வேலுப்பிள்ளை பிரபாகரன்: வளர்ச்சியும், வீழ்ச்சியும்

0

(ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் இரண்டாவது பகுதி இது.)

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் கடைசி கட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்தது.

பிரபாகரனின் எதிரிகளை பொறுத்தவரையில், அவர் மனித உயிர்களை முற்றிலும் துச்சமாக கருதக்கூடிய அதிகாரத்தின் மீது பேராசை கொண்டவர். ஆனால் அவரது ஆதரவாளர்களை பொறுத்தவரையில் தமிழர் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராளி.

அவரது தலைமையின் கீழ், தமிழீழ விடுதலை புலிகள், உலகின் மிகப்பெரிய, கட்டுக்கோப்பான மற்றும் மிகவும் வலுவான கொரில்லா படையாக விளங்கியது.

ஆனால் 2009-ம் ஆண்டு துவக்கத்திலிருந்தே தொடர்ச்சியாக தோல்வி மேல் தோல்வியடைந்து, இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தனித்தாயகம் அமைக்க முயன்ற அவர்களது பெருங்கனவு உடைந்து சுக்குநூறானது.

தெற்குப் பொய்கைநல்லூரில் திறக்கப்பட்டு பின்னர் அகற்றப்பட்ட பிரபாகரன் சிலை.

1954 நவம்பர் 26-ம் தேதி தனது பெற்றோருக்கு நான்காவது மகனாக பிறந்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். ஜாஃப்னா தீபகற்பத்தில் அதாவது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வல்வெட்டித்துறையில் இவர் பிறந்தார்.

அடிப்படையில் கூச்ச சுபாவமும், புத்தக பிரியராகவும் விவரிக்கப்படும் பிரபாகரன், பின்னாளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பாகுபாடுகள் காட்டப்படுவதாக எண்ணிய அவர், அதனால் கோபம் கொண்டு தமிழர் போராட்டங்களில் பங்கேற்கத் துவங்கினார்.

பிரிட்டனுக்கு எதிராக இந்தியாவில் ஆயுதம் ஏந்தி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பகத் சிங் என இருவரின் வாழ்வும் தன்னை ஈர்த்ததாக பின்னாளில் பிரபாகரன் கூறியுள்ளார்.

பிரபாகரன் அரிதாகவே ஊடகங்களுக்கு நேர்காணல் தந்துள்ளார். அப்படி ஒருமுறை நேர்காணல் தரும்போது அலெக்ஸ்சாண்டர் மற்றும் நெப்போலியன் வாழ்வால் கவரப்பட்டதாகவும் அவ்விருவர் தொடர்பான பல புத்தங்களை படித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமை்பபின் கொடி

பிரபாகரன் முதலில் தமிழ் புது புலிகள் என்ற இயக்கத்தை தோற்றுவித்ததாக நம்பப்படுகிறது. 1975-ல் யாழ்ப்ப்பாண மேயர் கொலையில் பிரபாகரன் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதற்கடுத்த ஆண்டு பிரபாகரன் குழு தமிழீழ விடுதலை புலிகள் என தமது பெயரை மாற்றியது. தமிழ் புலிகள் என்றும் இக்குழு அறியப்படுகிறது.

விடுதலை புலிகள் பின்னாளில் வல்லமை மிக்க படையாக உருவெடுத்தது. பத்தாயிரத்துக்கும் அதிகமான படை வீரர்கள் இருந்தார்கள். அதில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம்.

விடுதலை புலிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள புலிகள் அமைப்பின் அனுதாபிகள் மூலமாக ஆயுதங்களுக்கான நிதியுதவி கிடைத்தததாக சில செய்திகள் கூறுகின்றன.

தமிழீழ விடுதலை புலிகள் அமை்பபின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன்

கொரில்லா தாக்குதல்களுக்கு பிரபாகரனின் படை மிகவும் பெயர்பெற்றது.

விடுதலை போரில் வீரமரணமடைவது மிகப்பெரிய தியாகம் என பிரபாகரன் தனது குழுவை ஊக்குவித்தார். இதையடுத்து தற்கொலை தாக்குதல் நடத்த துவங்கினர் விடுதலை புலிகள்.

இந்த குழுவின் தற்கொலை தாக்குதல்கள் அடிக்கடி பொதுமக்கள் நிறைந்திருக்க கூடிய பகுதிகளில் நடைபெற்றது. இவர்களது இலக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமின்றி பல பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

பிரபாகரன் தனது கழுத்தில் எப்போதும் சயனைடு குப்பியை அணிந்திருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருவேளை எதிரியிடம் பிடிபடும் சூழல் உருவானால் சித்திரவதையை தவிர்க்க இந்த சயனைடை சாப்பிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள திட்டம் தீட்டப்பட்டிருந்தது. பின்னாளில் பிரபாகரன் படையில் இருந்த பல வீரர்களும் இந்த பழக்கத்தை கடைபிடிக்கத் துவங்கினர்.

மாவீரர் தின நிகழ்வு

1991-ம் ஆண்டு சென்னைக்கு அருகே நடந்த ஒரு தற்கொலை குண்டுதாக்குதலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பிரபாகரன் மீது குற்றஞ்சாட்டியது இந்தியா.

ராஜீவ் காந்தி 1980களின் மத்தியில் இந்தியாவின் அமைதி காப்புப் படையை இலங்கைக்கு அனுப்பியதற்கு பழிதீர்க்கும் விதமாக ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் உத்தரவிட்டதாக கூறப்பட்டது.

பயங்கரவாதம், கொலை மற்றும் முறையாக திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட காரணங்களுக்காக இன்டெர்போல் எனப்படும் சர்வதேச போலீஸால் தேடப்படும் குற்றவாளியாக பிரபாகரன் அறிவிக்கப்பட்டார்.

அவர் எப்போதும் அதிகம் வெளியே வந்ததில்லை. அவரை கைது செய்யவோ கொலை செய்யவோ பல அச்சுறுத்தல்கள் காத்திருந்தன.

பிரபாகரன்

அரிதாக ஒருமுறை ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்தபோது ராஜிவ் காந்தி கொலை குறித்த எந்த கேள்விகளுக்கும் பதில் அளிப்பதை தவிர்த்தார். ஆனால் அந்நிகழ்வை ஒரு துன்பியல் சம்பவம் என்றார்.

தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை கோரிக்கையை திரும்பத் திரும்ப வலியுறுத்திய பிரபாகரன் அதற்காக போராடி சாகவும் தயாராக இருப்பதாக கூறினார்.

1996-ல் ஒரு தற்கொலை குண்டுதாரி கொழும்புவில் உள்ள மத்திய வங்கி வாயில்கள் மீது ஒரு லாரி முழுக்க வெடிபொருள்களை நிரப்பிச் சென்று மோதி வெடிக்கவைத்தார். இதில் 90க்கும் அதிகமானோர் இறந்தனர். 1400 பேர் காயமடைந்தனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள். புலிகள் நடத்திய இந்த கொடிய தாக்குதல்களில் அயல்நாட்டவர்களும் இறந்தனர்.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
Image captionஇலங்கை உள்நாட்டு போர் நிறைவடைந்தபோது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச

இந்த தாக்குதலில் பிரபாகரனுக்கு பங்கு இருப்பதாக கூறி, பிரபாகரனை கைது செய்ய இலங்கை நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. பிரபாகரன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அமைதி பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில் 2006-ல் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் கடும் தாக்குதல் நடத்தியது இலங்கை ராணுவம். இச்சமயத்தில் பல பகுதிகளை இலங்கை ராணுவம் படிப்படியாக கைப்பற்றத் துவங்கியது.

2009-ல் புலிகளின் நிர்வாக தலைநகராக இருந்த கிளிநொச்சியை கைப்பற்றியது இலங்கை ராணுவம். அப்போது பிரபாகரன் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதாகவும் வதந்திகள் நிலவின.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை முழுவதுமே ரகசியங்கள் நிறைந்ததாகவே இருந்தது. எதிரிகளிடம் பிடிபடாமல் இருக்கவும் படுகொலை செய்யப்படாமல் இருக்கவும் மிகவும் கவனமாக திட்டமிட்டு அவர் காடுகளில் மறைவான வாழ்க்கை நடத்தினார்.

மாவீரர் நினைவு தினம்

அவரது குழுவின் பலம் உச்சத்தில் இருந்தபோது 1990களின் இறுதியில் கிட்டத்தட்ட விடுதலை புலிகள் இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

ஆனால் பிரபாகரன் தனது கனவை நனவாக்க முடியாமல் தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிரை விட்டார். போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசின் கொடிய தாக்குதல்களில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டனர் என கூறப்படுகிறது.

6 ஆண்டுகால உள்நாட்டு போரில் குறைந்தது ஒரு லட்சம் பேர் இறந்தனர், 2, 75,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர் நாட்டை விட்டுத் தப்பினர். சிறுபான்மையினரான தமிழர்கள் மிகப்பெரிய அளவு பாதிப்புக்குள்ளாகினர். பலர் உயிழந்தனர், உடைமைகளை மற்றும் உறவுகளை இழந்தனர். பல்வேறு பாலியல் சித்திரவதைகளையும் அனுபவித்தனர் என்று கூறப்படுகிறது.

இந்த போரில் இலங்கை அரசுக்காக போராடிய ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் மட்டுமல்ல; சிங்களர்களும், இலங்கை முஸ்லிம்களும் உயிரிழந்தனர்.

ஒருமுறை பிரபாகரன் தான் கொண்ட கொள்கையில் எப்போதாவது மாறினால் தன்னை சுட்டுக் கொல்லும்படி தனது குழுவில் உள்ளவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியிருந்தார்.

‘முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுசரிப்பதை தடுக்கும் முயற்சி’ – காணொளி

Leave A Reply

Your email address will not be published.