மண்டைதீவு போராட்டத்தின்போது பொதுமக்களை அச்சுறுத்திய இராணுவ புலனாய்வாளர்கள் !

0

மண்டைதீவு போராட்டத்தின்போது பொதுமக்களை மனரீதியாக அச்சுறுத்தும் வகையில் புலனாய்வு அதிகாரிகள் செயற்பட்டதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினர் சுவீகரிப்பதற்காக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்த நில அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன்போதே புலனாய்வாளர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “போராட்டத்தின்போது பாதுகாப்புக்காக பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். பெரிய வாகனங்களும் கொண்டுவரப்பட்டிருந்தன. இதன்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் காணொளி எடுப்பது செய்தி சேகரிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, நான் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துமாறு அவர்களிடம் தெரிவித்தேன்.

மண்டைதீவில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் எந்தப்பகுதியிலும் கட்டாய காணி சுவீகரிப்பிற்கு இடமளிக்க மாட்டோம். தற்போது ஜனநாயமாக நடக்கும் போராட்டங்கள் எதிர்காலத்தில் புரட்சிகரமான போராட்டமாக மாறும்” என மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.