வல்லமை மிக்க தேசம் – தேன்மொழிதாஸ்

0தீர்மானமில்லாத கேள்வியாக
பூக்கள் மலருகின்றன

வினோத மூச்சின் அறைகளையே உடலாகக் கொண்ட
அல்லிக் கொடிகளைத் தீண்டும் போது
மந்திரமிக்க சொல்
நீரிலிருந்து பிறப்பதை படித்திருக்கிறேன்

நித்தியத்துவமான வழக்காடும் சொற்களை இப்படித்தான் படைத்தேன்

தயக்கமின்றி சொல்லப்படும் பெண்ணின் காதல் வெற்றி வில்லாக நிலவின் பிறையை உராய்ந்து செல்வதில்லை
ஆணின் விசை உயிர்த்தலில் பாயும்

சகுனசாத்திரத்தில் திசைவழிக் குறிப்புகள் அதிகம் புலம்புவது எல்லோருக்குமானதல்ல

ஒருகாலத்தில் புத்துணர்ச்சியை அருந்திப் பெற்ற நாம்
மற்றொரு காலத்தில்
நிலத்தில் கால் வைக்கையில் பெறுவோம்

சுத்தத்தை உச்சரிப்பது தூசிகள் தானே

ஒன்றை அழித்து மற்றொன்றை பெறுதல் தான் நிகழ்காலம்

அழிவு வர்ணிக்க ஏதுவாக வளையும்
ஆயினும் அத்தியாயங்களை நுண்மையாக உதிர்க்கும்
நிலைமொழிகளை ஈன்றெடுக்கும்

உண்மை நிரம்பிய கண்களின் வழியாகவே வல்லமைமிக்க தேசம் கட்டியெழுப்பப்படும்

உறுதி கொண்ட எதுவும் வேற்றுக் கிரகத்தின் கருமையத்தையும் கடக்கும்

சாதாரணமான காலங்கள் தான் வரலாறுகளாகவும் விரிவுபெறும்
கூர்ந்து நோக்கினால் ஊடே
நீதியோ அநீதியோ கவனமாக ஓடிக்கொண்டிருக்கும்

ஏதேனும் ஒரு பக்கத்தில் ரத்தத்தால் மடித்து வைக்கப்பட்ட வரிவடிவெழுத்து
மற்றொரு காலத்தின் புரட்சியாகும்

எனது தேசத்தை விரும்பும் அளவுக்கு அதன் பெயரை விரும்பவிலை
இந்தியா என்பதில் ஒரு அநீதி ஒட்டிக்கொண்டிருக்கிறது
மேலும் விநோத வெப்பத்தை மடல்களாகக் கொண்ட தாமரையை
வணங்க மக்களைக் கட்டாயப்படுத்துகிறது

Leave A Reply

Your email address will not be published.