யாழ். சுன்னாகம் நிலத்தடி மாசு விவகாரம் ! அதிரடி தீர்ப்பு வழங்கியது உயர்நீதிமன்றம் !

0

யாழ்.சுன்னாகம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் காரணமாக பிரதேச மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு இருபது மில்லியன் ரூபா(இரண்டு கோடி )நஷ்டஈடு செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் இன்றைய தினம்(04) சுன்னாகம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணித்த நொதேர்ண் பவர் நிறுவனத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 40,000 ரூபாவுக்கும் குறையாத நஷ்டஈடு செலுத்த வேண்டுமெனக் குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் சுன்னாகம் அனல் மின்னுற்பத்தி நிலையத்திற்கெதிரான வழக்கு இன்றைய தினம்(04)பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் அனல் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வௌியேறும் கழிவொயில் பிரதேசத்திலுள்ள கிணறுகளில் கலப்பதால் நீர்மாசடைவதன் ஊடாக குறித்த பகுதியில் வாழும் மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாகத் தெரிவித்து 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் மின்னுற்பத்தி செயற்பாடுகளுக்கு தடை விதித்து கடந்த- 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்- 31 ஆம் திகதி இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.