொடங்கிவிட்டனர்… 
வான்படை கண்ட ஈழத்தமிழர்களே…
நீங்களும் உங்களின் பங்கிற்கு இணைய வழியில் வேட்டை ஆடுங்கள்…

புலிகளின் வேட்டையில் நரிகளின் வாக்கு வங்கிகள் கிழித்தெறியப்பட்டது என்ற வரலாற்றை எழுதுவோம் வாருங்கள் உறவுகளே… 
ஏனெனில்…

தமிழீழ தாகம்…
தமிழர்களின் தணியாத தாகம்…

-பேராசிரியர் ஆ.அருளினியன்

Leave A Reply

Your email address will not be published.