’கிரிக்கெட்’ – உலகை இணைக்கும் ஒரு சொல்: வியக்க வைக்கும் இரு குடும்பங்களின் கதை

0

“கிரிக்கெட் உலகக்கோப்பை மிகவும் கோலாகலமான திருவிழா. அதை எப்படி தவற விட முடியும்? இதற்காக நாங்கள் ஒவ்வொருமுறையும் பணத்தை திட்டமிட்டு சேமிப்போம். ஆஸ்திரேலியாவில் நடந்த, கடந்த உலகக்கோப்பைக்கு சென்ற நாங்கள் தற்போது பிரிட்டனுக்கு வந்துள்ளோம்” என்று அபாங் என்னிடம் கூறிக்கொண்டிருக்கும்போது அவரது கண்கள் பிரகாசமாக மாறுவதுடன், ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது.

மும்பையை பூர்விகமாக கொண்ட அபாங், பொறியியல் படித்துவிட்டு, அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துவிட்டார். தற்போது கலிஃபோர்னியாவில் மனைவி, இரண்டு மகன்களுடன் வசிக்கும் அவர், சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.

“நான் 25 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு சென்றேன். அதன் பிறகு, எங்களது வாழ்க்கைப்போக்கில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால், கிரிக்கெட் மீதான எங்களது ஈடுபாடு சிறிதும் குறையவில்லை. கிரிக்கெட் இந்தியாவுடனான எங்களது உறவை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது” என்று அவர் கூறுகிறார்.

“அமெரிக்காவை பொறுத்தவரை, பாஸ்கெட் பால் மற்றும் கால்பந்துக்கு அதிகளவிலான ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனாலும், கிரிக்கெட் மீதான எங்களது காதல் சிறிதும் பாதிக்கப்படவில்லை.”

கிரிக்கெட்டுக்காக பள்ளிக்கு நீண்ட விடுப்பு

அடிப்படையில் கிரிக்கெட் மீதான காதலை அதிகம் கொண்டிருந்த அபாங்கின் எண்ணவோட்டம், பிறகு அவரது மனைவிக்கு கடத்தப்பட்ட நிலையில், தற்போது அவர்களது இரண்டு மகன்களும் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வதாக அவர் கூறுகிறார்.

“2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிக்கு செல்வதற்காக எனது மகன்கள் இரண்டு வாரத்திற்கு பள்ளிக் கூடத்திற்கே செல்லவில்லை. தங்களது விடுமுறையை நீடிப்பதற்கு அவர்கள் விரும்பினாலும், நான் அதற்கு அனுமதிக்கவில்லை” என்று கூறுகிறார் அபாங்கின் மனைவி பத்மஜா.

“எனது இரண்டு மகன்கள் கால்பந்து, டென்னிஸ் போன்றவற்றையும் விளையாடினாலும், அவர்கள் கிரிக்கெட்டிற்கு தனி இடம் கொடுக்கிறார்கள். அமெரிக்காவின் நேரம் வேறு என்றாலும் கூட, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் கூட எனது மகன்கள் தங்களது பள்ளி சார்ந்த கடுமையான நேரத்திற்கு இடையிலும் அப்போட்டிகளை பார்த்துவிடுவர்” என்று பத்மஜா பெருமையுடன் கூறுகிறார்.

அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடுகிறார்களா?

அபாங் குடும்பத்தினர்
Image captionஅபாங் குடும்பத்தினர்

“நாங்கள் இதற்கு முன்னதாக டெக்ஸாஸில் இருந்தபோது, அங்கிருந்த கிளப்பில் கிரிக்கெட் விளையாடினோம். ஆனால், நாங்கள் கலிஃபோர்னியாவுக்கு சென்ற பிறகு, அங்கு கிரிக்கெட் கிளப்புகள் ஏதும் இல்லாததால், நாங்களே தொடங்கிவிட்டோம். நானும், என்னுடைய சகோதரரும் எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது குறித்து எங்களது நண்பர்களுக்கு சொல்லி தருவோம். எனவே, கிரிக்கெட் மீதான எங்களது நண்பர்களின் காதல் விரிவடைந்துள்ளது” என்று கூறுகிறார் அபாங்-பத்மஜா தம்பதியினரின் மூத்த மகனான ஷுபன்கர்.

கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளை பார்ப்பதற்காக மட்டும் ஒரு மாதகாலத்திற்கு பிரிட்டனுக்கு வந்துள்ளது குறித்து பாஸ்கெட் பால், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தும் தங்களது அமெரிக்க நண்பர்கள் மிகவும் ஆச்சர்யமடைந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

“எங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரருக்கு கடிதம் எழுதுமாறு எங்களது ஆசிரியர் கூறியபோது, நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவுக்கு எழுதினேன். அடுத்த சில நாட்களிலேயே அவரிடமிருந்து பதில் கிடைத்தது, என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது” என்று கூறுகிறார் ஷுபன்கர்.

இவரது சகோதரனான கெளதமும் கிரிக்கெட்டில் சற்றும் சளைத்தவராக இல்லை. நடந்து வரும் உலகக்கோப்பையில் இந்தியா அரையிறுதி அல்லது இறுதிப்போட்டி வரை செல்வதற்கு வாய்ப்புள்ளதாக ஆருடம் கூறுகிறார்.

எப்போதாவது இந்தியாவுக்கு வரும் அபாங், கடைசி முறை தான் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்காக இந்தியா வந்ததாக கூறுகிறார்.

“வெளிநாட்டு வாழ் இந்தியர்களை இணைப்பதற்கு விளையாட்டு போட்டிகள், இசை மற்றும் திரைப்படங்கள் மிகவும் உதவுகின்றன. இசை மற்றும் திரைப்படங்களில் மொழிரீதியிலான தடை இருக்கும். ஆனால், கிரிக்கெட் விளையாட்டானது மொழி, மாநிலம், கலாசாரம் போன்ற எல்லா வேறுபாடுகளையும் களைந்து மக்களை ஒன்றிணைக்கிறது” என்று அபாங் மேலும் கூறுகிறார்.

“நான் சச்சின் வாழ்க்கையுடன் ஒன்றி பயணித்தவன். அதேபோன்று, எனது மகன்கள் விராத் கோலியோடு பயணிக்கிறார்கள். நாங்கள் சில சமயங்களில் வாக்குவாதம் செய்வோம். ஆனால், கிரிக்கெட் மீதான எங்களது ஈடுபாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும்” என்று அபாங் உறுதிபட கூறுகிறார்.

உலகக்கோப்பைக்காக சிங்கப்பூரிலிருந்து வந்த மூன்று தலைமுறைகள்

விவேக் குடும்பத்தினர்
Image captionவிவேக் குடும்பத்தினர்

பிரிட்டனில் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக்கோப்பையை பார்ப்பதற்காக அபாங் குடும்பத்தினர் உலகின் மேற்கு மூலையிலிருந்து வந்திருந்தது போல, விவேக்கின் குடும்பத்தினர் கிழக்குப் பகுதியிலுள்ள சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளனர்.

கோயம்புத்தூரை சேர்ந்த விவேக், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னதாக சிங்கப்பூரில் குடியேறிவிட்டார். இவரது தந்தை 25 ஆண்டுகளுக்கு முன்னதாக சிங்கப்பூருக்கு சென்றார். அதைத்தொடர்ந்து குடும்பத்தினரும் புலம்பெயர்ந்துவிட்டனர்.

விவேக்கின் பெற்றோர், மாமா, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என ஏழு பேர் கிரிக்கெட் உலகக்கோப்பையை பார்ப்பதற்காக பிரிட்டனுக்கு வந்துள்ளனர்.

“நாங்கள் அனைத்து போட்டிகளையும் நேரில் பார்க்க விரும்புகிறோம். ஆனால், நாங்கள் சிங்கப்பூரில் நடத்தி வரும் நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டியுள்ளதால், அடுத்த 10 அல்லது 15 நாட்களில் திரும்ப வேண்டியுள்ளது” என்று சோகமாக கூறுகிறார் விவேக்.

கிரிக்கெட் மீதான ஈடுபாட்டிற்கான காரணமென்ன?

“பணம் பொருட்டல்ல. குழந்தைகளின் பள்ளி மற்றும் தொழில் போன்றவைகளே நாங்கள் விரைந்து திரும்ப செல்வதற்கான காரணம். இந்தியாவின் தற்போதைய ஆட்டத் திறனை பார்க்கும்போது, ஒரு மிகப் பெரிய கொண்டாடத்தை தவறவிட போகிறோமோ என்று யோசிக்க தோன்றுகிறது” என்று அவர் கூறுகிறார்.

தங்களது குடும்பத்தின் கிரிக்கெட் மீதான காதல் தனது தந்தை சுந்தரேசன் மூலம் தொடங்கியதாக விவேக் கூறுகிறார்.

கிரி என்றும் அறியப்படும் சுந்தரேசன் 1970, 1980களில் கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பரவலாக அறியப்படுபவர். மாநில அளவிலான பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ள சுந்தரேசனுக்கு தற்போது 72 வயதாகிறது.

புலம்பெயர்ந்த இந்தியர்களை இணைக்கும் பலமாக விளங்கும் கிரிக்கெட்

“நாங்கள் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு பிறகு சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தபோது, எங்களுடன் கிரிக்கெட்டையும் சுமந்து கொண்டு சென்றோம். கடந்த காலத்தில் கவாஸ்கர் மற்றும் டிராவிட்டின் ரசிகராக விளங்கிய நான், தற்போது தோனியின் ஆட்டத் திறனை விரும்புகிறேன்” என்று சுந்தரேசன் கூறுகிறார்.

“எனது வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட்டும் என்னுடனே பயணித்திருக்கிறது. அதன்பின், எனது மகன் விவேக்கையும், சிங்கப்பூரில் இருக்கும் மற்றொரு மகனையும் சென்றடைந்தது. தற்போது மூன்றாம் தலைமுறையாக எனது பேரன்கள் கூட கிரிக்கெட்டை நேசிக்கிறார்கள். எனவே, கிரிக்கெட் என்பது எங்களது குடும்பத்தின் அடையாளமாக மாறிவிட்டது” என்று அவர் கூறுகிறார்.

தற்போது பிரிட்டனில் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக்கோப்பையை நேரில் பார்ப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே பணத்தை சேர்த்து வைக்க தொடங்கியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகக்கோப்பையை டிவியில் பார்ப்பதா?

“ஆம், இந்த பயணத்திற்காக நான் அதிகளவு பணத்தை செலவழித்துள்ளேன். வாழ்க்கையில் பணம் மிகவும் முக்கியம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், என்னைப்பொறுத்தவரை ஈடுபாடு அதைவிட மிகவும் முக்கியம்” என்று விவேக் மேலும் கூறுகிறார்.

2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை பார்ப்பதற்காக விவேக் மெல்போர்ன் சென்றிருந்தார். இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று விடும் என்ற எண்ணத்தில் தான் வெகுகாலத்திற்கு முன்பாகவே இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை வாங்கிவைத்து விட்டதாகவும், ஆனால் இந்தியா தகுதி பெறாதது தன்னை ஏமாற்றமடைய வைத்துவிட்டதாகவும் கூறும் விவேக், இந்த உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு இந்தியா நிச்சயம் தகுதி பெறும் என்று கூறுகிறார்.

புலம்பெயர்ந்த இந்தியர்களை இணைக்கும் பலமாக விளங்கும் கிரிக்கெட்

“இதுவே, டெஸ்ட் போட்டி எனில் நான் தொலைக்காட்சியிலேயே பார்த்திருப்பேன். ஆனால், இந்த உலகக்கோப்பையை எப்படி தொலைக்காட்சியில் பார்க்க முடியும்? மைதானத்திற்கு சென்று இந்திய அணியை உற்சாகப்படுத்த விரும்புகிறோம். எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை நாங்கள் ஒரு முடிவில் உறுதியாக இருக்கிறோம். அதாவது, எங்களது சேமிப்பில் மிகப் பெரிய தொகையை செலவழிப்பதாக இருந்தால் அது கிரிக்கெட்டுக்காக மட்டுமே இருக்கும்” என்று அவர் மேலும் விளக்குகிறார்.

“எங்களது தந்தை தொடங்கி வைத்ததை நானும் எனது சகோதரரும் பின்பற்றினோம். தற்போது, எனது மகன்கள் இருவரும் வெவ்வேறு வகைகளில் கிரிக்கெட்டில் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கிரிக்கெட் எங்களது இரத்தத்தில் கலந்துள்ளது.”

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவிலிருந்து அமெரிக்காவிலும், தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கும் புலம்பெயர்ந்த இருவேறு குடும்பங்கள் கிரிக்கெட் என்ற ஒற்றை காரணத்துக்காக பிரிட்டனுக்கு வந்துள்ளனர். இந்த இருவேறு குடும்பங்களும் ஒரே மொழியை பேசுவதில்லை, ஆனால், இதுவரை நேரில் சந்தித்துக்கொள்ள இரண்டு குடும்பங்களும் கிரிக்கெட் என்ற ஒன்றை காரணத்துக்காக பிரிட்டனின் மைதானங்களில் வலம் வருகின்றனர்.

இவர்களை போன்றே உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த குடும்பங்களை, நண்பர்களை இந்தியாவுடன் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது என்று கூறலாம்.

Leave A Reply

Your email address will not be published.