நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் தப்பி ஓட்டம் ! யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம் !

0

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் கீழ் தளத்தின் ஊடாகப் பாய்ந்து பின் வாயிலூடாக தப்பித்து ஓடியுள்ளார்.

யாழ்ப்பாணம், கொட்டடி முத்தமில் வீதியைச் சேர்ந்த பாலராசா விஜிகாந்த என்ற சந்தேகநபரே இன்று (திங்கட்கிழமை) இவ்வாறு பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பித்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வழக்குத் தவணைகளுக்கு ஒழுங்காக முன்னிலையாக சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பிடியாணை உத்தரவை நிறைவேற்றிய கோப்பாய் பொலிஸார் சந்தேகநபரை நேற்று கைது செய்தனர்.

இந்த நிலையில் அவரை நீதிமன்றில் முற்படுத்த இன்று பொலிஸார் அழைத்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரை நீதிமன்றின் உள்பகுதியில் நிற்கவைத்துவிட்டு, பதிவாளரின் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சந்தேகநபர், நீதிமன்றின் பின்புறமாக உள்ள கீழ் தளத்துக்குள் பாய்ந்து நீதிமன்ற வளாகத்துக்கு பின்பக்கத்தால் தப்பித்துள்ளார்.

இதனை அடுத்து சந்தேகநபரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.