தோனி ஆடியவிதம் தவறுதான்… சச்சின் சொன்னதில் தவறேதும் இல்லை!

0

அவர்கள் ஆடியவிதம் இந்தியாவுக்குக் கண்ணுக்குத் தெரியாத சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டுதான் இருந்தது. உலக கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேனை திட்டித் தீர்ப்பதற்கு முன், அதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

தோனி, ஜாதவ் இருவரும் ஆடிய விதத்தில் எனக்கு சிறு வருத்தம் உண்டு. இன்னும் பாசிட்டிவாக அவர்கள் ஆட்டத்தை எதிர்கொண்டிருக்கவேண்டும். கோலி அவுட்டான பிறகு மிகவும் மெதுவாக ஆடியது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதை நான் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை

சச்சின் டெண்டுல்கர்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி – ஜாதவ் கூட்டணி ஆடிய விதத்தைப் பற்றி சச்சின் தன் கருத்தைத் தெரிவித்தார். உடனே பொங்கிவிட்டார்கள் நம் கேப்டன் கூல் ரசிகர்கள். ‘அவங்க அந்த இடத்துல அப்படி ஆடலைனா இந்தியாவுக்கு அந்த ஸ்கோர்கூட வந்திருக்காது’ என்று பேசத் தொடங்கியவர்கள் வகை தொகை இல்லாமல் அந்த ஜாம்பவானை வசைபாடிக்கொண்டிருக்கிறார்கள்.

Sachin Tendulkar
Sachin Tendulkar

இங்கு கருத்து சுதந்திரம் என்பதையெல்லாம் தாண்டி, அவர் சொல்லியதில் ஒரு தவறும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள யாரும் தயாராக இல்லை. ஆம், சச்சின் சொன்னதில் தவறேதும் இல்லை. அவர்கள் ஆடியவிதம் இந்தியாவுக்குக் கண்ணுக்குத் தெரியாத சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டுதான் இருந்தது. உலக கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேனை திட்டித் தீர்ப்பதற்கு முன் அதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

தோனி – ஜாதவ் கூட்டணியால்தான் இந்தியா 224 ரன்களாவது எடுத்தது என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. யாரேனும் ஒருவர் முன்பே அவுட்டாகியிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். ஆனால், இந்தியாவை அந்த சிக்கலான நிலைமைக்குள் தள்ளியது யார் என்ற கேள்விக்குப் பதில் தெரியவேண்டுமல்லவா?

Dhoni - Jadhav
Dhoni – Jadhav

122-3. 27-வது ஓவரின் முதல் பந்தில் விஜய் சங்கர் அவுட்டான போது இந்திய அணியின் ஸ்கோர். ஒருநாள் போட்டிகளில் அது எந்த வகையிலும் மோசமான ஸ்கோர் இல்லை. இன்று 300, 350 மட்டுமே நல்ல ஸ்கோராகப் பார்க்கப்பட்டாலும், இது மோசமான ஸ்கோர் இல்லை. அதனால், இந்திய வீரர்கள் எந்தப் பதற்றத்தோடும் ஆடியிருக்க வேண்டியதில்லை. தங்களுடைய நேச்சுரல் கேமை ஆடியிருந்தாலே போதும். ஆனால் அப்படி ஆடினார்களா என்பதுதான் கேள்வி.

விஜய் சங்கர் அவுட்டான பிறகு, கோலி அவுட்டாவதற்கு முன்பு… 25 பந்துகள் பிடித்திருந்த இந்திய அணி, அதில் அடித்தது வெறும் 13 ரன்கள். பிரச்னை அதுவல்ல. அந்த 25 பந்துகளில் 13 பந்துகள் டாட் பால்கள். டாட் பால் ஆடுவது ஏதோ பெரிய விஷயம் இல்லாததுபோல் தெரியலாம். ஆனால், ஒரு அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது டாட் பால்கள்தான். கோலி அவுட்டான பிறகு தோனி டாட் பால்கள் ஆடியதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், நம்பர் 1 பேட்ஸ்மேன் 100+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஜாலியாக ஆடிக்கொண்டிருக்கும்போது, எதிர்முனையில் அவ்வளவு நெருக்கடியோடு ஆடியிருக்கவேண்டிய அவசியம் இல்லை.

Dhoni
Dhoni

ரஹ்மத் ஷா ஓவரில் 3 டாட் பால்கள். ரஷீத் கான் வீசிய 28-வது ஓவரின் முதல் பந்தில் சிங்கிள் எடுக்கிறார் கோலி. அடுத்த 5 பந்துகளும் டாட் பால்கள். அந்த ஓவரின் மூன்றாவது பந்து மட்டுமே மிகவும் கடினமான ஒன்று. தடுத்தாடவேண்டிய ஒன்று. மற்ற 4 பந்துகளுமே ரன் அடிக்கக் கூடியவை. குறைந்தபட்சம் சிங்கிள் ஆடக்கூடியவை. ஆனால், தோனி செய்யவில்லை. பெரிய சுழலே இல்லாமல், ஆறாவது ஸ்டம்ப் லைனில் வரும் பந்தெல்லாம், எந்த பேட்ஸ்மேனையும் கட் ஷாட் அடிக்கத் தூண்டும். ஆனால், அதை தோனி அடிக்கவே முற்படவில்லை. அந்த ஓவரைக் கடந்துபோகவே முயற்சி செய்தார்.

29-வது ஓவர்… நபி. தோனி பிடித்த 4 பந்துகளில் 3 டாட் பால்கள். இப்படி டாட் பால்களாகவே ஆடிக்கொண்டிருக்க, ஓரளவு டீசன்ட்டாக இருந்த ரன்ரேட் அப்போதுதான் 4.50 என குறையத் தொடங்கியது. அதுதான் ஆப்கானிஸ்தான் பௌலர்களின் நம்பிக்கையை அதிகரித்துக்கொண்டே இருந்தது. கோலியின் மீது நெருக்கடியை அதிகரித்தது அதுதான்.

Vijay Shankar
Vijay Shankar

விஜய் சங்கர் இப்படி சிங்கிள் எடுப்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் அவர் மீதான நெருக்கடி குறையும். அதைவிட முக்கியம், அதுதான் கோலியின் மீதான நெருக்கடியைக் குறைக்கும்

மைக்கேல் கிளார்க்

21-வது ஓவரில் விஜய் சங்கர் சிங்கிள் அடித்தபோது, அப்போது வர்ணனையில் இருந்த மைக்கேல் கிளார்க் இப்படிக் கூறினார். ஒரு சிங்கிளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வார்த்தைகள் அவை. ரன்ரேட் சீராக உயர்வதற்கும், எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன் நெருக்கடியை உணராமல் இருப்பதற்கும் ஸ்டிரைக் ரொட்டேட் செய்வது மிகவும் முக்கியம்.

ரோஹித் – தவான் கூட்டணியின் வெற்றிக்கும், சில சமயம் அது சொதப்புவதற்கும் காரணமே இதுதான். ஒருபக்கம் தவான் ஆடுவதால், ரோஹித்தால் தன்னுடைய நிதான ஆட்டத்தை ஆடமுடிகிறது. சில போட்டிகளில் சிங்கிள்கள் எடுக்க முடியாத சூழலில், ரோஹித் அவ்வளவாக ரன் எடுக்காத பட்சத்தில், தவானின் நெருக்கடி அவர் விக்கெட்டைக் காவு வாங்கும். பார்ட்னர்ஷிப்பில் முக்கியமான விஷயமே, ஆட்டத்தின் போக்குக்கு ஏற்ப ஒருவரையொருவர் எப்படி ‘complement’ செய்கிறார்கள் என்பதுதான்.

Rohit - Rahul
Rohit – Rahul

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா சிறப்பாகத் தொடங்கியதற்கு காரணம் இந்த complementing தான். ராகுல் புதிய ஓப்பனர் என்பதால், தான் ஆடும் பாணியில் அவரை ஆடவிட்டு, தவான் ஆடும் ஆட்டத்தைக் கையில் எடுத்தார் ரோஹித். அதுதான் ராகுல் மீதான நெருக்கடியைக் குறைத்தது. சரியாக complement செய்யாத எந்த கூட்டணியிலும் எந்த பேட்ஸ்மேனாலும் நிலைத்து ஆடமுடியாது. இந்தப் போட்டியிலும் இதுதான் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

தோனி அங்கு ஸ்டிரைக் ரொட்டேட் செய்யவில்லை. அது கோலியின் மீது கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கடியை அதிகரித்தது. கோலி ஸ்டிரைக் ரொட்டேட் செய்தால், தோனியால் டாட் பால்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. வேறு வழியில்லை. ரன்ரேட்டை உயர்த்த பவுண்டரிகள் வேண்டும். 31-வது ஓவரின் முதல் பந்து… அதுவரை பெரும்பாலும் ஃப்ளிக் செய்துகொண்டிருந்த கோலி, ஆஃப் சைட் பவுண்டரியை டார்கெட் செய்கிறார். பலமாக அடிக்கிறார். ஆனால், சிங்கிள். நான் ஸ்டிரைக்கர் எண்டுக்கு வந்தவர், கத்தி தன் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். அதே ஓவரின் மூன்றாவது பந்து.. மீண்டும் பவுண்டரிக்கு முயற்சி செய்கிறார். கூடுதல் பௌன்ஸ். அவுட். அதே அதிருப்தியில் வெளியேறுகிறார் கோலி.

Virat Kohli
Virat Kohli

கோலியை அவுட்டாக்கியது அந்த அதிருப்திதான். ஆனால், அவரை அதிருப்தியாக்கியது, குறைந்துகொண்டிருந்த ரன்ரேட். அதற்குக் காரணம், தோனியின் டாட் பால்கள். பொதுவாக ஆங்கில வர்ணனையில் ‘He pressed the panic button’ என்று சொல்வார்கள். நேற்று இந்தியாவுக்கு பேனிக் பட்டன் அழுத்தியது, கோலியின் விக்கெட்டை வீழ்த்திய நபி அல்ல. அதற்கு முன்பே தோனி அதை அழுத்திவிட்டார். களமிறங்கியவுடனேயே அதன் அருகில் சென்று நின்றுவிட்டார்.

சச்சின் அதிருப்தி தெரிவித்தது அவர்கள் ஆடிய நோக்கத்தைப் பற்றித்தான். ஜாதவையும் குறை சொன்னவர், “நம் மிடில் ஆர்டர் வெகு நாட்களாக இப்படியொரு தருணத்தைப் பார்க்கவில்லை” என்பதையும் சொல்லத் தவறவில்லை. இருந்தும் அவருக்கு அதிருப்தி அளித்தது, அங்கு ஆடியது தோனி எனும் அனுபவசாலி என்பதுதான். ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்த ஒரு பேட்ஸ்மேன், சிங்கிள் எடுக்கவேண்டும் என்ற நோக்கமே இல்லாமல் விளையாடியதுதான் இங்கு பிரச்னை.

Dhoni
Dhoni

முந்தைய பந்தில் பவுண்டரி அடிக்காத விரக்தியில்தான் கோலி அடுத்த பந்திலும் பவுண்டரி அடிக்க முற்பட்டார். ஆனால், அந்த வேரியேஷனை எதிர்பார்க்காததால் அவுட்டாகிவிட்டார்

அணில் கும்ப்ளே

இந்திய அணியின் பேட்டிங் முடிந்தபிறகு நடந்த போஸ்ட் இன்னிங்ஸ் ஷோவில் இப்படிச் சொன்னார் கும்ப்ளே. கோலி ஆடிய ஷாட்டின் அறிவியல் பற்றிப் பேசினார் லட்சுமண். தோனி – ஜாதவ் ஆடிய வேகத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசாமலேயே கடந்தது அந்த அனாலிசிஸ் கூட்டணி. கும்ப்ளேவைப் போல் ‘கோலியின் விக்கெட்டுக்குக் காரணம் இதுதான்’ என்ற இடத்திலேயே நிறுத்திக்கொண்டால் பிரச்னை இல்லை. கும்ப்ளே நல்லவர். ஆனால், அந்த விரக்திக்கான காரணம் பற்றி சச்சின் பேசினால் இங்கு பிரச்னை. சச்சினுக்கு கிரிக்கெட் தெரியவில்லை என்கிறார்கள். இங்கு சொல்வதற்கு ஏதுமில்லை..!


Leave A Reply

Your email address will not be published.