உலகக் கிண்ணத் போட்டி ! தென்னாபிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!

0

உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அந்தவகையில் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்களால் வெற்றியை சுவீகரித்தது.

2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியது. இந்நிலையில், இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின.

லண்டனிலுள்ள கென்னிங்டன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பென் ஸ்ரோக்ஸ் 79 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன், இயன் மோர்கன் 57 ஓட்டங்களையும், ஜெஸன் ரோய் 54 ஓட்டங்களையும், ஜொய் ரூட் 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்கா அணி சார்பில் பந்துவீச்சில், லுங்கி நெகிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, இம்ரான் தகீர் மற்றும் ரபாடா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு அன்டில் பெஹ்லுவாயோ ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், 312 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தென்னாபிரிக்க அணி ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுததினாலும், பின்னர் இங்கிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சுக்களை எதிர்கொள்ள தடுமாறினர்.

இதனால், தென்னாபிரிக்க அணி, 39.5ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அந்தவகையில் 104 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா தோல்வியைத் தழுவியது.

அணி சார்பாக, டி ஹொக் 68 ஓட்டங்களையும், டேர் டுஸ்ஸென் 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்சர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அத்துடன், லியம் பிளங்கட் மற்றும் ஸ்ரோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அடில் ரஷிட் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் அதீத திறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த பென் ஸ்ரோக்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இந்த தொடரில் தனது முதலாவது வெற்றியைப் பதிவுசெய்தது.

Leave A Reply

Your email address will not be published.