முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்ச்சியில் தீபம் ஏற்றிய இந்தச் சிறுமி யார் தெரியுமா?

0

ஈழத்தமிழர் வாழ்வில் மீளவே துயரத்தை அளித்த மாதம் மே. 2009-ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் மீதான கொடூரமான போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தைக் கடந்தது என்கிறார்கள், அங்கு தற்போது வசிக்கும் மக்கள். இப்பேரழிவு நடந்து பத்தாண்டுகளாயிற்று. அந்தக் கொடூரத்தின் வடுக்களோடு இன்னமும் துயரேந்தி அலைகின்றனர் ஈழத் தமிழர்கள்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மே மாதத்தில் தம் உறவுகளின் இழப்பை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல இடங்களில் ஈழப்படுகொலை நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. மே மாதத்தில் 18-ம் நாள் இனவழிப்பின் முக்கியமான நாள். இந்தத் தினத்துக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி, இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தபோது அதைத் தீபம் ஏற்றித் தொடங்கி வைத்தது சிறுமி ராகினி. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் தீபம் ஏற்றி வைக்குமளவுக்கு முக்கியமானவரா என்றால் அவர் ரொம்பவே முக்கியமானவர்தான். எப்படி என்று விவரிக்கிறார் ஈழத்துத் தமிழ்க் கவிஞர் தீபச்செல்வன்.

“மே 18, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினம். விடுதலைக்காகப் போராடிய ஒரு இனம், கொத்துக் கொத்தாக கொடூரமாகக் கொன்றழிக்கப்பட்ட காலத்தின் குறியீட்டு தினம் இது. இதே போலான நாள்களில், ஈழத்தின் முல்லைத்தீவின் கிழக்கே, ஈழத் தமிழ் இனம், மாபெரும் மனிதப் பேரவலத்தைச் சந்தித்தது. 2019 உடன் முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்று 10 ஆண்டுகள். இப்படுகொலை பற்றி முழு உலகும் அறிந்தபோதும், இன்று வரையில் நீதியற்று காயப்பட்ட மக்களுக்குப் பதிலற்று கழிந்துவிட்டது காலம். 

முள்ளிவாய்க்கால்

இலங்கையில் அண்மைய காலத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களால், இலங்கை ராணுவப் படைகள் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை முடுக்கியுள்ள நிலையிலும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஈழத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கூடியிருந்தனர். தகிக்கும் வெயிலில் சுடு மணலில் கண்ணீர்விட்டு, புரண்டழுத மக்களைப் பார்த்த பன்னாட்டு ஊடகவியலாளர்களும் கண் கலங்கி நின்றனர். 

இம்முறை பொதுச் சுடரை ஏற்றி வைத்தாள் ராகினி. 10 ஆண்டுகளின் முன்னர் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தபோது, பிறந்து எட்டு மாதங்களே ஆன ராகினி, செல்லடியில் இறந்துபோன தன்னுடைய தாயின், எதையும் அறியாதவளாய் பால் குடித்துக் கொண்டிருந்தாள். அத்தாக்குதலில் தன் ஒற்றைக் கையையும் இழந்தாள். அக்காட்சிகூட புகைப்படமாக வெளியாகி உலகின் மனசாட்சியை உலுக்கியது. அவளே இம்முறை பொதுச்சுடரை ஏற்றினாள். 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து பத்தாண்டுகள். அவளுக்கும் பத்து வயது. தன் தாய் போலான மக்களுக்காய் கவிதை படித்து அஞ்சலி செலுத்தினாள். அந்தச் சுடரை ஏற்றியபோது, அவள் குரல் நடுங்கி, கண்கள் கலங்கி அழுதுடைந்தாள். பார்ப்பவர்களை எல்லாம் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது. இந்தப் படுகொலையை நிகழ்த்தியவர்களுக்கும் துணை நின்றவர்களுக்கும் இவற்றையெல்லாம் பார்க்கும்போதுகூட மனசாட்சி உறுத்தாதா… என்ற கேள்வி அனைவர் முகத்திலும். 

தாயை அறியாது வளரும் ராகினி என்ற சிறுமி இனப்படுகொலையின் சாட்சி. ஆனாலும், தன்னம்பிக்கையும் வெளிச்சமும் மிகுந்தவள் அவள். கடந்த ஆண்டு நடந்த புலமைப் பரிசில் போட்டி பரீட்சையில் 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து அனைவரது கவனத்தையும் ஈர்ந்திருந்தாள். எதிர்காலத்தில் ஒரு ஆசிரியராக வந்து, தன்னைப் போன்ற பிள்ளைகளுக்குத் தாயாக இருக்க வேண்டும் என்பதே அவளின் கனவு லட்சியம். 

சிங்கள அரசின் நீதியற்ற போரின், இன அழிப்பின் சாட்சியாய் இவள்போலான குழந்தைகள் வாழ்வர். இந்த உலகின் மனசாட்சியை உலுக்குவர்” என்று முடித்தார்.

Leave A Reply

Your email address will not be published.