இலங்கையில் மரண தண்டனை புதிதாக நிறைவேற்றப்படுகிறதா?

0

இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனை சட்டத்தை அமல்படுத்த உள்ளார். இந்த விடயம் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்புகளுக்கும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

அண்மையில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த சர்வதேச மன்னிப்புச் சபை மிகவும் கொடூரமான மனிதாபிமானமற்ற சட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த இருப்பதாக தனது விசனத்தை தெரிவித்திருந்தது.

உலகெங்கும் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு வரும் நிலையில் மிகவும் பிற்போக்குத்தனமான மரண தண்டனை என்ற கடுமையான சட்டத்தை இலங்கை அரசாங்கம் கையில் எடுத்திருப்பது தமக்கு பெரும் வெறுப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியிருந்தது.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு தொலைபேசி வாயிலாக மரண தண்டனையை நடைமுறைப்படுத்துகின்ற முக்கியத்துவம் குறித்து தாம் விலகியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு புறம் கூறியுள்ளார்.

உண்மையில் இலங்கையில் மரண தண்டனை சட்டம் என்பது ஒரு புதிய சட்டம் இலங்கையில் மரண தண்டனை சட்டம் என்பது இதுவரை இல்லாத சட்டமா என்பதே இங்கு மாபெரும் கேள்வியாகும். இலங்கையில் மரண தண்டனை சட்டம் அறிமுகப்படுத்துவதே புதியதொரு நிகழ்வைப் போல சர்வதேச சமூகம் பார்க்கின்றது.

கடந்த காலங்களில் இலங்கையில் மரண தண்டனை சட்டம், ஒரு சட்டமாக இல்லாத போதும் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வந்திருக்கின்றார்கள். அப்படிப் பார்த்தால் 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் மரண தண்டனை சட்டம் அமுலில் இருந்து வந்திருக்கின்றது என்பதே அர்த்தம்.

ஈழத் தமிழர்கள் மாத்திரமின்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கக்கூடிய சிங்கள பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூட இந்த மரண தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டு வந்துள்ளனர். சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மஹிந்த ராஜபக்ஷ முதலானவர்கள், மரண தண்டனை சட்டத்தை ஒரு சட்டமாக அரசியல் யாப்பில் கொண்டிருக்காதபோதும் தமிழர்களை அழித்தொழிக்க மரணதண்டனை சட்டத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பது வரலாறு ஆகும்.

ஈழத் தமிழர்களாக வாழ்பவர்கள் அல்லது இலங்கை அரசாங்கத்தின் அநீதிகளுக்கு எதிராக போராடுபவர்களை இலங்கை சிங்கள பேரினவாத மரண தண்டனை சட்டத்தின் மூலம் கொன்றழித்த வரலாறுதான் ஈழத் தமிழ் இனப்படுகொலை வரலாறு. ஈழத் தமிழர்கள் என்ற அடையாளத்திற்காக மரண தண்டனை வழங்கிய சிங்கள தேசத்திடம் எப்படி கருணை இருக்கும்?

இன்றும் சிறைகளில் தமிழர்களை அடைத்து, அறிவிக்காத, சட்மற்ற மரண தண்டனையை நிறைவேற்றுகின்றது சிங்கள அரசு. அரசியல் கைதிகளை சிறையில் வைவத்து கொள்வதையும்விட, சரணடைந்தவர்களை காணாமல் செய்ததைவிடவும் மரண தண்டனை சட்டம் பெரிய விடயமில்லை.

கடந்த காலங்களில் சட்டம் எதுவும் இயற்றாத நிலையில் மரண தண்டனை அல்லது மரணப் படுகொலைகள் நடைபெற்று வந்தது. இனி, மைத்திரிபால சிறிசேன மரண தண்டனை என்ற சட்டம் ஒன்றை நிறைவேற்றி படுகொலை செய்யப் போகின்றார். அதிகாரபூர்வமற்ற மரண தண்டனை இனி அதிகார பூர்வமாகிறது. அவ்வளவே இங்கு நடக்கிறது.

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் இலங்கை அரசாங்கத்தின் அரசில் அங்கம் வகிக்கின்றனர். இந்த நிலையில் ஒரு சிலருக்கு மரண தண்டனை வழங்குவதன் ஊடாக போதைப்பொருளை ஒழிக்க முடியுமா? உண்மையில் இலங்கை அரசு நிர்வாகத்திலும் பொலிஸ் ஊழல்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்ற போது போதைப்பொருளை ஒழிக்க முடியும்.

ஏற்கனவே இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களை இந்த சட்டம் கடுமையாக தொடர்ந்து ஒடுக்கி வருகின்றது. இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களின் பின்னரான, தற்போதைய சூழலிலும் கூட பயங்கரவாதத் தடைச்சட்டம் ஈழத் தமிழர்களையே அதிகம் அடக்கி அடக்கி ஆள்கிறது.

இந்த நிலையில் மனிதாபிமானம் என்பது, இலங்கையில் துளியளவும் இல்லை என்பதை உணர்த்துகின்ற ஒரு உண்மை நிகழ்வாக மரண தண்டனை சட்டம் மூலமாக நடைமுறையாக உள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை கடுமையான சர்வதேச விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தனிமைப்படும் என்றும் ஜெர்மனிய நாடு எச்சரித்துள்ளது.

இவ்வாறு உச்சரிப்பவர்கள் எல்லாம் முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் கொன்று அளிக்கப்படுவது எங்கு சென்றார்கள்? ஈழத்தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபோது இலங்கையை எச்சரிக்காதவர்கள் இப்போது மரணதண்டனைக்கு எதிராக பேசுவதும் தமக்கான ஒரு அரசியல்தான். உண்மையில் உயிர்கள் மீதான அக்கறை நாளும் மதிப்பினாலும் அல்ல என்பதும் கவனிக்க வேண்டியது.

இனப்படுகொலையை சந்தித்தவர்கள் எந்த வகையிலும் மரணத்தின் துயரத்தை, மரணத்தின் கொடூரத்தை நன்கறிந்தவர்கள் என்ற வகையிலும் உயிர்களை அதிகம் நேசிப்பவர்கள் என்ற வகையிலும் ஈழத் தமிழர்கள் மரண தண்டனையை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஜனநாயகத்துக்கும் மனிதாபிமானத்திற்கும் எதிரான இந்த செயலுக்காக ஈழத்தமிழர்கள் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கின்றது ஈழம்நியூஸ்.

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
29.06.2019

Leave A Reply

Your email address will not be published.