யாழ் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் நடந்த புதுமை? நேர்த்தி பலித்ததால் நெகிழ்ச்சியடைந்த குடும்பம்!

0

யாழில் பிரசித்தி பெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் உற்சவத்தில் கலந்து கொண்டிருந்த மூதாட்டியிடம் ஏமாற்றி மூன்று பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்ற சந்தேகநபர் நேற்று அதே மூதாட்டியால் இனம் காணப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த மூன்றாம் பங்குனித் திங்கள் உற்சவத்துக்காக யாழ். அச்சுவேலியிலிருந்து மூதாட்டியொருவர் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது குறித்த மூதாட்டியின் மகன் விபத்தொன்றில் சிக்கி சாவகச்சேரி ஆதார வைத்தியாசாலையில் சிகிச்சைகளுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவரது சிகிச்சைகளுக்காகப் பணம் தேவைப்படுவதாகவும் அங்கு நின்ற நபரொருவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி தன்னிடம் பணம் எதுவுமில்லை எனத் தெரிவித்துத் தான் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுண் தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து தங்கச் சங்கிலியை வாங்கியவர் அங்கிருந்து வேகமாகச் சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர் அங்கு வருகை தந்த மகன் நடந்த விடயங்களை அறிந்து மிகவும் மனம் வருந்தியுள்ளார். பின்னர் மூதாட்டியும், மகனும் அம்பாளிடம் மனம் நொந்து நேர்த்தி வைத்த பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் பங்குனித் திங்கள் உற்சவத்தின் இறுதி நாள் மேற்படி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினமும் குறித்த மூதாட்டி தனது மகனை அழைத்துக் கொண்டு ஆலயம் சென்றுள்ளார். ஆலயத்தில் வழிபாடுகள் ஆற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது கடந்த பங்குனித் திங்கள் உற்சவத்தின் போது குறித்த மூதாட்டியிடம் ஏமாற்றி தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்ற சந்தேகநபர் அங்கு நின்றுள்ளதை அவதானித்த மூதாட்டி இதுதொடர்பில் மகனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மூதாட்டியின் மகன் குறித்த நபரைக் கையும் மெய்யுமாகப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

இதனையடுத்துப் பொலிஸார் சந்தேகநபரிடம் நடாத்திய விசாரணையில் மூதாட்டியிடம் ஏமாற்றி தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளான். சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, சங்கிலியைப் பறிகொடுத்த மூதாட்டியும், மகனும் இதுதொடர்பில் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் மீது நம்பிக்கை வைத்து மனமார வைத்த நேர்த்தி வைத்ததாகவும் அந்த நேர்த்தி பலித்து விட்டதாகவும், தங்கச் சங்கிலியை ஏமாற்றி அபகரித்துச் சென்றவரை இதே ஆலயத்தில் வைத்து அடையாளம் காண உதவியது அம்பாளின் திருவருளே எனவும் தற்போது தகவல் பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.