ஜூலியன் அசாஞ்சிற்கு நெருக்கமானவரும் கைது ! தொடரும் அதிரடி

0

விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சிற்கு (Julian Assange) நெருக்கமான ஒருவர் ஈக்குவடோரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஈக்குவடோரிலிருந்து ஜப்பானுக்குச் செல்ல முற்பட்டபோது நேற்று (வியாழக்கிழமை) அவர் கைதுசெய்யப்பட்டதாக ஈக்குவடோர் உட்துறை அமைச்சர் மரியா பவுலா தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் நிமித்தமே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உட்துறை அமைச்சர் அவரது பெயர் விபரங்கள் குறித்து அறிவிக்கவில்லை. ஆனால் அவர் ஒரு சுவீடன் நாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர் என அரசாங்க அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ராஜதந்திர ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து, அசாஞ்சிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. அவருக்கு ஈக்குவடோரில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டபோதும், அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளுக்கு தொடர் பயணங்களை மேற்கொண்டார். பின்னர் பிரித்தானியாவிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் அசாஞ் அடைக்கலம் புகுந்தார். அசாஞ்சிற்கு வழங்கப்பட்ட அகதி அந்தஸ்தை தற்போது ஈக்குவடோர் மீளப் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து நேற்று லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் கைதுசெய்யப்பட்டார்.

அவர் கைதுசெய்யப்பட்டு சில மணி நேரங்களில், அவருக்கு நெருக்கமான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அசாஞ்சை தம்மிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.