மண்டைதீவு காணி சுவீகரிப்பு ! அளவீடு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை

0

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த பணிகள் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படும் என நில அளவை திணைக்களம் அறிவித்துள்ளது.

காணி சுவீகரிப்பு சட்டத்தின்கீழ் நாளை காலை 9 மணி தொடக்கம் அடுத்துவரும் நாட்களில், குறித்த காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் அளவீடு செய்வதற்காக காணிகளுக்குள் பிரவேசிக்கவுள்ளதாக, காணி உரிமையார்களுக்கு அரச நில அளவையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

யாழ். வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணியினை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது. 11 தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் காணிகளை கையகப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், காணிகள் சுவீகரிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமக்கு தெரியாமல் காணியை கையகப்படுத்த முடியாது என தெரிவித்திருந்தார். அத்தோடு ஒரு துண்டு காணியைக்கூட பாதுகாப்பு தரப்பினருக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்றும் இந்த விடயம் குறித்து உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.