அவுஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை சட்டம் அறிமுகம்!

0

உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், கடந்த 2017ம் ஆண்டு கருணைக் கொலையை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்மூலம் குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்படுவோர், தங்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரினால், மருத்துவர்களின் உதவியுடன் கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நோயால் அவதிப்பட்டு, உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அந்த நபர் தன்னை கருணைக் கொலை செய்யும்படி டாக்டர்களிடம் கேட்க முடியும். இதற்கான அனுமதியை பெறுவதற்கு, வசிப்பிட ஆவணங்கள், பல மருத்துவர்களின் மதிப்பீட்டு சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு 6 மாதத்திற்கு மேல் உயிர்வாழ வாய்ப்பு இல்லை என்ற நிலையில் உள்ள வயது முதிர்ந்த நோயாளிகள் அல்லது மோட்டார் நியூரான் நோய் மற்றும் மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ் போன்ற கொடிய நோய் பாதிப்புக்கு ஆளாகி ஒரு வருடம் மட்டுமே ஆயுட்காலம் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த சட்டத்தின்கீழ் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கப்படும்.

இந்த சட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் 12 பேருக்கு கருணைக் கொலைக்கான அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 150 பேர் வரை இந்த சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்று விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.