சிங்களவர்கள் கிளர்ந்தெழுந்தால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கும்! மல்வத்து பீடம் எச்சரிக்கை

0

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கத் தவறினால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என்று சிறிலங்காவின் சிங்கள பௌத்த தலைமை பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சில பொலிஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பாதுகாத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள மல்வது பீடத்தின் துணை மகாநாயக்கர் திம்புல்கும்பரே விமலதம்ம தேரர், இந்த நிலமைகள் தொடர்ந்தால் சிங்கள மக்கள் கிளர்தெழுந்து சட்டத்தை கையில் எடுப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கோட்டேகொட நேற்றைய தினம் மாலை கண்டிக்கு விஜயம்செய்திருந்தார்.

இதன்போது சிங்கள பௌத்த மக்களின் மிக முக்கிய வணக்கஸ்தளமான கண்டி சிறி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பாதுகாப்பு செயலாளர் பின்னர் அஸ்கிரி – மற்றும் மல்வது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட மல்வத்து பீட துணை மகாநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது சில பொலிஸ் அதிகாரிகள் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளுக்கு உதவுவதாக குற்றம்சாட்டிய மல்வது பீட துணை மகாநாயக்கர், சில அரசியல்வாதிகளும் குற்றவாளிகளை காப்பாற்றி வருவதாக சாடினார்.

“இன்னமும் பாரதூரமான நிலைமைய காணப்படுகின்றது. சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளே இதற்குக் காரணம். அவர்கள் சிலரிடம் சில சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, சிலருக்கு சில தகவல்களை வழங்குகின்றனர்.

அந்த நிலைமையால்தான், தேடுதல் நடவடிக்கைகளின்போது மீன் வெட்டும் கத்தியைக் கூட கைப்பற்ற முடியாது போயுள்ளது. எமது அதிகாரிகளிடம் காணப்படும் சில குறைபாடுகளே அவை, அதிகாரிகள் மாத்திரமல்ல, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களும் அவ்வாறுதான் செயற்படுகின்றனர். குற்றவளிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன.

அதனால் இந்த விடயங்களில் சிந்தித்து செயற்பட வேண்டும். இந்த சிங்களவர்கள் இதனைத் தொடர்ந்து பொறுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள். அவ்வாறு அவர்கள் கிளர்ந்தெழும் பட்சத்தில், ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்தே, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டி ஏற்படும். அவ்வாறான ஒரு விடயம் நடந்துவிடக்கூடாது என நான் பிரார்த்திக்கின்றேன்.

சிங்கள பாதாள உலக்குழுக்களிடம் பல ஆயுதங்கள் காணப்படுவதாகவும், அதுத் தொடர்பில் ஆராய்வதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் மல்வது பீட துணை மாகாநாயக்கர் விமலதம்ம தேரர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

“சிங்கள பாதாள உலக்குழுக்களிடம் பல ஆயுதங்கள் காணப்படுகின்றன. அதுத் தொடர்பில் ஆராய்வதும் இல்லை. தேடிப்பார்த்து கண்டுபிடிப்பதும் இல்லை. மதுஷ் போன்றவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களும் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக வெளியாகும் செய்திகள், சிலரை தோலுரித்துக் காட்டும். அது தொடர்பில் பல தகவல்கள் வெளியாகும் என நினைக்கின்றேன்.

இவைத் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் நீங்கள் அவதானம் செலுத்த வேண்டும். முஸ்லிம்கள் பள்ளிகளை அமைக்கின்றனர், அமைப்புகளை தோற்றுவிக்கின்றனர். எனினும் அவர்கள் எம்மை, வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கோ, புராதன இடங்கள் தொடர்பில் ஆராயவோ இடமளிக்கமாட்டார்கள்.

எனினும் தெற்கில் பாருங்கள் 20 குடும்பங்கள் இருந்தால் பள்ளிவாசல் ஒன்றை அமைத்துவிடுகின்றார்கள். நாம் அதனை தடுக்கவில்லை. இவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது”.

Leave A Reply

Your email address will not be published.